🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கரூரில் இராஜகம்பளத்தார் மீது தடியடி! தலைவர்கள் கடும் கண்டனம்.

கரூரில் பாஞ்சை பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேரணியாகச் சென்ற இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தமிழக அரசியல் கட்சிகளில் இந்த தடியடியைக்கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஒரே அரசியல் கட்சித் தலைவரான மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாட்டு விடுதலைக்காக வரி செலுத்த மாட்டேன் என்று உயிர் போகும் என்ற நிலையிலும் வெள்ளையரை எதிர்த்துப் போராடி, கடைசியில் தூக்குமரத்தில் உயிரைத் தியாகம் செய்தவர் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார்.

ஜனவரி 3ஆம் தேதி அவரது பிறந்தநாள் ஆகும். அந்த நாளில் தமிழகமெங்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் பேரணி நடத்தி, தேவராட்டம் ஆடி கொண்டாடுவது வழக்கம்.

இம்முறை கரூரிலும் அதேபோல பேரணியாகச் சென்று தேவராட்டம் ஆட முயன்ற இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது மன்னிக்க முடியாதது ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் அமைதி காத்து, தொடர்ந்து இந்தப் பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.

தடியடி நடத்திய காவல்துறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குக் காரணமான காவலர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தலைவர் வைகோ விளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, கம்பளத்தார் சமுதாய இளைஞர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதை கண்டிப்பதாகவும்,  இதற்கு காரணமான காவலர்கள் மீது தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தடியடி சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாவீரன் கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றுவந்த நிலையில், அருப்புக்கோட்டை, தொப்பளாக்கரை ஆகிய இடங்களில் சமூக விரோதிகள் சிலர், அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்தும், மலத்தை வீசியும் அவமரியாதை செய்துள்ளனர். அடுத்தடுத்த இச்சம்பவங்களால் ஏற்கனவே கம்பளத்தார் சமூக மக்களின் மனம் புண்பட்டுள்ள நிலையில், நேற்று கரூரில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

தமிழக அரசு, காவல்துறை, பிற சமூகங்கள் என அனைத்து தரப்போடும் என்றென்றும் அன்பு- பாசத்தோடு தாயாய், பிள்ளைகளாய் இணக்கமாகவும், அமைதியாகவும் வாழ்ந்துவரும் கம்பளத்தார் சமூகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தடியடி  எங்கள் சமூக மக்களின் மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் உடனடியாக கவனத்தில் கொண்டு, தடியடியில் ஈடுபட்ட  காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (03.01.2023) இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 264 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதனையொட்டி கரூரில் அமைந்துள்ள மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் பொருட்டு நூற்றுக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் பொதுமக்களும் இருசக்கர  வாகனங்களில் மரியாதை செலுத்த சென்றுள்ளனர்.

 அப்போது தமிழக காவல்துறை சிலரின் தூண்டுதலின் பேரில் மாலை அணிவிக்க சென்றவர்கள் மீது கடுமையான கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் காவல்துறையின் இந்த பொறுப்பற்ற வெறிச்செயலை விடுதலைக் களம் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து வருகிற  திங்கட்கிழமை 09/01/2023 அன்று காலை 10 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைக் களம் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கைகளை அவர்கள் மீது  மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துவதோடு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் இன்னும் பல்வேறு வடிவங்களில் விடுதலைக் களம் கட்சியின் சார்பில் தமிழக முழுதும் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved