🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி!

"சமூக நீதி மற்றும் அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் திட்டங்கள் முழுமையடைய சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்" என்று காங்கிரஸ் தலைவர கார்கே பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  வலியுறுத்தியுள்ளார்.

கார்கே மற்றும் ராகுல் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள கர்நாடகா மாநிலத்திலுள்ள கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல்காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கார்கே அந்தக் கடிதத்தில், "சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை புதிதாக நடத்தவது தொடர்பாக, நானும் எனது சகாக்களும், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் பல முறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். கடந்த 2011-12-ஆம் வருடம் அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 25 கோடி குடும்பங்களில், சமூகப் பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. பல்வேறு காரணங்களால் அந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. 2014-ல் ஆட்சி மாறி உங்கள் அரசு பதவிக்கு வந்த பின்னரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் அவை இன்னும் வெளியிடப்படவில்லை.

புதிய சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் பல்வேறு திட்டங்களுக்கான அர்த்தங்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட தரவுகள் முழுமை பெறாது என நான் அஞ்சுகிறேன். இந்தக் கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் கடமை. ஏற்கெனவே 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை. எனவே சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விரைவாக நடத்திட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கார்கேவின் இந்தக் கருத்தைஆமோதித்துள்ள ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவொன்றில், "பிரதமர் அவர்களே.. பின்தங்கியவர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பலம் அளிக்கப்பட வேண்டும் என்பது வெறும் வார்த்தைகள் மட்டும் இல்லை. அதற்காக நீங்கள் இந்த மூன்று விஷயங்களைச் செய்யுங்கள். 2011 மக்கள் தொகை விவரங்களை வெளியிடுங்கள், நாட்டில் எவ்வளவு பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிவியுங்கள், 50 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, தலித், பழங்குடியின மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிரா மாநில அரசு 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் சரியானதோ, நம்பகத்தமையுடயதோ அல்ல என்ற மத்திய அரசின் வாதத்தை அடுத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

இருந்தபோதிலும், நாட்டில் முதல்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற கோரிக்கை தேசிய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பது, தற்போது இல்லையென்றாலும், வரும்காலங்களில் இக்கோரிக்கை மேலும் வலுப்பெற்று சாதிவாரிக்கணக்கெடுப்பு நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved