🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாமன்னர் திருமலை நாயக்கர் 440-வது ஜெயந்தி!

அக்காலத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களுக்கும்-மதுரை நாயக்க மன்னர்களுக்கும் இடையே பலமான பகை இருந்தது.தஞ்சை நாயக்க மன்னர்கள் டேனிஷ் எனும் டென்மார்க் மன்னருக்கு ஆதரவாக இருந்தனர். மதுரை நாயக்க மன்னர்கள் பரம்பரையின்,மன்னர் திருமலை நாயக்கர் போர்த்துகீசியர்களுடன் நல்ல உறவை பேணி வந்தார்.

போர்த்துகீசியர்களுக்கும்-டென்மார்க் ஆட்சியாளர்களுக்கும் இடையில் கிழக்கிந்திய நாடுகளுடன் வணிகம் செய்வது தொடர்பாக ஏற்கனவே கடுமையான முன் பகை இருந்தது.இதனால் மன்னர் திருமலைக்கும் டென்மார்க் பகையானது. போர்த்துகீசியர்களுக்கும்-டென்மார்க் படைகளுக்கும் இடையே சண்டை மூண்டது.சண்டை தீவிரமான நேரத்தில்,தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் இருந்த திருச்செந்தூர் முருகன் கோவிலை டென்மார்க் படைகள் கைப்பற்றிக் கொண்டனர்.அந்த கோவிலைப் பலப்படுத்தி அதை தங்கள் படை வீடாக மாற்றிக் கொண்டனர்.

கோவிலை மீட்க உள்ளூர் மக்கள் டென்மார்க் படைகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்விகளில் தான் முடிந்தன. எனவே அவர்கள் மன்னர் திருமலை நாயக்கரின் உதவியை வேண்டி சென்றனர். 22-பிப்ரவரி-1649 ல் மன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக முதலியார் பிள்ளை மரக்காயர் என்பவர்,டென்மார்க் கவர்னர் மேய்ட்சுக்கர் என்பவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

"கோவிலை விட்டு நாங்கள் வெளியேற வேண்டுமானால் எங்களுக்கு ஒரு லட்சம் ரீல்கள் பணம் வேண்டும்..." என்று டென்மார்க் கவர்னர் நிபந்தனை விதித்தார். இந்தத் தகவல் அந்த சமயத்தில் பிஜப்பூர் சுல்தான்களுடன் போர்களத்தில் இருந்த மன்னர் திருமலை நாயக்கருக்கு தெரிவிக்கப்பட்டது. கடுங்கோபம் கொண்ட மன்னர் டென்மார்க் கவர்னரின் நிபந்தனையை ஏற்கவில்லை.

25 மார்ச் 1649 ல்,பிஜப்பூர் சுல்தான்களுடனான போரில் வெற்றி பெற்று விட்டு,பெரும் படைகளுடன் மன்னர் திருமலை நாயக்கர் நேராக திருச்செந்நூருக்கு தான் வருகிறார் என்ற தகவல் டென்மார்க் கவர்னருக்கு சென்றது. மன்னருடன் மோதினால் உயிர் தப்ப முடியாது என்ற பயத்தில் டென்மார்க் படைகள் திருச்செந்தூர் கோவிலை காலி செய்து கடல் வழியாக தப்பி ஓடின.அப்படி ஓடுகையில் திருச்செந்தூர் கோவிலின் மூல விக்கிரகத்தையும்,உற்சவ மூர்த்தியையும் அவை தங்கத்தால் செய்யப்பட்ட சிலைகள் என்று நினைத்து அவற்றை தங்களுடன் இலங்கைக்கு எடுத்துச் சென்றனர். 

1650 ஜனவரி தொடங்கி ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் மன்னர் திருமலை நாயக்கர் சார்பில் அவரது அரசவையின் முக்கிய அமைச்சரான வடமலையப்ப பிள்ளை,காயல்பட்டினம் பகுதியை நிர்வகித்து வந்த நாராயண முதலியார் போன்றோர்களுடன் சேர்த்து உள்ளூர் இஸ்லாமிய மக்களையும் இணைத்துக் கொண்டு கீழக்கரையில் இருந்து ஒரு கப்பல் இலங்கை சென்று டென்மார்க் கவர்னருடன் பேச்சுவார்த்தை நடத்தி,திருச்செந்தூர் முருகன் சிலையை மீட்டு வந்ததாக செல்கிறது வரலாறு.திருச்செந்தூர் முருகன் கோவிலின் சிலையை பத்திரமாக கொண்டு வந்து மீண்டும் கோவிலில் வைத்து வழக்கம் போல பூசைகள் நடக்கத் தொடங்கின.

சூரன் வதம்,தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் களைகட்டின. இப்படியான ஒரு தைப்பூசம் நாளில் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலின் சிலையை மீட்டுக் கொண்டு வந்த மன்னர் திருமலை நாயக்கரும் பிறந்தார்.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் பரம்பரையில் ஏழாவது மன்னனாக,கி.பி1584 ல், தைப்பூசம் நன்நாளில் பிறந்தவர் தான், திருமலை சவுரிராஜ நாயனு அய்யலு என்ற இயற்பெயர் கொண்ட மன்னர் திருமலை நாயக்கர். மதுரை நாயக்க வம்சத்தில் 36 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் திருமலை நாயக்கர். விஜயநகர பேரரசில் இருந்து விடுவித்து தன் அரசை தனிப்பட்ட சுதந்திர அரசாக முதன் முதலாக அறிவித்தது மன்னர் திருமலை நாயக்கர் தான்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தொடங்கி,ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்,மடவார்வளாகம் வைத்தியநாத ஸ்வாமி கோவில் என பல கோவில்களை புனரமைத்து திருப்பணிகள் செய்து தந்தார். மதுரையைச் சுற்றியிருந்த நீர் நிலைகளை எல்லாம் தூர்வாரி சீரமைத்து விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியும்,மக்களுக்கு குடிநீரும் கிடைக்க வழிவகை செய்தார்.

இந்தப் பணிகள் அவரது ஆட்சிக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தடையற நடந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையிலான உறவுமுறை மிக வலுவடைந்தது.இஸ்லாமிய பெருமக்கள் பள்ளிவாசல் கட்டிக்கொள்ள பல இடங்களை கொடையாகத் தந்தார்.

மன்னர் திருமலையின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு கலை,இலக்கியங்களில் உச்சத்தில் இருந்தது. கலைகளில் பெரும் ஆர்வம் கொண்ட திருமலை நாயக்கர் தன் ஆட்சிக் காலத்தில் தான் வசிப்பதற்காக தன் தலைநகர் மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு அரண்மனையைக் கட்ட எண்ணினார்.அவரது எண்ணத்தில் இருந்த கற்பனைக்கு இத்தாலிய கட்டிடக் கலை வல்லுனர் ஒருவர் வடிவம் தந்தார்.

அது தான் இன்றைக்கு மதுரையில் இருக்கும் திருமலை நாயக்கர் அரண்மனை. அந்த அரண்மனையின் உண்மையான பெயர் "ரெங்க விலாசம்".  இந்த அரண்மனை இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பிரம்மாண்டமாக இருந்தது.காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்து இப்போதிருக்கும் இந்த அரண்மனை மட்டுமே எஞ்சியுள்ளது.

ரெங்க விலாசம் அரண்மனையைப் போன்றே மற்றொரு அரண்மனை ஸ்ரீ வில்லிப்புத்தூரிலும் திருமலை மன்னர் கட்டியிருக்கிறார்.அங்கே தான் பல வருடங்களாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இயங்கியது. இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்ட மன்னர் திருமலையின் ஆட்சிக் காலத்தில் தான் குமரகுருபர சுவாமிகளின் மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ்,கந்தன் கலி வெண்பா,மதுரைக் கலம்பகம் மயிலை கலம்பகம் போன்ற படைப்புகள் இயற்றப்பட்டன.

நபிகள் நாயகத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த இஸ்லாமிய இலக்கிய நூலான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர்,திருமலை நாயக்கரின் காலத்தில் வாழ்ந்தவர் தான். மன்னர் திருமலையின் காலத்தில் தான் சங்க இலக்கியங்களின் அகப்பொருள் மரபுகளான தூது,அந்தாதி,உலா,மாலை,கோவை போன்ற சிற்றிலக்கியங்கள் செழித்து வளர்ந்தன.அவற்றை இயற்றிய புலவர் பெருமக்கள் பெரிதுமாக கெளரவிக்கப்பட்டனர்.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் முதன் முதலில் நெடுஞ்சாலையை அமைத்தவர் ராணி மங்கம்மா என்றாலும் அதற்கு விதை போட்டவர் மன்னர் திருமலை. இப்படி கலை, இலக்கியங்களின் ரசிகனாக, கட்டிடக் கலையின் நாயகனாக, தன் ஆட்சிக் காலத்தில் மக்கள் போற்றிய மன்னனாக வாழ்ந்து, அவர்கள் மனங்களை ஆண்ட, தைப்பூச நாயகன் மன்னர் திருமலை நாயக்கரின் 440 வது பிறந்தநாள் விழா இன்று.....

இந்த நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

ஓங்குக மன்னர் திருமலையின் புகழ்......

கட்டுரையாளர்: G Mohanraju முகநூல் பதிவு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved