🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தைப்பூச தேரோட்டத்தில் மண்டபக்கட்டளை உரிமை பெற்ற இராஜகம்பளத்தார்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்ற சைவ தலங்களில் ஒன்றாகும். இங்கு சிவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் இது 208 வது தேவரத்தலம் ஆகும். இந்த ஊரின் புராணப்பெயர் திருக்கொடிமாடச் செங்குன்றூர் ஆகும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் 4வது தலமாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.

பலநூற்றாண்டு பெருமைமிக்க இக்கோவில் தேரோட்டம் கடந்த ஐம்பத்தி ஓராண்டு காலம் ஓடாமல் இருந்து வந்தது. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபு பொறுப்பேற்றுக்கொண்டபின் தமிழகத்தில் நானூறுக்கும் மேற்பட்ட கோவில்கள் இதுவரை புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும், கோவில் தேரோட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஆறுமுகசாமி திருக்கோவில் தேரோட்டமும் அரைநூற்றாண்டுகாலம் ஓடாமல் இருந்துவந்தது. தற்போது இந்துசமய அறநிலையத்துறையின் முற்சியால் தைப்பூச தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியோடு இணைந்து இராஜகம்பளத்தார் சமுதாயம் பெருமைகொள்ளும்படி மற்றொரு சம்பவமும் நடந்தேறியுள்ளது. அதன்படி கடந்த 28.01.2023 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச தேர்விழாவின் மூன்றாம் நாளான 30.01.2023, திங்கக்கிழமை அன்று மாலை 6 மணி முதல் 8 மணிவரை இராஜகம்பள தொட்டியநாயக்கர் சமுதாய மண்டபக் கட்டளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அர்த்தநாரீசுவரர் கோவில் வரலாற்றில் இதுவரை இராஜம்பளத்தாரின் மண்டபக்கட்டளைக்கான வாய்ப்பு இல்லாமல் இருந்துவந்த நிலையில், திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.மதுரா செந்தில் அவர்களின் உதவியோடு திருச்செங்கோடு வாழ் கம்பளத்தார் இந்த உரிமையை பெற்று தங்கள் இருப்பை அந்த மண்ணில் நிலைநிறுத்தியுள்ளனர்.

அர்த்தநாரீசுவரர் கோவில் தேரோட்ட மண்டபக்கட்டளை உரிமையை பெறுவதற்கும், அதற்கான வைப்புத்தொகையை அரசுக்கு செலுத்துவதற்கும் சமுதாய அக்கறையும், பற்றும்கொண்ட திருச்செங்கோடு திரு.சரவணன், திரு.தாமரைச்செல்வன், திரு.அப்பாவு,திரு.பிரபாகரன், திரு.கதிர்வேல், திரு.ரமேஷ், திரு.மயில்சாமி, திரு.முருகேசன், திரு.தமிழ், திரு.நாகராஜ், திரு.வெங்கடாச்சலம் உள்ளிட்ட சிறுகுழுவினர் மேற்கொண்ட முயற்சிக்கு சமுதாய மக்கள் பெருமளவு உதவிசெய்தனர். இதன் மூலம் ஒரே வாரத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டு மண்டபக் கட்டளை தொடர்ந்து வருடம் தோறும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தாங்கள் வாழும் மண்ணில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தில் மண்டபக்கட்டளை நடத்த அனுமதிபெற்று காலத்தால் அழியாத சிறப்பை பெற்றுள்ள திருச்செங்கோடு வாழ் இராஜகம்பளத்தாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved