🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அடுத்த தலைமுறையை பாதிக்கும் மத்திய பட்ஜெட்! சமூகநீதி கூட்டமைப்பு விளாசல்

மத்திய அரசின் நிதிநிலை குறித்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 260 சமுதாயங்கள் இணைந்த சமூகநீதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை.

இந்திய அரசியலமைப்புச்சட்டம் சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைக்கும் உயரிய நோக்கோடு உருவாக்கப்பட்டது. 1990வரை அந்த இலட்சியப்பாதையிலேயே பயணப்பட்டோம். அந்த ஆண்டு செயற்கையாக ஏற்பட்ட அன்னிய செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க ஐஎம்எப் இடம் கடனுக்காகக் கையேந்தியபோது, நம்மீது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்ளை லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட பொருளாதாரக்கொள்கை மெல்லமெல்ல திணிக்கப்பட்டது. இது யாருடைய சீரிய திட்டமுமல்ல, கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கட்டளை. அதை அப்படியே இன்றும் நாம் கடைப்பிடிக்கின்றோம். 

விளைவு 40 ஆண்டுகளாக நாம் உருவாக்கி வைத்திருந்த பல பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது. அதையே வளர்ச்சி என்றார்கள். உண்மையில் யாரும் எந்த ஆணியையும் பிடுங்காமலிருந்தாலே நாடு நல்ல வளர்ச்சி அடைந்திருக்கும். 1980 முதல் 1989 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியச் சராசரி வளர்ச்சி விகிதம், 5.7%. எந்த புதியபொருளாதாரக்கொள்கையும் செயல்படுத்தப்படவில்லை. 1990 முதல் 1999 வரையிலான சராசரி வளர்ச்சி விகிதம் 6.7% மட்டுமே. இதுவும் கொள்கையால் வந்ததல்ல, கணினித்துறையில் கிடைத்த வாய்ப்பு, ஊதியக்குழு ஊதியத்தை உயர்த்தியதால் கட்டுமானத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி இவையே இந்த இயல்பான வளர்ச்சிக்குக் காரணம். இன்று நாம் 6% வளர்ச்சியை இலக்காக வைத்துள்ளோம். இதற்கா பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றோம். ஒட்டுமொத்த வளர்ச்சி இப்படியென்றால் விவசாயத்துறையில் கடந்த 70 ஆண்டுகளாகச் சராசரியாக 3.5% வளர்ச்சியைத் தாண்டவில்லை. வறுமையிலும் கடன்சுமையிலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளும் கணக்கில் வராமலே மாண்டுபோன கோடிக்கணக்கான ஏழைஎளியேரைப் பற்றி பேச இங்கு நாதியில்லை.

பொருளாதாரமே படிக்கவில்லையென்றாலும் பாமரனுக்கும் இது தெரியும் புரியும். அதாவது மக்களிடம் வாங்கும் சக்தியில்லையென்றால் சந்தை படுத்துவிடும். சந்தை படுத்தால் முதலாளி ஒப்பாரிதான் வைக்க வேண்டும். அடிப்படை வசதியைப் பெருக்கினால் மக்கள் வாங்கும் சக்தி பெருகிவிடும் என்று எண்ணி அரசு 13.5 இலட்சம் கோடி இப்படிப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளது. அதாவது சாலை, இரயில், சூரிய மின்சாரம், துறைமுகம், விமான நிலையங்களுக்குப் பெருமளவு முதலீடு செய்துள்ளது. நடைமுறையில் இத்திட்டங்களால் வசதி பெருகலாம். மக்கள் வாங்கும் சக்தி பெருகாது. ஒப்பந்தகார்கள் பெருமளவு கையூட்டுக்கொடுக்க வேண்டியுள்ளதால் இயந்தரங்களைக்கொண்டு விரைவில் திட்டங்களை முடிப்பார்கள். இதனால் புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புக்களும் மிகக்குறைவு. இருப்பினும் இத்திட்டங்களால் உருவாகும் பன்முகப்பெருக்கம் இருந்தாலும் அடுத்த அடுக்கில் சந்தையில் வாங்கும் சக்தி இல்லாததால் பன்முகப்பெருக்க இயக்கமும் தடைபட்டுவிடும். எனவே எந்த நோக்கத்திற்காக அரசு செலவிடுகின்றதோ அதுநிறைவேறாது.

இதில் இன்னும் வருத்தமான விஷயம் என்னவென்றால் பல ஏழை எளிய மக்களின் வாங்கும் சக்தியை அரசே குறைத்து அதில் பெற்ற பணத்தில் அடிப்படைவசதி திட்டத்தில் முதலீடு செய்துள்ளது, கண்ணைவிற்று ஓவியம் வாங்குவதுபோல. அப்படி என்ன குறைக்கப்பட்டுள்ளது என்றுபார்த்தால் அத்தனையும் சமூகநீதியைப் படுகொலை செய்யும் கொலைபாதகச் செயல்.

1.   ஏழை எளிய மக்களுக்குப் பசியாற்றி வந்த உணவு மானியம்மட்டும் சுமார் ஒரு இலச்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. இது சந்தையில் உணவுதானியவிலைகளை உயர்த்தி மக்களின் மற்ற வாங்கும் சக்தியைப் பெருமளவு குறைக்கும். பலர் பட்டினியில் சாகக்கூடும்.

2.   உலகமுழுவதும் உர விலை வின்னைமுட்டுமளவு உயர்ந்து கொண்டிருக்கும் வேலையில் உரமானியத்தில் மட்டும் அரை இலட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உர விலை கிடுகிடு வென்று உயர்ந்து பல சிறு குறு விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் போகும். ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வருவாய் பெரிய அளவு பாதித்து வாங்கும் சக்தி குறைவதோடு தற்கொலை எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும்.

3.   60% இந்தியர்கள் கிராமங்கில் விவசாயத்தைச் சார்ந்து வாழ்வதால் பல பருவங்களில் வேலையின்றி வாழ்கின்றனர். அவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் குறைந்த பட்ச வருவாயை வழங்கிவந்தது. இத்திட்டமே கிராம வாங்கும் சக்தியைத் தாங்கும் தூணாக இருந்தது. அத்திட்டத்தில் மட்டும் ரூ 30000 கோடி குறைத்துவிட்டனர். தூர்வாரும் பணியும் தூர்ந்துபோனது. மண் அள்ளும் பணியில் மண் அள்ளிப்போட்டுவிட்டனர்.

4.   உலகில் சத்துப் பற்றக்குறையால் பதிக்கப்பட்ட மக்கள் அதிகமுள்ள நாட்டில் சத்துணவு திட்டத்தில்கூட ரூ1200 கோடி கூறைத்துவிட்டனர்.

5.   பால்வாடித் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.

6.   மகப்பேறு உதவித்திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது

7.   முதியோர் உதவித்தொகைக்குக்கூட கூடுதலாக நிதி ஒடுக்கவில்லை

8.   விவசாய ஆதரவு விலை செலவைக்கூட சரி செய்யவில்லை. அதுகுறித்து எந்த அறிவிப்புமில்லை.

9.   2022க்குள் விவசாயிகளின் வருவாய் இருமடங்காகக் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கூடவில்லையென்றாலும் பரவாயில்லை, 2015ம் ஆண்டுக்கும் முன்பு இருந்ததை விடக்குறைந்துவிட்டது.

10. 2021க்குள் நிதிபாற்றக்குறை மொத்த நாட்டு உற்பத்தியில் 3% மிகாமல் இருக்க வேண்டும் என்று 2003ல் சட்டம் போடப்பட்டது. இருந்தும் இந்த ஆண்டு 5.9% மாக இருக்கும் என்று கூறியுள்ளது. இப்படி கடன் வாங்கி செலவு செய்வது அடுத்த தலைமுறையின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் செயல். தலைமுறை அநீதி.

 மத்திய அரசு அறிக்கை இப்படியென்றால் மாநில அரசு அறிக்கை கண்டிப்பாகப் பல மடங்கு மோசமாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து போர்ப்போம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved