🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பசுமாடு வளர்க்கலாம்... ஆனால் பால் கறக்கக்கூடாது!...

நீங்கள், உங்கள் வீட்டில் பசுவை வளர்க்கலாம்; ஆனால், பால் கறக்கக்கூடாது..... பால் கறக்க முடியாது...

ஆமாம்... அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் சட்டம் இது தான்.....

1753ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானத்தில் 3,14,889* பசு மாடுகள் வளர்க்கப்பட்டதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பசு மாடுகளை யார் வளர்த்தாலும், பால் கறக்கும் உரிமை மட்டும் ஈழவர்களுக்கு இல்லை என்பது தான் அப்போதைய மன்னர் ஆட்சியின் சட்டம். இங்கே, ஈழவர்கள் என்பது ஒரு குறியீடு மட்டுமே என்பது தான் உண்மை.

தீண்டத்தகாதவர்கள் என்று ஆண்டைகள் கருதிய எந்த சாதியை சேர்ந்த மனிதர்களும் பால் கறக்கவோ அல்லது, பால்/தயிர்/மோர்/ வெண்ணெய்/நெய் போன்ற பசுவிலிருந்து கிடைக்கும் எதையும் ருசிக்கவோ, உண்ணவோ அருந்தவோ முடியாது என்பது தான் நியதி.

1753ம் ஆண்டு, சங்கரன் என்ற ஈழவர், பால் கறந்த குற்றத்திற்காக, 30 பணம் அபராதம் விதிக்கப்பட்டது என்பதை, ஆவணங்கள்** தெரிவிக்கின்றன. ஈழவர்களுக்கு தங்களது வீடுகளில் பசுக்களை வளர்க்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த பசு, கன்றுகளை ஈன்ற உடனே, அந்த பசுவை அருகாமையில் வசிக்கும் நாயர் பிரமுகர் வீட்டில் கொண்டு போய் கொடுத்து விட வேண்டும். பசுவிலிருந்து பால் கறக்கும் உரிமை நாயர்களுக்கு மட்டுமே உண்டு.

ஈழவர்கள் பால் கறந்து விட்டால், நம்பூதிரிகள் போன்ற உயர்ந்த சாதியை சார்ந்தவர்களுக்கு தீட்டு என்பது தான் காரணம் என்பதை இங்கே எழுதாமலேயே புரிந்து கொள்ளலாம். 

ஆனால், இதற்கெல்லாம் ஒரு நாள் முடிவு வந்தது.

ஆமாம்...

இது போன்ற கொடிய சட்டங்கள், நீடித்து தொடர, வரலாறு அனுமதிப்பதில்லை என்பது கூட வரலாறு தான்.

அங்குலம் அங்குலமாக, ஆனால், உறுதியாக, அடி மேல் அடி வைத்து, சமூக கொடுமைகளை தகர்த்து எறிந்தார்கள் நமது முன்னோடிகள்!

1875ம் ஆண்டு...

இப்போதைய கேரள மாநிலம் சேர்த்தலை என்ற ஊர், தண்ணீர் முக்கம் என்ற இடத்தில், வசித்து வந்த உழுதும்மேல் கிட்டன் என்ற ஈழவ இளைஞர், இந்த கொடிய சட்டத்தின் முனையை ஒடித்து வீசி எறிந்தார்.

உழுதும்மேல் கிட்டன் வீட்டுக்கு அருகில் சில பசு மாடுகள் கறவைக்கு தயாராக இருத்தன. ஈழவர்களில், தைரியமும், உடல் வலிமையும் கொண்ட பிரமுகர்களை நேரில் சென்று சந்தித்தார், உழுதும்மேல் கிட்டன்.

தீவிரமாக ஆலோசனை நடத்தினார் கிட்டன். அனைவருக்கும் ரகசியமாக தகவல்கள் சென்றன.... மறுநாள் காலை, தங்களது வீடுகளில் வளர்த்து வந்த பசுக்களை கறந்து, பாலை தாங்களே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தைரியமூட்டினார் உழுதும்மேல் கிட்டன்.

திட்டமிட்ட படியே, அனைத்தும் நடந்தது...

கறவைக்காக மாடுகள் தங்களது வீட்டுக்கு வரும் என்று காத்திருந்த நாயர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. அவ்வளவு தான், கொந்தளித்த பத்துக்கும் மேற்பட்ட நாயர்கள், பசுக்கள் நின்றிருந்த வீடுகளுக்கு சென்றனர்.

இதை ஏற்கனவே எதிர் பார்த்த ஈழவர்கள் உழுதும்மேல் கிட்டனின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

அங்கே, தைரியமாக, அந்த நாயர்களுக்கு அருகில் சென்று நில்லுங்கள்" என்று உத்தரவிட்டார் உழுதும்மேல் கிட்டன் என்ற அந்த போராளி! சற்று சுதாரித்துக்கொண்ட பின்னர் தான், நாயர் பிரமுகர்கள் தாங்கள் அனைவரும் ஏறத்தாழ அறுபது உடல் வலிமை மிக்க ஈழவ இளைஞர்களால் சூழப்பட்டுள்ளோம் என்பதை புரிந்து கொண்டார்கள்.

அப்புறம் என்ன?,  நாயர் பிரமுகர்கள் தங்களது உயிர்களை பலி கொடுக்காமல் தப்பி ஓடினர். ஆனாலும் அவர்கள் விடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு செலவுக்காக நிதி வசூலித்து வழக்கை தொடர்ந்து நடத்தி இறுதியில் வெற்றியும் பெற்றார் உழுதும்மேல் கிட்டன்.

அன்றிலிருந்து, பசு மாடுகளை யாரும் கறக்கலாம் என்ற நிலையும் வந்தது. வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும், உழுதும்மேல் குட்டன் போன்ற சமூக விழிப்புணர்வு போராளிகளின் வீரமும், தியாகமும் பொறிக்கப்பட்டுள்ளன.

அறியாமையிலும், அடிமைத்தனத்திலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கி கிடந்த சமூகத்தை, விழிப்புறச் செய்த உழுதும்மேல் கிட்டன் போன்ற தியாகிகளால் தானே, வரலாறு படைக்கப்படுகிறது.

*P.பாஸ்கரன் உண்ணி அவர்கள் எழுதிய, பத்தொன்பதாம் நூற்றாண்டிலெ கேரளம் என்ற மலையாள நூலில், பக்கம் 42-43......

**மதிலகம் ரெக்கார்ட்ஸ் (Mathilakam Records) என்ற, ஓலைச்சுவடிகள் தொகுப்பு(சுருணை) எண் 812ல், ஓலை எண் 408ல் இந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, திருவனந்தபுரம் ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved