🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் மாற்றம் தேவை! - திரு.பவுல்ராஜ் வேண்டுகோள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கிற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தனியார் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகள் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் கல்விஉதவித்தொகை வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவுல்ராஜ் அவர்கள் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வணக்கம். முப்பெரும்விழாவின் மகத்தான வெற்றிக்கு நல்வாழ்த்துகள். இப்பவும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் 2021-22 ஆம் ஆண்டு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, உயர் கல்வி பயிலும் இராஜகம்பளத்தார் சமுதாய மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குறியது.நமது மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரவேண்டும்.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்ததின் அடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு, மாணவ - மாணவியரிடமிருந்து அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு, தகுதியானவர்களுக்கு இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் அவரவர் வங்கிக்கணக்கிற்கே உதவித்தொகை செலுத்தப்படும் என்ற அறிவிப்பும் கடந்த வாரம் வெளியானது. 

அதேவேளையில், தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும், தரமான கல்வியை தனியார் பள்ளிகளால் மட்டுமே வழங்க முடியும் என்ற கருத்துருவாக்கம் அனைத்து தரப்பு பெற்றோர்களின் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக பெற்றோர்கள் தங்கள் பொருளாதார சக்திக்கும் மீறி குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்தப்போக்கு எப்பாடுபட்டேனும் குழந்தைகளுக்கு தரமான கல்வியை  வழங்கவேண்டும் என்ற பெற்றோரின் அக்கறையின் வெளிப்பாடேயன்றி,  செல்வச்செழிப்பின் குறியீடாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. என்வே இதனை கருத்தில்கொண்டு  தனியார் பள்ளி மாணவ-மாணவியர்க்கும்  சில நிபந்தனைகளோடு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை நலச்சங்கம் செய்திட வேண்டுமாய்  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


இக்கருத்தின் அடிப்படையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த  திரு.ரவி-திருமதி.இராஜலட்சுமி அவர்களின் அன்புமகன் கவின் பிரசாந்த்  +2 தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றதோடு, JEE நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் 968-வது இடம்பெற்று, சர்வதேச தரம்வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றான சென்னை.ஐ.ஐ.டி.யில் பி.இ மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்துள்ளார். எளிய விவசாய பின்புலம் கொண்ட கவின் பிரசாந்த் போன்ற எண்ணிலடங்கா நமது சமுதாய மாணவச் செல்வங்கள் தனியார் பள்ளியில் பயின்றலும், ஐ.ஐ.டி போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களில் சேர்வதற்கு தகுதி பெறுவோர் எண்ணிக்கை மிக மிக சொற்பமே. 

எனவே இவற்றை கருத்தில்கொண்டு, கல்வி உதவி பெறுவதற்கான அடிப்படை தகுதிகளில் தனியார் பள்ளி மாணவ - மாணவியரையும் சேர்த்து, அவர்களில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் இலவச மருத்துவ இடம் பெருபவர்களுக்கும் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்ற வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இக்கோரிக்கை தங்களுக்கு கூடுதல் சுமையைத்தரும் என்றாலும், சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் மீதான நம்பிக்கை மக்களிடம் மேலோங்கியுள்ள நிலையில், நிதியுதவி கோரி வேண்டுகோள் வைத்தால் நிச்சயம் உதவிட சமுதாய மக்கள் முன்வருவார்கள் என்பது சமீபத்தில் நடைபெற்று முடிந்த முப்பெரும்விழா வரை நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே, மாணவன் கவின் பிரசாந்தை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தாண்டு உதவித்தொகை பெறுவோர் பட்டியலில் அவரது பெயரையும் சேர்த்து கண்டிப்பாக நிதியுதவி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவரது கடிதத்தில் கூறியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved