🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை! எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம்!

சட்டபேரவை நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் நிதி நிலை அறிக்கை, இந்த நிதிநிலை அறிக்கையை ஒரு மின் மினி பூச்சியாக பார்ப்பதாகவும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இது எவ்வித வெளிச்சத்தையும் தராது என தெரிவித்துள்ளார்.

அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது தகுதியின் அடிப்படையில் வழங்குவதாக கூறுகிறார்கள். எந்த அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் பட்ஜெட் அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக பட்ஜெட்டில் தகுதியின் அடிப்படையில் 1000 ரூபாய் தரப்படும் எனச் சொல்லியுள்ளது. அது என்ன தகுதி என்று தெரியவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மக்களைச் சமாளிக்க வந்த அறிவிப்பு போலத்தான் இருக்கிறது என்று விமர்சித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு, மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கீடு, காவல்துறைக்கு ரூ.10,812 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அதேவேளையில், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆக்கப்பூர்வமான எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் கிடப்பில் உள்ள நிலையில்,  ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வாசிப்பது என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது என்ற விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.

பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும் அதனை நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி, திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியின்றி, வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.

ஆனால், அனைவருக்கும் வழங்காமல், தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்பது தெரியவில்லை. இத்திட்டத்திற்கு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சரிபாதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இருக்கும். எனவே, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீராக உள்ளது. எனவே, பின்தங்கிய மாவட்டங்கள், விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கென தனி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதின் மூலம் தமிழக நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளதாக பாராட்டியுள்ளார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved