🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரின் மரபணுவில் கண்ணியம், கட்டுப்பாடு! கலைவாணர் அரங்கில் உலகறியச் செய்வோம்!

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி-29) தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் சூழல் முப்பெரும் விழாவிற்கு வருகைதரும் சமுதாய சொந்தங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இராஜகம்பளத்தார் வரலாற்றில் நீண்டகால இடைவெளிக்குப்பின் எல்லோரும் ஒன்றுகூடி, சமூக, அரசியல், பொருளாதார மாற்றத்தை கொண்டுவரும் முயற்சியின் தொடக்கமாக அமையப்போகும் முப்பெரும்விழாவில், காலம் காலமாக களத்து மேட்டிலும், கழனியிலும், கால்நடைகளின் பின்னாலும் வாழ்க்கையை கழித்த கம்பளத்தார்கள், தலைநகர் சென்னையில் சங்கமிக்க இருப்பதைக்காண நாட்களை எண்ணி காத்திருக்கிறேன்.

பொதுவாக இராஜகம்பளத்தார்கள் என்றால் அமைதியானவர்கள், ஒழுக்கமானவர்கள், கண்ணியமானவர்கள், சுயகட்டுப்பாடு மிக்கவர்கள், நம்பிக்கைக்குறியவர்கள் என்று பொதுச்சமூகம் தொடங்கி அரசு வரையுள்ள எண்ணம். இதுதான் கலம்காலமாக நம் இயல்பாகவும் இருந்துவந்துள்ளது. நம்முன்னோர்கள் ஏற்படுத்திக்கொடுத்த இந்த நற்பெயருக்கு சமீப காலம் வரை எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் சமீப காலங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களின் எழுச்சிக்குப்பின், குறிப்பாக மாவீரன் பிறந்த நாள் நிகழ்ச்சிகளின்போது சுயகட்டுப்பாடற்ற ஒருசிலரால் ஏற்படும் விரும்பத்தகாத சம்பவங்கள் நம் சமூகத்திற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை  என்பதே சமுதாய பெரியவர்கள் தொடங்கி, அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளிலுள்ள நம் தலைவர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது.

தனி நபராக மிகுந்த ஒழுக்கமுடையவராக அடையாளம் காட்டப்படுபவர்கள் கூட கூட்டமாக சேரும்பொழுது தன் இயல்பையும், கட்டுப்பாட்டையும் இழந்து, சட்டநெறிமுகறைகளையும், காவல்துறையின் நிபந்தனையையும் மீறி செயல்படுவது ஆண்டாண்டுகாலமாக நம் சமுதாயத்தின் மீதான பொதுசமூகத்தின் கருத்துக்கு எதிராக அமைந்து விடுவதோடு, அவர்களின் எதிர்காலத்திற்கும் எதிராக, சரிசெய்ய முடியாத சேதாரமாக ஆகிவிடுகிறது. சமீபகாலமாக நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களால், சமுதாய பொதுநிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய சமுதாய அமைப்புகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றன. இது சமுதாய வளர்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

சமுதாயத்தில் நிலவும் இந்தப்போக்கினை மாற்றியாக வேண்டியது அனைவரின் கடமை. இந்நிலையில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் பிற தோழமை அமைப்புகள், சமுதாய பெரியோர்கள், அன்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆதரவோடு நடத்தும் முப்பெரும்விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் தமிழக அரசுக்கு சொந்தமானது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழும் பெறவேண்டியுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடுகள் மிகுந்த அரங்கில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள வருபவர்களின் நோக்கம் சமுதாயத்தை பெருமைப்படுத்துவதாகவும், ஒட்டுமொத்த அரசியல் கட்சியினர், ஊடகத்தினர், உளவுத்துறையின் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்க வேண்டும். தமிழக அமைச்சர்பெருமக்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிற மாநில அமைச்சர் பெருமக்களும், தலைவர்களும் கலந்துகொள்ளும் இவ்விழாவுக்கான பாதுகாப்பும், கட்டுப்பாடும் முழுமையாக தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துவிடுவதால், அனைவரும் விழாவிற்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் விழாவிற்கு வாகனங்கங்களில் வருபவர்கள் அனுமதிக்கப்ப அளவு நபர்களோடு, கொடி, பேனர்  போன்றவை தவிர்த்து, வாகனங்களில் தொங்கியபடியோ, கூச்சலிட்டவாரோ வராமல்,  அமைதியாக போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதால் இளைஞர்கள் கட்டுப்பாடோடும், காவல் அரணாகவும் இருந்து உரிய பாதுகாப்பும், பெண்கள், வயதானவர்கள் இருக்கையில் அமர முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, மது அருந்திவிட்டு வருவதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தவிர, மேடை, முன்வரிசை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்த்து, யாரும் முண்டியடிக்கவோ, வாக்குவாதம் செய்யவோ கூடாது என்பது உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்.

முப்பெரும்விழா கண்ணியமாகவும், கட்டுப்பாடோடும் வெற்றிகரமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved