🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒரு சதவீதம் சமுதாயவரி! தலா 25000 செலுத்திய சகோதரிகள்!

ஜனவரி'29-ஆம் தேதி தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும்விழா-வினை வெற்றிகரமாக நடத்திட இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகள், சமுதாய நலன் விரும்பும் தன்னார்வலர்கள் என மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினர் பம்பரமாக சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றனர். 

இந்திய வரலாற்றில் நெடுங்காலம் அதிகாரத்தில் கோலோச்சிய சமூகங்களில் ஒன்றான கம்பளத்தார் சமூகம், ஜனநாயக இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபின், சமுதாயத்திற்கும்,  அதிகாரத்திற்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே உள்ளது.

ஒட்டுமொத்த சமூகமும் அரசியல் கட்சிகளின் கருத்தியலில் சிக்குண்ட நிலையில், அதிகாரமற்ற சமுதாய அமைப்புகளின் பின்னால் அணிவகுப்பதற்கு மக்களிடம் பெரும் தயக்கம் நிலவுகிறது. 

ஒவ்வொரு சமுதாயமும் அரசியல் கட்சிகளிடம் தங்கள்  மக்களை பறிகொடுத்ததின் மூலம் பெரும்பாலான சமுதாய அமைப்புகள் வெறுமனே லெட்டர் பேட் இயக்கங்களாக மட்டுமே உள்ளன.

இந்த சவாலான சூழலில், சமுதாய மறுகட்டமைப்பு என்பது பெண்களின் பெரும்பங்களிப்பும்,  துணையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நம்பிக்கையாக உள்ளது.

நீண்டகால செயல் திட்டமும், தொடர் முயற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் அதற்கான பொருளாதார கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கான ஒரு புதிய முயற்சியாக படித்து நன்கு வேலையிலுள்ள இளம் தலைமுறையினர் மற்றும் தொழில்துறையினர்கள் "சமுதாயவரி" செலுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். முதற்கட்டமாக நிர்வாகிகளின் குடும்பத்தினர்களிடமிருந்து இம்முயற்சி தொடங்கப்படுகிறது. 

கம்பளத்தார் சமுதாயத்தில் முதன்முதலாக கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலசங்கம் சார்பில் பொள்ளாச்சி அருகே நரசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி எர்ரப்பகவுண்டர் பெயர்த்தியும் மென்பொருள்துறை பொறியாளருமான செல்வி.சுஜித்ரா நஞ்சுண்டசாமி,  மண்ணூர் புவனேஷ்வரி கோவிந்தராஜ் தம்பதியரின் மகளும், மென்பொருள்துறை பொறியாளருமான செல்வி.மிருதுளா கோவிந்தராஜ் ஆகியோர் ஆண்டு வருமானத்தில் ஒரு சதவீதத்தை சமுதாய வரியாக தலா ரூ.25000/- வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர். 

சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்க பொதுச் செயலாளரின் சகோதரிகள் மகள்களான இவர்கள் இருவரும் இன்று (16.01.2023) மாலை நடைபெற்ற நிகழ்வில் இதற்கான காசோலையை கூட்டாக தொழிலதிபர் திருவாசகமணி, பர்பிள் கிளப் உறுப்பினர் நஞ்சுண்டகுமார், ஆதீஸ்வரன், ஜெகதீஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் மூத்த தலைவர் முத்துசாமி நாயக்கர், ஊர் மணியகாரர் புவனேஷ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved