🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மீண்டும் வன்னியர் உள்இடஒதுக்கீடா? - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருடன் நேரில் சந்திப்பு.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் 116 சாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் ஒருசாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு அரைமணி நேரம் முன்பாக வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டால்  2021-22 மற்றும் 2022-23 கல்வியாண்டில் பொறியியல், மருத்துவம், கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமுதாயங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நூற்றுக்கணக்கான வாய்ப்புகள் பறிபோனது. இதேபோல் ஆசிரியர் தேர்வு வாரியம், டிஎன்பிஎஸ்சி ஆகிய அமைப்புகள் நடத்திய தேர்வுகளில் இச்சமுதாயங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பணியிடங்கள் கிடைக்காமல் போனது.


இதற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் வன்னியர் இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதனையடுத்து உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்ற வழக்கிலும் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களை அமர்த்தி வன்னியர் இடஒதுக்கீடுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தது. இருந்தும் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் 8/2021 உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக இருந்தபடியால் அச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப்பிறகு தமிழக முதல்வரை சந்தித்த பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் உடனடியாக புள்ளி விபரங்களை திரட்டி ஓரிரு மாதங்களில் மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தது. தமிழக முதல்வரும் உயரதிகாரிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை காலம் காலமாக குத்தைக்கு எடுத்ததுபோல் அதன் தலைவராக வன்னியர் சமூகத்தினரே நியமிக்கப்பட்டு வந்ததை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாயங்கள் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு சுட்டிக்காட்டி, சர்ச்சைக்கு இடமளிக்காத பொதுவானவரை பிற்படுத்தப்பட்டோர் ஆனையத்தின் தலைவராக நியமிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.


இடஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்துவதற்கு  தொடக்கம் முதல் காரணமாக இருந்துவரும் ஒரு சாதி ஆதிக்கத்தை புரிந்துகொண்ட தமிழக அரசு அதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் அவர்களை நியமித்தது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி வன்னியர் இடஒதுக்கீட்டிற்குத் தேவையான புள்ளிவிவரங்களை திரட்டி இக்குழு பரிந்துரை அளிக்குமென்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. உண்மையில் இக்குழு இடஒதுக்கீடு வழங்கத் தேவையான புள்ளிவிவரங்களைத் திரட்டுவதற்கு போதுமான அளவு ஊழியர்கள் இல்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. அகில இந்திய அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினாலன்றி உள்ஒதுக்கீடு சாத்தியமில்லை. இதை மத்திய அரசு மட்டுமே செய்யமுடியும் என்பதால் தமிழகம், பிகார் உள்ளிட்ட மாநில அரசுகள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன.

எதார்த்த நிலமை இவ்வாறு இருக்க வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக்கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கையின்போது வன்னியர் உள்ஒதுக்கீடு வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துப் பேசினர். அதற்கு பதிலளித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களும், தமிழக முதல்வர் அவர்களும் கடந்த கால ஆட்சியில் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல் தங்கள் அரசு செய்யாது என்றும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி எல்லா சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கும், அப்போது வன்னியர் சமூகத்திற்கும் மக்கள் தொகைக்கேற்ப உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுமென்று வாக்குறுதியளித்தனர்.

வன்னியர் சமூகத்திற்காக பேச பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையில், இதர 115 சாதிகளுக்காக இதுவரை சட்டமன்றத்தில் குரல்கொடுக்க யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் உள்இடஒதுக்கீடு கோரிக்கை எல்லா சமூகங்களும் கோருவதால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தித்தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்திப் பேசினார்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரின் இந்தநிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே  இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று (17.04.2023) காலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் எஸ்.இராஜகண்ணப்பன் அவர்களை சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் 10க்கும் மேற்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினர்.


சுமார் பதினைந்து நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாண்புமிகு அமைச்சர் உள்ஒதுக்கீடு விவகாரம் சந்தித்துவரும் சிக்கலை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் தமிழக முதல்வரின் அரசு அனைத்து சாதியினருக்கும் பொதுவானது என்றும், அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென்பதே என்னுடைய தனிப்பட்ட விருப்பமாகவும், முதல்வரின் விருப்பமுமாகவும் இருப்பதாக தெரிவித்தார். எனவே அரசு இந்த விசயத்தில் மிகுந்த நிதானமாகவே செயல்படுமென்றும், கடந்த ஆட்சிபோல புள்ளிவிவரங்களை சேகரிக்காமல் இடஒதுக்கீடு வழங்காது என்றும் உறுதியளித்தார். 

இந்த சந்திப்பின்போது தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் பெ.இராமராஜ், செந்தில்குமார் இராமராஜ்,  முக்குலத்தோர் அமைப்பின் சார்பில் ஒசூர் ராமசாமி, பள்ளிக்கரணை ஜெயராமன், சீனிச்சாமி பாண்டியன், வீரசைவர் சார்பில் கனகராஜ், சுந்தரவடிவேல், மருத்துவர் சமுதாயத்தின் சார்பில் திருப்பூர் ராஜேந்திரன், நரிக்குறவர் சார்பில் சக்திவேல், முத்தரையர் சார்பில் ராசிராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved