🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு! வாழ்த்துகள்.

மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு நேற்று வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதாதால் அவர் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மதிமுகவைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், நேற்று காலை மதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ, பூர்த்தி செய்த வேட்பு மனுவை தேர்தல் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பிரியகுமார், ஆ.வந்தியதேவன், ஆவடி அந்திரிதாஸ், தாயகம் ருத்திரன் ஆகியோரிடம் வழங்கினார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. எனவே மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, அவைத்தலைவர் பதவிக்கு அர்ஜுன் ராஜ், பொருளாளர் பதவிக்கு செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா, ஆடுதுறை மணி, ராஜேந்திரன், ரொஹையா சேக் முகமது, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பதவிக்கு கிருஷ்ணன், ராணி செல்வின், கே.ஏ.எம்.நிஜான், கே.கழக குமார், ஜெய் சங்கர், சுப்பையா, பூவை பாபு, தணிக்கைக்குழு தலைவர் பதவிக்கு அருணாசலம், பழனிச்சாமி, அருணாசலம், செந்தில் செல்வன், பாசறை பாபு, குணா, பாண்டியன் ஆகியோர் பூர்த்தி செய்த வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் குறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.

தலைமை கழக நிர்வாகிகள், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கூடுதலாக எந்த பொறுப்புகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, போட்டி இல்லை என்று அறிவிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு முறைப்படி வரும் 3ம் தேதி வெளியிடப்படுகிறது.

மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள வைகோ அவர்களுக்கு சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய  நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நலச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொதுவாழ்வில் பொன்விழா கண்ட தியாக வேங்கை வைகோ தமிழ், தமிழர் நலன், மண் சார்ந்த அரசியல், சுற்றுச்சூழல், ஈழத் தமிழர் நலன் என அவர் தொடாத பிரச்சனைகள், அதற்காக தன் உடலை வருத்திக்கொள்ளும் போராட்டங்களையும் முன்னெடுத்து அதிகாரமில்லாமலும் அழுத்தமான அரசியலை முன்னெடுத்து வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை வரலாற்றில் பதிய வைத்தவர். கட்டபொம்மனுக்கு தபால் தலை,  கட்டபொம்மன் வாரிசு குருசாமி நாயக்கரை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியது, சட்டமன்ற தேர்தல்களில் கம்பளத்தாருக்கு வாய்ப்பு என கம்பளத்தார் வரலாற்றில் இரண்டரக் கலந்துவிட்ட வைகோ அவர்கள் மதிமுக பொதுச்செயலாளராக  தேர்வாகியுள்ளது ஒட்டுமொத்த கம்பளத்தாருக்கும் மகிழ்ச்சியளிப்பதாகவும், வைகோ அவர்கள் நீடுடி வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved