🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டுரைப்போட்டியில் முதல் வரிசை வென்ற சர்மிளாவுக்கு குவியும் பாராட்டு.

மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்று மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார் சின்னத் தொட்டிபாளையத்தைச் சேர்ந்த மாணவி சர்மிளா. இதுகுறித்த முழுமையான விவரம் பின்வருமாறு,

கோவை மாவட்டம் காரமடை அருகே கம்பளத்தார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் கிராமங்களில் ஒன்று சின்னத்தொட்டிபாளையம்.  இங்கு வசித்துவரும் சண்முகம் என்பவர் அன்னூரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் வீடுகளுக்கு நேரடியாக சிலிண்டர்களை கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி செல்வி விவசாயக்கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்த எளிய தம்பதினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவள் பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி படித்து வருகிறார். இளையவள் சர்மிளா காரமடையிலுள்ள அரசுப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் மிகுந்த சுட்டியான சர்மிளா கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.


இதனையடுத்து, காரமடையிலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் சர்மிளாவுக்கு எழுதுவது மிகவும் பிடித்தமானது. இந்நிலையில் கடந்த வாரம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவில் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று சர்மிளா எழுதிய கட்டுரைக்கு முதல்பரிசு கிடைத்துள்ளது. முதல்பரிசை வென்ற சர்மிளாவை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கி வாழ்த்தியுள்ளார் கோவை மாவட்ட ஆட்சியர். இதேபோல் முதல்பரிசு வென்று தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த சர்மிளாவுக்கு தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும், மாணவி சர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், மதுரா விஜயம் தீட்டுமளவிற்கு கல்வியில் கோலோச்சியிருந்த கம்பளத்தார் சமூகத்தில், இடைப்பட்ட சில நூற்றாண்டுகள் பெண்களுக்கு இருண்டகாலமாக போய்விட்டது. தற்போது கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ள சர்மிளா எழுத்துலகில் சிறந்த படைப்புகளை படைத்து சாதனை படைத்திட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இதேபோல் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் பல்வேறு தலைவர்களும், கிராம மக்களும் மாணவி சர்மிளாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved