🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உயர்பதவிகள் அனைத்தும் உயர்சாதியினருக்கே! சுரண்டப்படும் பிற்படுத்தப்பட்ட சாதிகள்!

இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேல்நிலை பதவிகளில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 2-3 சதவீதம் பேரே இந்தப் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி, இந்திய வங்கிகளில் உயர் நிலை பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் 88 முதல் 92 சதவீதம் வரை பொதுப்பிரிவைச் சேர்ந்த உயர்சாதியினர் என்பது தெரியவந்திருக்கிறது.


இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 147 தலைமைப் பொது மேலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 135 பேர், அதாவது 92 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பொது மேலாளர் பதவிகளில் 667 பேர் இருக்கிறார்கள். 588 பேர் (88%) பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோரைப் பொருத்தவரை இந்த இரு பதவிகளிலும் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே இருக்கின்றனர்.

துணைப் பொதுமேலாளர் பதவிகளில் 81 சதவீதம் பொதுப் பிரிவினரும் 8 சதவீதமே பிற்படுத்தப்பட்டோரும் இருக்கின்றனர். உதவி பொது மேலாளர் பதவிகளில் 72 சதவீதம் பொதுப் பிரிவினரும் 14 சதவீதம் பிற்படுத்தப்பட்டோரும் இருக்கின்றனர். தலைமை மேலாளர் பதவிகளில் 61 சதவீதம் பொதுப் பிரிவினரும் பிற்படுத்தப்பட்டோர் 19 சதவீதமும் உள்ளனர்.


பொதுத் துறை வங்கிகளில் உள்ள பணியிடங்களைப் பொறுத்தவரை, பணிச் சேர்க்கையின்போது பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. பட்டியலினத்தோருக்கு 15 சதவீதமும் பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மண்டல் கமிஷன் தனது பரிந்துரைகளைத் தரும்போது, பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது தொடர்பான இந்திரா சஹானி வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் பதவி உயர்வில் ஐந்து ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு 1995-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி மக்களவையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்றை நிறைவேற்றியது. அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 77-ஆவது திருத்தத்தின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வேலை வாய்ப்பில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு, பதவி உயர்வுகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டது.

ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கும் இந்த இட ஒதுக்கீட்டைத் தொடரவேண்டும் என அப்போதே சில தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அப்போது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருந்த சீதாராம் கேசரி, விரைவில் அதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் எனக் கூறினார். ஆனால், அந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேயில்லை.

"வங்கிப் பணிகளைப் பொறுத்தவரை, ஸ்கேல் - 1 முதல் ஸ்கேல் - 4 வரை பணியிடங்கள் பிரிக்கப்படுகின்றன. இதில் 3வது ஸ்கேல்வரை இட ஒதுக்கீடு ஓரளவுக்குச் சரியாக இருக்கிறது. ஆனால், நான்காவது ஸ்கேலில் பிற்படுத்தப்பட்டோரின் விகிதம் மிகவும் குறைந்துவிடுகிறது. இந்த நான்காவது ஸ்கேலில்தான் தலைமை மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், பொது மேலாளர், தலைமைப் பொது மேலாளர் ஆகிய பணியிடங்கள் வருகின்றன. இந்த ஸ்கேல்- 4 பதவிகளில் இருப்பவர்கள்தான் முடிவெடுக்கும் பணியை மேற்கொள்வர்கள். இந்த மட்டத்தில்தான் பிற்படுத்தப்பட்டோர் விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளிப்பதுதான்" என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி.

பொதுத் துறை வங்கிகளின் தலைமைப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோரின் விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது என்பதுபோக, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எஸ்சி/எஸ்டி பிரிவினரின் விகிதமும் குறைவாகவே இருக்கிறது. தலைமைப் பொது மேலாளர் பதவிகளில் பட்டியலினத்தோரைப் பொறுத்தவரை 6 சதவீதமும் பொது மேலாளர் பதவிகளில் 8 சதவீதமுமே இருக்கின்றனர். தலைமைப் பொது மேலாளர் பதவிகளில் பழங்குடியினர் யாருமே கிடையாது. பொது மேலாளர் பதவிகளில் பழங்குடியினர் 2 சதவீதம் பேரே இருக்கின்றனர்.


"எஸ்சி, எஸ்டி ஆகியோருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும்கூட, ஒவ்வொரு கட்டத்திலும் அந்த இட ஒதுக்கீடுகள் முறைப்படி வழங்கப்படுவதில்லை என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஸ்கேல் 1 மற்றும் ஸ்கேல் 2ல் இதை சரியாகச் செய்கிறார்கள். ஆனால், அதற்கு மேலே செல்லச்செல்ல இது குறைந்துவிடுகிறது" என்கிறார் ஜி. கருணாநிதி.

பொதுவாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பொதுப் பிரிவில் கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் சேர்பவர்களில் பெரும் எண்ணிக்கையினர் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினத்தோராக இருப்பார்கள். "ஆனால், மத்திய அரசின் பணிகளில் அப்படியிருக்க வாய்ப்பு மிக்க குறைவு. பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களே இருப்பார்கள்" என்கிறார் கருணாநிதி.

வங்கிப் பணிகளில் மட்டுமல்ல, எங்கெல்லாம் இட ஒதுக்கீடு இல்லையோ, அங்கெல்லாம் ஒரு பிரிவினர் மட்டுமே இடம்பெறும் நிலைதான் இருக்கிறது என்கிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன்.

"ஸ்கேல் - 4 பதவிகளைப் பொறுத்தவரை, அவை பெரும்பாலும் நேர் காணல் மூலம்தான் நிரப்பப்படும். வேண்டியவர்கள், தமக்கு உதவக்கூடியவர்கள், மேலே இருந்து வரும் அழுத்தம் என போன்ற பல காரணிகளின் அடிப்படையில் இந்தப் பதவிகள் நிரப்பப்படும். இடஒதுக்கீடு இருந்தால் மட்டும்தான் இந்தப் பதவிகள் சரியாக நிரப்பப்படும். இல்லாவிட்டால் இதுதான் நடக்கும். பேங்க் ஆஃப் பரோடா அதானியின் நிறுவனத்திற்குக் கடன் தரத் தயார் என்கிறது. இதற்குக் காரணம், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தற்போதைய அரசை மகிழ்வித்து, வேறு எதையோ பெற முயல்கிறார்கள் என்பதுதான். பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை அவை தனிநபர் பிரபலத்தைச் சார்ந்தவை அல்ல. ஆனால், தனியார் வங்கிகள் தனிநபரை மையப்படுத்தி இயங்கும். பொதுத் துறை வங்கிகளும் அந்தப் போக்கை நோக்கி நகர்கின்றன" என்கிறார் சி.பி. கிருஷ்ணன்.

எல்லா இடங்களிலும் உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் மட்டுமல்ல, பெண்களின் எண்ணிக்கையுமே வெகு குறைவு என்பதைச் சுட்டிக்காட்டும் சி.பி. கிருஷ்ணன், எங்கேயுமே மேல்மட்ட பதவிகளை நிரப்புவதில் வெளிப்படைத் தன்மை கிடையாது என்கிறார். "இது வங்கிச் சேவைகளிலும் எதிரொலிக்கும். எந்தப் பிரிவினருக்கு கடன் கொடுக்கவேண்டும் என்ற முன்னுரிமையை இது பாதிக்கும். ஒரு சமூகம் எப்படியிருக்கிறதோ, அது அரசு பதவிகளிலும் எதிரொலிக்கவேண்டும். ஆனால், அது நடப்பதில்லை. இட ஒதுக்கீடு இருந்தால்தான் அது நடக்கும்" என்கிறார் சி.பி. கிருஷ்ணன்.

ஏற்கனவே நீதிமன்றங்கள், அரசுச்செயலர் உள்ளிட்ட உயர் பதவிகளை முழுக்க ஆக்கிரமித்துள்ள 3 சதவீதமுள்ள உயர்சாதியினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், பொதுத்துறை நிறுவனங்களிலும் அதேநிலை நீடிக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், 65 சதவீத மக்கள் தொகை கொண்ட இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாய்ப்புகளையும், உரிமைகளையும் உயர்சாதியினர் அபகரித்துக்கொண்டு வருவது அவமானகரமானது.

நன்றி:பிபிசி

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved