🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக அரசின் ஜனரஞ்சக பட்ஜெட் - வாக்கு! வளர்ச்சி! வாக்குறுதி !

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத்தேர்தலை மனதில் கொண்டு பல ஜனரஞ்சக அறிவிப்புகளும், தொழில்துறைக்கு ஏற்றமளிக்கும் தொழிற்பூங்கா மற்றும் கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்புகளும், வடசென்னை உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகள், புதிய மின் உற்பத்தி குறித்த வாக்குறுதிகளும் வெளியாகியுள்ளன.

அதிக கவனத்தை ஈர்த்த இன்றைய பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்!

1. தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத்தொகை அறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15 முதல் வழங்கப்படவுள்ளது.

2. தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கான காலை சிற்றுண்டித்திட்டம் மாநில முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

3. பத்திரப்பதிவுக்கட்டணம் 4% லிருந்து 2% ஆக குறைப்பு.

4. கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த கோவைக்கு 9000 கோடியும், மதுரைக்கு 8500 கோடியும் ஒதுக்கீடு.

5. முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு லட்சம் பேர் சேர்ப்பு.

6. மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொழிற்சாலைகளுக்கு விரிவாக்கம்.

7. விருதுநகர் மாவட்டத்தில் 1130 ஏக்கரில் அமையயுள்ள மெகா ஜவுளிப்பூங்காவிற்கு 1800 கோடி ஒதுக்கீடு.

8. கிராமப்புறங்களிலுள்ள 10000 குளங்கள், ஊரணிகளை தூர்வார 800 கோடி ஒதுக்கீடு.

9. சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi வசதி.

10. ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், இந்து சமய அறநிலையத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்.

11. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க 305 கோடி, 172 கோடியில் கோவை செம்மொழி பூங்கா.

12. வடசென்னை பகுதியை மேம்படுத்த 1000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டம், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையுள்ள அண்ணாசாலை நான்கு வழி உயர்மட்ட மேம்பாலம்.

13. ஈரோட்டில் தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம்.

14.2000 கோடியில் 5145 கி.மீ. கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.

15. 2030 ஆம் ஆண்டுக்குள் 77 ஆயிரம் கோடி செலவில் 14500 மெகாவாட் மின்உற்பத்தி.

16. சேலத்தில் 880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளிப்பூங்கா.

17. இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் புதிய தோல்பொருள் தொழிற்சாலை.

18. திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது இருந்த 62000 கோடி வருவாய் பற்றாக்குறை 30000 கோடியாக குறைப்பு.

19. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா, 1000 மாணவர்களுக்கு மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மற்றும் உதவித்தொகை.

20. கோவை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய இடங்களில் 410 கோடியில் புதிய சிப்காட் வளாகங்கள் அமைக்கப்படும்.

ஆகிய அறிவிப்புகள் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்களாக பார்க்கப்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved