🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவைக்குப் போட்டியாக களமிறங்கும் ஈரோடு?

2006-இல் தொடங்கப்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், படிப்படியாக வளர்ந்துகொண்டு, சகோதர சமுதாய அமைப்புகள் மற்றும் சமுதாய தலைவர்களோடு நட்புறவையும், நல்லிணக்கத்தையும் பேணிக்காத்து வருகிறது. சங்கத்தின் பணிகளை மட்டும் பார்க்காமல், சமுதாய பிரச்சினைகளான இடஒதுக்கீடு, டிஎன்டி சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவகாரங்களிலும் வீரியத்தோடு போராடி பல வெற்றிகளில் தன் பங்களிப்பை செய்துவருகிறது.


பல ஆண்டுகளாக சங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்து வரும் தமிழகம் முழுவதுமுள்ள சொந்தங்கள், தங்களை முன்னிறுத்திக்கொள்ளாமல், முகம்காட்டாமல் பேருதவிகளை செய்து வருகின்றனர். மிகக்குறைந்த பட்ச நன்கொடையாக ரூ.50/- வழங்கியவர் முதல், பத்தாண்டுகளுக்கு முன் பெருந்தொகையாக ரூ.50000/- வழங்கியவர் ஆனாலும், அதற்கடுத்து ரூ.20000/- நன்கொடை வழங்கி "பர்பிள் கிளப்" உருவாகக் காரணமாக இருந்தவரானாலும் சரி, சங்கக் கட்டிடத்தை ஒட்டியுள்ள 5 சென்ட் நிலத்தை ரூ.25 லட்சம் விலைபேசப்பட்டு கடந்த மார்ச் மாதம் கிரையம் செய்யவேண்டிய சூழலில் போதிய பணத்தை திரட்டமுடியாமல் திண்டாடியபொழுது, ஒரு சில மணித்துளிகளில் இதோ பெற்றுக்கொள் 4 லட்சம் என்று உதவிக்கரம் நீட்டியவரானாலும், கேட்டபோதெல்லாம் உதவிய பல நல் உள்ளங்கள் தங்கள் முகம் மறைத்து உதவியதால் இன்று பெரும் பொருட்செலவில் முப்பெரும் விழாவினை நடத்தும் நெஞ்சுறுதியை பெற்றுள்ளோம்.

இதுவரை தனித்தனி நபர்களாக உதவிய சூழலின் பரிணாம வளர்ச்சியாக கிராம மக்கள் ஒன்று திரண்டு உதவிக்கரங்களை நீட்டத்தொடங்கியுள்ளனர். தமிழகத்திலேயே கம்பளத்தார் குறைந்த அளவில் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் முதன் முதலாக ஆனைமலை அருகேயுள்ள இராமச்சந்திராபுரம் கிராமத்தில் அரண்மனையார் ஆனந்தராஜா தலைமையில் திரண்ட சொந்தங்கள் முப்பெரும்விழாவிற்கு ரூ.50000/- வழங்கி புதிய பாதையை தொடங்கி வைத்தனர். இதன் விளைவாக கோவை மாவட்டத்திலுள்ள கம்பளத்தார் கிராமங்கள் தோறும் முப்பெரும்விழாவிற்காக தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

நேற்று வரை கோவை மாவட்டத்தில் மட்டும் சமுதாயமாக திரண்டு நன்கொடை வழங்கி வந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது. சத்தியமங்கலம் அருகேயுள்ள மாரனூர் கிராம உறவுகள் சம்பிரதாய முறைப்படி "பட்டக்காரர்" இல்லத்தில் ஒன்றுகூடி, ஒரு சில மணித்துளிகளில் ரூ.60000/- முப்பெரும் விழாவிற்காக நன்கொடை வழங்கியுள்ளனர்.  உள்ளாட்சி தலைவர்களை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த விழாவில், உள்ளாட்சித் தலைவர்கள் ஒன்று கூடி எடுக்க வேண்டிய முன்னெடுப்புகளை, சமுதாயப்பற்றால் தங்களுக்கு இந்த விழாவில் எந்த முன்னுரிமையும் இல்லை என்று தெரிந்த சாமானியர்கள் தங்கள் தோள்களில் பொறுப்பினை சுமந்து கொள்வது சாமானிய மக்கள் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர்களின் முகங்களைக்கூட நேரில் பார்த்திடாத சொந்தங்கள் பலர் ஒன்றுகூடி தோள்கொடுக்க முன்வருவது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் மாற்றங்கள் எளியவர்களாலேயே நடத்தப்படுகிறது என்பதை மெய்ப்பிப்பதுபோல் அமைந்துள்ள இந்த நிகழ்வின் மூலம் நிச்சயம் மக்கள் விரும்பும் மாற்றங்கள் நிகழும் என்பது உறுதி.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அனைத்து சொந்தங்களுக்கும் சமுதாய நலச்சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved