🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அவதூறுசூழ் ஒருங்கிணைப்பாளர்! சங்கம் தந்த பிறந்தநாள் பரிசு!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கடந்த ஜனவரி'29 ஆம் தேதியன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழா பார்போற்றும் வகையில் பிரமாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்ததின் பின்னனியில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத பலரின் உழைப்பு இருந்துள்ளது. ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளை மையப்படுத்திய விழாவாக இருந்தபோதிலும் அவர்களின் பங்களிப்பும், பங்கேற்பும் வெறும் இருபது சதவீதத்திற்கும் குறைவே. ஆனால் விழா அழைப்பிதழ் தொடங்கி, விழா முடியும்வரை  தங்களுக்கு எந்தவித அடையாளமும், முக்கியத்துவமும் இல்லாதபொழுதும், சமுதாய நலனே பெரிதென்று உழைத்த பெருந்தனக்காரர்களை வாய்ப்புகள் அமையும்பொழுது பாராட்டுவதும், அவர்களின் சேவையை பொதுவெளியில் அங்கீகரிப்பதும் அவசியம்.

அந்த வகையில் கம்பளத்தார்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்று ஈரோடு. உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி ஒன்றியச்செயலாளர்கள் வரை அதிக அளவிலும், குறிப்பிடத்தக்க அளவில் சமுதாய நலச்சங்கத்திற்கு நன்கொடையாளர்களும், நலன் விரும்பிகளும் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்திலிருந்து சங்க நிகழ்ச்சிகளில் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் தானாக முன்வந்து, தங்கள் நண்பர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு வந்து பங்கேற்கும் இரண்டு ராஜுக்களில் ஒருவர் திரு.பங்காருராஜு மற்றொருவர் திரு.பவுல்ராஜ்.  திரு.பங்காருராஜு அவர்கள் பெருநிழக்கிலார், திரு.பவுல்ராஜ் அவர்கள் நிதிநிறுவனம், காய்கறி மொத்த வியாபாரம் மற்றும் அம்மா பேரவை ஒன்றியச்செயலாளராக இருந்துவருபவர்.

முப்பெரும்விழா பணிகளை ஒருங்கிணைத்து தருமாறு சங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தயக்கத்தோடு அந்தப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டவர் திரு.பவுல்ராஜ். தயக்கத்திற்கான பிரதான காரணம் பொதுவெளியில் எழும் விமர்சனம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது போகிற போக்கில் சேற்றைவாரி வீசுவது பொதுப்புத்தியில் ஊறிப்போன ஒன்று. ஆனால், சமுதாயப்பணியில் தன் பங்கு இருக்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு, அவதூறுகள் குறித்து அச்சப்படாமல் கடமையாற்றியவர். திரு.நடராஜ், திரு.மோகன் ஆகிய இரு உறவுகளை உடன் அழைத்துக்கொண்டு, ஈரோடு மாவட்டம் முழுவதும் தன் சொந்த காரில், சொந்த செலவில்  அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளையும்  ஒருமுறைக்கு இருமுறை சந்தித்து இராஜகம்பளத்தார் அரசியல் மலருக்கு உரிய தகவலகளை பெற்றுக்கொடுத்ததிலும், நன்கொடையாளர்களை சந்தித்து நிதிதிரட்டியதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.

இந்த பயணதின் போது இம்மூவருக்கும் ஏற்பட்ட அனுபவம், சந்தித்த அவமானம், ஒருசில தலைவர்கள், நன்கொடையாளர்களை நாடிச்சென்றபோது  நடத்தப்பட்ட விதம் அனைத்தையும் தொகுத்தால் ஒரு புத்தகமாகவே வெளியிடலாம். இதில் சுவாரஸ்யமாக, இரண்டாம் நாள் பயணத்தின் முதல் நிகழ்வாக பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு தொழிலதிபரை அணுக, அவரோ சங்கத்திற்கு இவ்வாறான நிபந்தனைகளை வைத்து மூவரையும் திணறடித்தார்.

1). சங்கத்திற்கு 24 மணிநேரமும் உழைக்கக்கூடிய மாதாந்திர சம்பளம் பெறும் நிரந்த ஊழியர்கள் மாவட்டம் தோறும் இருக்க வேண்டும். 

2). சமுதாயத்தில் எந்தப்பிரச்சினை என்று போன் செய்தாலும் அடுத்த அரை மணி நேரத்தில் சங்கத்தினர் வந்து நிற்க வேண்டும்.

3). குடும்ப பிரச்சினை உட்பட எல்லா பிரச்சினைகளுக்கும் சங்கம் தீர்வு கொடுக்க வேண்டும்.

இதைக்கேட்டவுடன் தான் மூவரும் உணர்ந்தனர், காலையிலேயே எங்கோ வந்து வம்பில் மாட்டிக்கொண்டது போல். எப்படியாவது நன்கொடை வங்க வேண்டும் என்ற முனைப்பில் சமாதாங்களைக்கூறியும் அந்த பெரிய மனிதருக்கு திருப்தி ஏற்படாத நிலையில், சென்னைக்கு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். எதிர்முனையில் பேசிய பொதுச்செயலாளரிடம் அந்தத்தொழிலதிபர் தன் நிபந்தனைகளை முன்வைத்து உங்கள் சங்கம் செய்ய முடியுமா? என்றார். 


பொதுச்செயலாளர் அந்தப் பெரிய மனிதரிடம், உங்களின் விருப்பத்தை,கருத்தை கேட்காமல் அரசு விதிக்கும் வீட்டுவரி, குடிநீர்வரி, சொத்துவரி, சுங்கவரி உட்பட எல்லா வரியும் எந்தக்கேள்வியுமின்றி செலுத்துகின்றீரே, அரசுத்துறை நிறுவனங்கள் உங்கள் எல்லாத்தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கிறதா?.  நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்கின்றீர்களா? நீங்கள் வைக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றக்கூடிய சட்ட அங்கீகாரம், இறையாண்மை எந்த சங்கத்திற்கு இருப்பதாக நினைக்கின்றீரா?. இல்லை என்று சொல்வதற்கு பதிலாக போகாத ஊருக்கு வழி செய்ய சொன்னால் எப்படி? என்று கேட்க, அந்த பெரிய மனிதர் பேச்சை முடித்துக்கொண்டார். சில உள்ளாட்சி பிரதிநிகள், கட்சித் தலைவர்கள் நடத்திய விதம் இதைவிட பரிதாபகரமானது.


இப்படியான பல அனுபவங்களையும், வலிகளையும் கொடுத்தபோதும், அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, நல்ல மனம் படைத்த நல் உள்ளங்களிடம் நிதி திரட்டி, ஒவ்வொரு நன்கொடையாளரின் முகவரி, புகைப்படங்கள் உள்பட வரவு செலவு விபரங்களை விழா மேடையிலேயே சாட்சிகள் புடைசூழ ஒப்படைத்து தன் கடமையை நிறைவு செய்து, மனநிறைவு கொண்டவர் திரு.பவுல்ராஜ். இதே அர்ப்பணிப்போடு பணியாற்றி முப்பெரும்விழாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களை, தான் திருடி பிறரை நம்பாத மூடர் கூட்டம் அவதூறு பரப்பி சமுதாயத்திற்காக உழைப்பவர்களை ஊனமாக்கி மூலையில் உட்கார வைக்கத்துடிக்கிறது ஒருகூட்டம்.

எங்கோ, யாராலோ நடத்தப்படும் முப்பெரும்விழா என்று நினைக்காமல், சமுதாயமாய் நினைத்து உதவிக்கரம் நீட்டியவர்கள், ஓடாய் உழைத்தவர்கள் மீது பரப்பப்படும் அவதூறுகள், வைக்கப்படும் விமர்சனங்களுக்கு சங்கம் என்ன கைமாறு செய்யப்போகிறது? என்ற கேள்விக்கு சங்கத்தின் பதில் என்ன?

எல்லா விமர்சனத்திற்கும், அவதூறுகளுக்கும் சங்கத்தின் ஒரே பதில் " என் பணி செய்து கிடப்பதே - சமுதாயத்திற்காக உழைப்பதே". அந்தவழியில் முப்பெரும்விழா ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பை சிறப்பாக செய்து வெற்றிகரமாக்கிய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.பவுல்ராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் வேண்டுகோளை ஏற்று, நிதியுதவி பெறுவதற்கான சங்கத்தின் விதிமுறைகளில் இருந்து சிறப்பு விலக்கு அளித்து, தனியார் பள்ளியில் படித்து சென்னை ஐஐடி-யில் 233 மாணவ-மாணவியர் கொண்ட மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து முதல் பருவ தேர்வில் 10க்கு 9 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவர் R.கவின்பிரசாந்த்-க்கு ரூ.10000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) கல்வி உதவித்தொகையும், அந்தியூர் வட்டம் கூகளூரைச் சேர்ந்த மாணவி மலர்விழி அவர்கள் குரூப் சர்வீஸ் தேர்வுக்காக கட்டபொம்மன் அகாடமியில் விண்ணப்பித்திருந்து, தாயாரின் உடல்நிலை கருதி நேர்காணலில் பங்கேற்கமுடியாத காரணத்தால் இறுதிப்பட்டியலில் இடம்பெற முடியவில்லை. தற்போது தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கட்டபொம்மன் அகாடமியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்தார். ஏற்கனவே பத்துப்பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில், புதிதாக ஒருவருக்கு இடமளிக்கமுடியாத சூழல். மாணவியின் ஆர்வம், ஒருங்கிணைப்பாளர் பரிந்துரை மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் திரு.பவுல்ராஜ் அவர்களின் பிறந்தநாள் பரிசாக மாணவி மலர்விழி அவர்களுக்கு கட்டபொம்மன் அகாடயில் இணைந்து இலவச பயிற்சி பெற அனுமதி அளிக்கப்படுகிறது. 


இன்று பிறந்தநாள் காணும் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், சமுதாயத்திற்காக தன்னலம் பாராமல், எல்லா சங்கங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருபவருமான  திரு.பவுல்ராஜ் அவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved