🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார் இல்லம் வருகை தந்த தலைவர் ஜி.கே.வாசன் எம்.பிக்கு உற்சாக வரவேற்பு!

நேற்று (23.02.2023) மாலை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர் B.யுத்தீஸ்வரன் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


மாலை 5 மணியளவில் திருநின்றவூர், அந்தோணிநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இல்லத்திற்கு வருகை தந்த ஜி.கே.வாசன் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் திருநின்றவூர் தமாக முக்கிய தலைவராகவும், ஜி.கே.மூப்பனார் அவர்களின் நண்பரும், யுத்தீஸ்வரன் அவர்களின் தந்தையாருமான திரு.பால்ராஜ்-திருமதி.குருவம்மாள் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.


இதனைத்தொடர்ந்து தரைத்தளத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி புதிய இல்லத்தை திறந்துவைத்தார். இதனையடுத்து முதல்தளத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை யுத்தீஸ்வரன்-கவிதா தம்பதியினரின் பெண்குழந்தையை அழைத்து ரிப்பனை வெட்டச்செய்தார். சுமார் ஒருமணி நேரம் புதிய இல்லத்தில் இருந்த மக்கள் தலைவர் ஜி.கே.வாசன், திருவள்ளூர் மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். 


இதனையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நிர்வாகிகள் ஜி.கே.வாசன் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அப்பொழுது நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசை வழங்கினர். நினைவுப்பரிசை பெற்றுக்கொண்ட ஜி.கே.வாசன், நினைவுப்பரிசில் இடம்பெற்றிருந்த கட்டபொம்மன் அகாடமி குறித்து கேட்டறிந்தார். மேலும், சங்கத்தின் பெயர், நிர்வாகிகள் மற்றும் செயல்பாடுகளை கேட்டு தெரிந்துகொண்டவர், சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சமூகநீதி மலர் எம்.பி.அவர்களிடம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரராஜன், சுப்பிரமணி, மண்டல பொறுப்பாளர்கள் குருசாமி, செல்வராஜ், தங்கவேல், ஆண்டிமுருகன், மூத்த தலைவர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், தங்கள் கட்சிக்காரர் இல்ல விழாவில் சமுதாயத்தின் சார்பில் கலந்துகொண்டு மக்கள் தலைவருக்கு வரவேற்பளித்து நினைவுப்பரிசு வழங்கியது, கட்சியில் யுத்தீஸ்வரன் செல்வாக்கையும், மதிப்பையும் நிச்சயம் உயர்த்தும் என்றும், பெருமை சேர்த்த சங்க நிர்வாகிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட தமாக சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved