🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இனி 12 மணி நேரம் வேலை! சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்கிறதா திமுக?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று (21.4.2023) அவசர அவசரமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள ஒரு சட்டத்தால் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டுள்ளது திமுக அரசு.

இன்று கொண்டுவரப்பட்ட மசோதா தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்துவதற்கு வழிவகை செய்கிறது. கூட்டணிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் வெளிநடப்புகளுக்கிடையே குரல் வாக்கெடுப்புமூலம் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது திமுக அரசு.

‘‘வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும்  என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தத் தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது சம்பந்தமாகக் குழு அமைக்கப்படும்‘’ என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் பேசுகையில்,

‘‘வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். இந்த நேரத்தை 4 நாள்களில் முடித்துவிட்ட பிறகு, அய்ந்தாவது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டம் இல்லை. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்‘’ என்று கூறியுள்ளார்.

8 மணிநேர வேலைக்காக பாட்டாளிகள் நடத்திய மாபெரும் புரட்சி, பல சாம்ராஜ்ஜியங்களின் வடிவங்களையும், நாட்டின் எல்லைகளையும் மாற்றியமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொழிலாளர் புரட்சிகள் ஏதும் நடைபெறவில்லை என்றாலும், நாளொன்றுக்கு 14 மணிநேரம் உழைப்பு என்ற ஒரு காலகட்டம் இருந்ததை. 1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர்  அவர்களின் முயற்சியால் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர் பிரதிநிதி, அரசுப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவில் முத்தரப்பு ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர் பணிநேரம் 8 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது என்பது வரலாறு.

சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானது. இதில் வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், நலம், குடும்ப நலன் ஆகியவற்றிற்கு முக்கியத்தும் அளிக்கப்பட வேண்டும். 

விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே. மே 1 ஆம் நாளை தொழிலாளர் தினமாக அறிவித்து தேசிய விடுமுறை பெற்றுக்கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தொழிலாளர் விரோத நடவடிக்கையில் இறங்கியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மென்பொருள்துறையில் பெண்களுக்கான வாய்ப்புகள் அபரிதமாக வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் ஏற்கனவே 12 மணிநேரத்திற்கும் அதிகமாக உழைத்து வருகின்றனர். அதேபோல் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் உடலுழைப்பு அல்லாத சூப்பர் வைசர் முதல் அதிகாரிகள் வரையிலானவர்களுக்கான வேலை நேரம் என்பதே வரையறையில்லாமல், எந்த நேரமும் அலுவலக வேலைகுறித்தே சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஏற்கனவே குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம், குழந்தையின்மை, உடல்பருமன், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திட்டுள்ளது.

நவீன முதலாளித்துவத்தின் கோரப்பசிக்கு தொழிலாளர்களை பலிகொடுக்கத் துணிந்துள்ள திமுக அரசு, தான் தம்பட்டமடித்துக்கொள்வதுபோல் உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்த அரசா என்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. திமுக அரசின் இந்த தொழிலாளர் விரோதப்போக்கு அக்கட்சிக்கும் முதல்வருக்கு வரலாற்றில் நீங்காத அவப்பெயரை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. 

தொழிலாளர்களின் இரத்ததை உறிஞ்சும் இச்சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் திமுக தனக்குத் தானே சவக்குழியை தேடிக்கொள்கிறது என்பதை வருங்காலம் உணர்த்தும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved