🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் குளறுபடி - அதிகாரிகளின் அலட்சியம் காரணமா?

தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 446 குரூப் 2 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி குரூப் 2 முதல் நிலைத் தேர்வை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத்தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதினர். குரூப் 2 மெயின் தேர்வு இன்று தாள் 1 காலையிலும் தாள் 2 மாலையிலும் நடத்தப்பட்டது.

இதற்கிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒரு சில மையங்களில் வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு தொடங்க தாமதம் ஆனது. இதனால் தேர்வு மையங்களில் சலசலப்பு ஏற்பட்டது. வினாத்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண் மாறி இருந்ததால் ஏற்பட்ட குழப்பமே தாமதத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. தாமதமாக தேர்வு தொடங்கிய மையங்களில் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு காலையிலும், பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு பிற்பகலிலும் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 280 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இன்று காலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கப்பட்டது. சென்னையில் 8,315 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே குரூப் தேர்வில் நடைபெற்றுள்ள குளறுபடிகளுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இந்த குளறுபடிகளுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள தலைவர்கள், இன்று நடைபெற்ற குரூப் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved