🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்திய தேர்தல் ஆணையர் நியமனம் - அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிவரை இருந்த நிலையில், ஒன்னரை மாதம் முன்னதாகவே நவம்பர் மாதம் 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். இதனையடுத்து மறுதினமே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். மே மாதம் முதல் காலியாக இருந்துவந்த பதவிக்கு, ஆறுமாதகாலம் எந்த நியமனமும் செய்யாத மத்திய அரசு திடீரென விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரை, அடுத்தநாளே தேர்தல் ஆணையாளராக நியமனம் செய்தது கடும் விமர்சனத்தை கிளப்பியிருந்தது.  இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 24 -இல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "இந்த கோப்பு 24 மணி நேரத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு அப்படியான அவசரம் என்னவிருந்தது. மே.15-ஆம் தேதிதான் தேர்தல் ஆணையர் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்னல் வேகத்தில் அடுத்த ஆணையருக்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி மின்னல் வேகத்தில் ஒப்புதல் அளிக்க அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பினர்.

ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லையென்றால் மத்திய அரசு அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யட்டும். நாங்கள் அருண் கோயல் என்ற அதிகாரியின் திறனை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மாறாக, எதன் அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெற்றது என்பதையே கேட்கிறோம்" என்று உச்சநீதிமன்றம் வினவியிருந்தது.

மேலும் நீதிபதிகள், "தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு எதன் அடிப்படையில் சட்ட அமைச்சர் வெறும் 4 நபர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரைத்தார்" என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல், ”பணியாளர் மற்றும் அவர்களுக்கான பயிற்சி துறையின் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தேர்வு நடைபெற்றது” என்றார்.

"தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டியது கட்டாயம் என அரசியல் சாசனத்தின் 324 (2)-வது பிரிவு கூறுகிறது. ஆனால், அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் நபரை இந்தப் பதவியில் அமர்த்துகிறார்கள். எனவே, தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக சட்டம் இயற்றவேண்டும்" என்று நீதிபதிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து  தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியது. இதில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் சீர்திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு விவரம் வருமாறு, 

தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதே போல தேர்தல் ஆணையரை நீக்கம் செய்ய வேண்டும் என்றாலும் இதே வழிமுறையையே கடைபிடிக்க வேண்டும். மேலும் தற்போதைய தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நிர்வாக தலையீட்டிலிருந்து தேர்தல் ஆணையத்தை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு அவர்களை நீக்காதபடி தேர்தல் ஆணையத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையத்தை அமைப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் வகுக்கட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக சட்டம் இயற்றவில்லை.

அரசியல் நிர்வாகங்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டன. எந்த தலையீடும் இல்லாமல் தேர்தல் ஆணையம் மேலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சி.பி.ஐ இயக்குநரை தேர்வு செய்வது போன்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved