🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரைநூற்றாண்டுகால கோரிக்கை! அரைகுறையாய் நிறைவேறியது!

தமிழகத்தில் வாழும் கம்பளத்தார்களின் கனவில் கடவுள் வந்து உனக்கு மூன்று வரம் தருகிறேன் என்ன வரம் வேண்டும் சொல் என்று கேட்டால், மூன்று விருப்பங்களுக்கும் கம்பளத்தார் கேட்கும் ஒற்றை வரம் தலைநகர் சென்னையில் மாவீரன் கட்டபொம்மனுக்கு சிலைவைக்க வேண்டும் என்பது மட்டும் தான். கம்பளத்தாரின் மரபணுவில் ஏறுமளவிற்கு அரைநூற்றாண்டுகாலமாக அனைத்து அமைப்புகளின் கூட்டங்களிலும், கம்பளத்தார் கூடுமிடங்களிலும் பேசப்பட்டுக்கொண்டே வந்துள்ளது.


பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்திருந்தாலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்துவந்தது. இந்நிலையில்  கடந்த 2021- இல் தமிழகத்தில் நடைபெற்ற 16 வது சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில்,  455-வதாக வெள்ளையர்களை எதிர்த்து முதன்முதலில் தீரமாய் போரிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோருக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம் பெற்றிருந்தது.


இது கம்பளத்தார்களில் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற வாக்குறிதியாக இருந்துவந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்றவுடன் தங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாகவே ஒவ்வொருவரும் எண்ணினர். அதற்கேற்றாற்போல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்களும், கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தனி கவனம் செலுத்திவந்தார். இதன் விளைவாக ஆட்சிப்பொறுப்பேற்றுக்கொண்ட ஒருசில மாதங்களிலேயே கட்டபொம்மன் சிலை அமைப்பதற்கான அறிவிப்பு வெளிவந்தது.


தலைநகர் சென்னையிலுள்ள பிரதான சாலைகள் ஏதாவது ஒன்றில் மாவீரன் கட்டபொம்மனுக்கு சிலை வைக்கப்படும் என்று நம்பியவர்களுக்கு, அடையாறு காந்தி மண்டபம் வளாகத்தில் சிலை நிறுவப்படுமென்ற அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை தந்தது. பிரதான சாலைகளில் சிலை நிறுவுவதற்கு நீதிமன்ற தடைகளும், தற்போதைய அரசியல் சுழல்களையும் ஆளும் கட்சியினர் சுட்டிக்காட்டினர். இதற்கிடையே அரசு வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் தொடர்ந்து சிலை அமைக்கும்பணிகளில் ஈடுபட்டு வந்தது. அதனடிப்படையில் சுமார் ஓராண்டுகாலம் நடைபெற்று வந்த பணிகள் நிறைவுபெற்று இன்று காலை 10 மணியளவில் தமிழக முதல்வரின் கரங்களால் நேரடியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. எளிய முறையில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரன் கட்டபொம்மன் சிலையை திறந்துவைத்து, திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். அதன்பின் முதல்வர், அமைச்சர்கள், மேயர், துணைமேயர் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரை கம்பளத்தாருக்கும், நாட்டு மக்களுக்கும் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசின் செய்தித்துறை  இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, திறப்புவிழாவினை சமுதாய அமைப்புகளையும், மக்களையும் அழைத்து நடத்தியிருந்தால் பிரதான சாலையில் சிலை வைக்கப்படவில்லையே என்ற மனக்குறை நீங்கியிருக்கும். இதேபோன்று இன்றைய நிகழ்வில் மருதுசகோதரர்கள் சிலை திறப்பு மற்றும் வ.ஊ.சி சிலை திறப்பும் நடைபெற்ற நிலையில், கம்பளத்தார் சமுதாயம் சமூக ஊடகங்களில் தங்கள் மகிழ்ச்சியையும், உணர்ச்சிப்பெருக்கையும் வெளிப்படுத்திய அளவு பிற சமுதாய மக்களிடமிருந்து எந்த எதிர்வினையுமின்றி நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது. எது எப்படியோ அரைநூற்றாண்டுகால கம்பளத்தாரின் கோரிக்கையை திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் முழுமையாகவும், மக்களின் எதிர்பார்ப்பு அரைகுறையாகவும் நிறைவேறியுள்ளது.

சிலை திறப்பு நிகழ்வில் த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தினர், விடுதலைக்களம் கட்சியினர் மற்றும் பல்வேறு தெலுங்கு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved