🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எல்லோரும் வந்தார்கள்! மாவீரனுக்கு மரியாதை தந்தார்கள்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரோடு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவன தலைவர் பி.வி.இராதாகிருஷ்ணன், நாமக்கல் வழக்கறிஞர் பழனிச்சாமி, கந்தவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


எடப்பாடியார் மரியாதை செலுத்திய செய்தி வெளியானவுடன் அரசியல் அரங்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்து பிற கட்சிகளின் சார்பில் யார் யார் எங்கெங்கு கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அருப்புக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் முன்னனி தலைவர்களான தொழிலதிபர் மணிவாசகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


மாநகர் மதுரையில் பலத்த ஆரவாரத்திற்கிடையே வருகைபுரிந்த இளம் தலைவரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக்கழக செயலாளருமான துரைவைகோ மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மாவீரன் கட்டபொம்மன் புகழ் ஓங்குக என்று வீரமுழக்கமிட்டார். மதுரை வந்த துரைவைகோவுடன் எம்.எல்.ஏக்கள் புதூர் பூமிநாதன், டாக்டர்.ரகுராம் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்களை மாநில இளைஞரணி துணைச்செயலாளரும், த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் இளைஞரணி செயலாளருமான பூப்பாண்டி, இராஜகம்பள (தொட்டிய நாயக்கர்) மஹாஜன சங்கத்தின் தலைவரும், மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான மாரையா ஆகியோர் வரவேற்று ஆளுயர மாலை அணிவித்தனர்.


இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டபடி மூத்த முன்னாள் அமைச்சர்கள் கே.டி.இராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ. செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார், இராஜன் செல்லப்பா உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்தனர். அதிமுக தலைமைக்கழகத்தில் நிரந்தர உத்தரவை பெற்றுத்தந்த கலாநிதி மற்றும் கண்ணன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான வாகனங்கங்களில் திரண்டிருந்த கம்பளத்தார் ஊர்வலமாக தலைமைக்கழக நிர்வாகிகளை சிலை அமைவிடத்திற்கு அழைத்துச்சென்று மாவீரனுக்கு மாலை அணிவிக்கச்செய்தனர். தலைமைக்கழக நிர்வாகிகளை காசிராஜன், கவுன்சிலர் சரவணன், ஊ.ம.தலைவர்கள் எர்ரையா, துரைராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


இதேபோல் கோவை மாவட்டத்தில் வழக்கத்தைவிட மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். வந்திருந்த அரசியல் கட்சித்தலைவர்களை திமுக சார்பில் மகாலிங்கம்,மாசிலாமணி, அதிமுக சார்பில் சிவசாமி, சிவா, பாஜக சார்பில் தர்மபிரகாஷ், செந்தில்நாதன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். வந்திருந்த தலைவர்களுக்கு கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் குணசேகர், செயலாளர் வெங்கடேஷ்குமார், இளைஞரணி குணசேகரன், கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ பண்ணாரி, திமுக மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான நல்லசிவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களை ஒன்றிய செயலாளர் சிவராஜ், பேரவை செயலாளர் பவுல்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் சின்னசாமி, நம்பிராஜ், வரதராஜ், விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

தூத்துக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு மாவீரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்தார். திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் அக்கட்சியின் நிர்வாகிகளோடு  மதுரை நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved