🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக்காட்டும் முதல்வர்!

2021-சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட திமுக தனது தேர்தல் அறிக்கையில் 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை வழங்கியது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதலாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தமிழக முதல்வர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். நீட் தேர்வு, இடஒதுகீட்டு, சாதி சான்றிதழ் போன்ற சிக்கலான பிரச்சினைகள் தவிர்த்து மாநில அரசுக்குட்பட்ட, அனைத்து தரப்பினருக்கும் பொதுவான வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றிட தமிழக முதல்வர் மிகுந்த கவனத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தனது தந்தையார் கலைஞர் மு.கருணாநிதி போல் இளம் வயதில் முதல்வராகி, ஏறக்குறைய 2 0 ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்து மீண்டும் முதல்வர் பதவியை  அடைந்தது போன்ற வாய்ப்புகள் அமைவதற்குறிய வயது இல்லை என்பதை உணர்ந்துள்ள முதல்வர், கிடைத்திருக்கக்கூடிய இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்திட விரும்புவதுபோல் அவரது செயல்பாடும் பேச்சும் அமைந்துள்ளது.  

அந்தவகையில் தேர்தல் வாக்குறுதிப்படி கடந்த சில வாரங்களுக்கு முன் சுதந்திரப்போராட்ட தியாகிகளின் சிலையை சென்னையில் திறந்துவைத்த முதல்வர், தற்போது விசைத்தறி தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அதன்படி விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில் அதை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேபோல் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்களாக உயர்த்தி, மார்ச் 1 முதல் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு வெறும் 70 பைசா அளவே உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூ.53.62 கோடி நிதியை சேர்த்து மொத்தம் ரூ.484.52 கோடியை மின்சாரத்துறைக்கு மானியமாக அரசு வழங்கும்.

பருத்தி பஞ்சிலிருந்து, கொட்டைகளை எடுத்து பஞ்சாக்கி, பிறகு ஸ்பின்னிங் மில்லில் தந்து அதை நூலாக்கி, அந்த மூலப்பொருளை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு தந்து வருகிறார்கள்.இப்படி தரப்படும் நூலைத்தரமிக்க, நேர்த்தியான வெண்மை அல்லது சாம்பல் வண்ணத் துணியாக நெய்வது கோவை, திருப்பூர் விசைத் தறியாளர்களின் பணியாக உள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர் மாநகரம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் கோயம்புத்தூர், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஜவுளித் தொழிலுக்குப் பெயர்போன கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவிலான துணிகள் விசைத்தறிகள் மூலம் நெய்யப்படுகின்றன. குறிப்பாக கோவை அவினாசி, மங்கலம், சோமனூர், தெக்கலூர், காரணம்பேட்டை, திருப்பூர் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறித் தொழிலே அங்கு வசிப்போரின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு கொங்கு மண்டல விசைத்தறியினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved