🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேடி அழைத்து தீஞ்சுவை விருந்தளித்த திண்டுக்கல்!

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சென்னை மாவட்ட அளவிலான சிறிய அமைப்பாக இயங்கி வந்தாலும், பிற மாவட்டங்களிலுள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் ஆளுமைகளோடு நல்லுறவை வளர்த்து வந்துள்ளது.  இந்த நட்பின் பயனாக பல மாவட்டங்களில் தானாக முன்வந்து முப்பெரும்விழா பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள சமுதாய உறவுகள், தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து கிராமங்கள் தோறும் பயணித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியும், நிதி பெற்றும் விழாவை வெற்றிகரமாக நடத்திட உதவி வருகின்றனர். 


இதில் திண்டுக்கல் மாவட்டம் மட்டும் விதிவிலக்காக இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தோடு பெரிய அளவில் தொடர்பின்றி நேற்றுவரை இருந்துவந்த குறையை இந்த முப்பெரும்விழா போக்கியுள்ளது.


சென்னையில் நடைபெரும் முப்பெரும் விழா குறித்த தகவல்களை தெரிந்துகொண்ட திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் வட்டார உறவுகள், எங்களை ஏன் புறக்கணித்து விட்டீர்கள் என்று உரிமையோடு கோபித்துக்கொண்டு, கடந்த ஒருவாரமாக நீங்கள் ஒருமுறையாவது நேரடியாக வரவேண்டுமென்று அழைத்தவண்ணம் இருந்தனர். 


இந்த அன்புக்கட்டளையை தட்டவும், தவிர்க்கவும் முடியாமல் கடும் நேர நெருக்கடிக்கு மத்தியில் காணும் பொங்கலன்று (17.01.2023) காலை கோவை மாவட்ட நிர்வாகிகள் திரு.முத்துசாமி நாயக்கர், வெங்கடேஷ்குமார், புஷ்பராஜ் ஆகியோரோடு சென்றிருந்தோம். 

கொல்லபட்டி ஊராட்சி மன்ற மு.தலைவர்களான திரு.இராஜேந்திரன், திரு.முத்துராஜ் ஆகியோரோடு திரு.சின்ன ரங்கசாமி, திரு.சுப்புராஜ் மற்றும் நாமக்கல் அருகே கிராமத்திலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு வந்துசேர்ந்திருந்த திரு.சின்னசாமியும் எங்களுக்காக காத்திருந்தனர்.


ஒரேநாளில் எல்லோரையும் பார்க்கமுடியாது என்று தெரிந்திருந்தாலும்,  எங்கள் மாவட்ட உறவுகளையும் மதித்து வந்ததாக வரலாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே கட்டாயம் வந்தாக வேண்டுமென்று உரிமையோடு அன்புக் கட்டளையிட்டதாக தெரிவித்தனர். 

பழனி, ஒட்டன் சத்திரம் ஆகிய பகுதிகளில் பதினைந்து பேர் வரை மட்டுமே பார்க்க முடிந்தது. இதிலும் ஒருசிலர் தவிர்த்து, போகும் வழியில் பொது இடங்களில் சந்தித்ததே அதிகம். 


சந்தித்த அனைவரும் உரிமையோடு அழைத்தவர்களுக்கு இணையாக, அன்போடு வரவேற்று உபசரித்ததோடு முப்பெரும்விழாவிற்காக நிதியுதவி வழங்கியது மேலும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. இதிலும் குறிப்பாக எந்தவித முன்னறிவிப்பின்றி ஆயக்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சுதாமணி கார்த்திகேயன் இல்லம் சென்றபோது, எங்கள் வருகையை சற்றும் எதிர்பார்க்காதவர், வரவேற்று அமரவைத்த அடுத்த சில வினாடிகளில் மலருக்கான நிதியை வழங்கிய பின்னரே தேநீர் வழங்கினார். 


பத்தாண்டு காலம் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆயக்குடி நகரச்செயலாளராக பணியாற்றி கட்சியை வலுவாக வைத்திருந்தவரும், 2021-சட்டமன்ற தேர்தலில் கழக வேட்பாளருக்காக கடுமையாக உழைத்து, மாவட்டத் தலைமையின் முழுமையான அன்பையும் பெற்றிருந்த நண்பர் கார்த்திகேயன், ஆளும் கட்சியில் பெரிய பதவிகளை அலங்கரிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில், கொரோனா காலத்தில் திடீரென மறைந்தது குடும்பத்திற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே பேரிடியாய் அமைந்தது. 


கடுமையான இந்த சோதனையைத் தாண்டி,  அரசியலில் தனது கணவரின் வெற்றிடத்தை நிரப்பியதோடு, விவசாயக் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கிப்படிக்கும் மகன், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் என்ற குடும்பபாரத்தையும் சுமந்துகொண்டு, தனியொரு பெண்ணாக தேர்தல் களம் கண்டு வெற்றிவாகை சூடி, பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் திறம்பட பணியாற்றி வரும் திருமதி.சுதாமணி,  சமுதாயப்பணிக்கும் குறைவைக்காமல்,  கேட்காமலேயே நிதியுதவி வழங்கிய பொறுப்பும், கடமை உணர்ச்சியும் இன்றைய பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.


காலை 10 மணிக்கு துவங்கிய சுற்றுப்பயணம் மாலை 7 மணியளவில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட அதிமுக இணைச்செயலாளர் திரு.செல்வேந்திரன் அவர்களை சந்தித்ததோடு திண்டுக்கல் மாவட்ட சுற்றுப்பயணம் நிறைவுபெற்றது. சங்கம் தொடங்கிய நாள் முதல் திண்டுக்கல் மாவட்ட உறவுகளோடு சங்கத்திற்கு குறிப்பிடும்படியான உறவின்றி இருந்து வந்த குறையை முப்பெரும்விழாவையோட்டிய சுற்றுப்பயணம் போக்கியது மிக்க மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்தது.

பொதுச்செயலாளர் டைரி குறிப்பிலிருந்து...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved