🔴 LIVE | முப்பெரும் விழா 2023


10000 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம்! மே மாதம் அறிவிப்பு வெளியாகிறது!

தமிழகத்தில் 10000 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு; மே மாதத்திற்குள் அறிவிப்பு வெளியாகும்; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித் தனியாக சிலபஸ் வெளியிடப்படும் – பள்ளிக் கல்வித்துறை.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதத்திற்குள் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமனத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10000 க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு விரைவில் நியமனத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத் திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மே 2023ல் நடைபெறும். இதில் 6553 காலியிடங்கள் நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும். இதில் 3587 காலியிடங்கள் நிரப்பப்படும், என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமனத் தேர்வு அறிவிப்பு மே மாதத்திற்குள் வெளியிடப்படும் பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தாள் -2 ல் 15,297 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து தாள் -1 ல், 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் பங்கேற்றனர். அதில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முதலாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் பணி நியமனத்துக்குரிய போட்டித் தேர்வுகள் நடத்த அரசாணை (எண் 149) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது. இந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்துக்குள் வெளியிடப்படும். அதற்கு பிறகு தேர்வு நடத்தப்படும்.

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்விற்குரிய பாடத்திட்டங்கள், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித் தனியாக வெளியிடப்படும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 10,000 காலி இடங்கள் உள்ளன.

இது தவிர, வட்டாரக் கல்வி அலுவலர், கல்லூரி உதவிப் பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved