🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்பது மாதத்தில் ஆறாவது முறையாக வட்டிவிகிதம் உயர்வு! கலக்கத்தில் கடன் வாங்கியோர்!

ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் அதிகரித்து 6.50 சதவிகிதமாக நிர்ணயம் செய்துள்ளது. இதனால் வீடு, வாகன கடன்கள் வாங்கியவர்களுக்கு இஎம்ஐ உயர உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் ஆறாவது முறையாக வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு முடிவு செய்கிறது. ஆறு பேர் கொண்ட இக்குழு இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பிக்கும். இக்கூட்டத்தின் முக்கிய முடிவாக ரெபோ விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதம்தான் ரெப்போ வட்டி விகிதம். இதுவே வணிக வங்கிகள் மத்திய வங்கிக்கு செலுத்தும் கடனுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 'ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம்' எனப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் பணவீக்கம் கட்டுப்படும் என்பது ஒரு பொருளியல் கோட்பாடு. அதாவது ரெப்போ வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவதை இயன்ற அளவுக்குக் குறைக்கும். இதனால் வங்கிகள் வசம் இருக்கும் பணம் குறையும்.

பொது மக்களின் கைகளுக்கு பணம் வருவதற்கான ஆதாரமாக இருக்கும் வங்கிகளிடம் பணம் குறைந்தால், மக்கள் செலவு செய்வதற்கான பணம் அவர்களிடம் அதிகம் இருக்காது. இதனால் நுகர்வோரான பொது மக்கள் எந்தவொரு பொருளையோ சேவையையோ பெறுவதற்கு அதிகம் செலவு செய்ய முன்வர மாட்டார்கள்.

இதனால் பொருட்களின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுப்படும் என்பதுதான் அந்தக் கோட்பாடு.

இதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கிக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும் என்பதால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டியை உயர்த்தும் என்பதால் அந்த கடன்களை வாங்கியர்வர்களும் கூடுதலான பணத்தை வட்டியாகக் கட்டவேண்டியிருக்கும்.

கடந்த ஆண்டு மே மாதம் வரை 4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.4 சதவீதம் உயர்த்தியது. அதையடுத்து ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது. 2வது முறையாக ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்ந்து 4.90 சதவீதமாக ஆனது. ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக ஆனது. இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டதால் இஎம்ஐ அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டில் மே முதல் பிப்ரவரி வரையில் மொத்தமாக 2.25 சதவிகித அளவிற்கு ரெப்போ விகிதம் உயர்த்தியது.

இந்த நிலையில் இந்த மாதம் (பிப்ரவரி) 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. மாத சம்பளம் வாங்கி வீடு, வாகனக்கடன் வாங்கியுள்ள நடுத்தர வர்க்க மக்களுக்கு மீண்டும் ஒரு சுமையை ஏற்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி. அதே நேரத்தில் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு இந்த ரெப்போ வட்டி உயர்வு சாதகமாக உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved