🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குரூப் IV தேர்வு கட் ஆஃப் மதிப்பெண் குறையுமா? நிபுணர்கள் விளக்கம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் காலியிடங்கள் 10,117 ஆக அதிகரித்துள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்ற குழப்பம் தேர்வு எழுதியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள நிபுணர்களின் கருத்தாவது,

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், முதற்கட்டமாக எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும், எந்த ரேங்கில் இருந்தால் வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.

தற்போதைய நிலவரப்படி இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5629 ஆகும். எனவே ஒட்டுமொத்த தரவரிசையில் 6000க்குள் இருக்கும் தேர்வர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். இடஒதுக்கீடு அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசையில் 1745க்குள் இருக்கும் அனைவருக்கும் வேலை உறுதி. அதேநேரம் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1492 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை உறுதி. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1126 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவில் 197 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 844 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அருந்ததியர் பிரிவில் 200 தரவரிசைக்குள் இருந்தால் வேலை கிடைக்கும். பழங்குடியினர் பிரிவில் 70 ரேங்கிற்குள் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.

BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 200 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 50-60 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது, என ஒரு தனியார் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு இதை விட குறைவான ரேங்க் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் 10-30 கட் ஆஃப் மதிப்பெண்கள் வரை குறையலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 159 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 154க்கு மேலும், BCM பிரிவினருக்கு 152க்கு மேலும், SCA பிரிவினருக்கு 151க்கு மேலும், ST பிரிவினருக்கு 141 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2-3 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. தட்டச்சர் பணியிடங்களுக்கு 5 மதிப்பெண்கள் வரையிலும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு 10 மதிப்பெண்கள் வரையிலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வாகும் குறிப்பிட்ட பிரிவினருக்கு 130 மதிப்பெண்களுக்கே வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved