🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஐந்து பேரழிவுகளை சந்தித்த உலகின் ஆறாவது பேரழிவுக்கு மனிதகுலமே காரணம்!

உலகின் ஐந்து பேரழிவுகள் !

“நாம் ஒரு உலக அழிவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...!”

விஞ்ஞானிகள் இதனை “ஆறாவது பேரழிவு” என்றழைக்கின்றனர். உலக உயிரினங்களின் வரலாற்றை எடுத்து பார்த்தால், அதில் ஐந்து பேரழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன.

சுமார் 444 மில்லியன் வருடங்களுக்கு முன், அப்போது உலகில் வாழ்ந்த 86% உயிரினங்களை அழித்த “ஒர்டோவிஷியன் பேரழிவு” நிகழ்ந்தது. அதிக உயிரினங்களை காவு கொண்ட உலக பேரழிவுகளில் இரண்டாவது இடத்தினை இது வகிக்கிறது.

சுமார் 375 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, அப்போதைய உலகின் 75% உயிரினங்களை அழித்த “டெவோனியன் பேரழிவு” நிகழ்ந்தது.

அதற்கடுத்ததாக, ஏறத்தாழ 25௦ மில்லியன் வருடங்களுக்கு முன், அன்றைய உலகின் 96% உயிரினங்களை அழித்த “பெர்மியன் பேரழிவு” நிகழ்ந்தது. இதுவே அதிக சதவீத உயிரினங்களை காவுகொண்ட பேரழிவாகும் !

அதே போல, நான்காவதாக, 2௦௦ மில்லியன் வருடங்களுக்கு முன், 80% உயிரினங்களை அழித்த “த்ரயாசிக் பேரழிவு” இடம்பெற்றது.

இந்த வரிசையில், இறுதியாக, 65 மில்லியன் வருடங்களுக்கு முன், உலகின் 76% உயிரினங்களை அழித்த “க்றேடேஷ்யஸ் பேரழிவு” இடம்பெற்றது. இதுதான் டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது.

இந்த ஐந்து பேரழிவுகளுக்கு அடுத்தபடியாக, நாம் வாழ்ந்துவரும் இந்த காலகட்டத்தில், உலகம் அதன் ஆறாவது பேரழிவை காணப்போகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நாம் வாழும் இந்த காலகட்டம் “ஹொலோசீன்” காலம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே இதற்கு ஹோலோசீன் பேரழிவு என்று பெயர் வைத்திருக்கிறார்கள் !

ஒவ்வொரு பேரழிவுக்கும், விண்கல் மோதுகை, எரிமலை வெடிப்பு, புவியியல் மாற்றம், காலநிலை என்று பல காரணிகள் இருந்திருக்கின்றன. இனிமேல் நிகழப்போகும் அல்லது இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆறாவது பேரழிவுக்கு மனிதனே காரணமாகப்போகிறான்...!

அதுமட்டுமல்ல, இயற்கையாக நிகழும் அழிவுகளை விட நூறு மடங்கு அதிக வேகத்தில் இந்த அழிவு இடம்பெற்று வருகின்றது !ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமான தாவர மற்றும் விலங்கு உயிரின வகைகள் இந்த உலகை விட்டு நிரந்தரமாக அழிவடைந்து வருவதாக ஒரு கணிப்பு சொல்கிறது.

நூறு உயிரினங்களின் பெயர்களை சேர்ந்தாற்போல கூறச்சொன்னாலே கொஞ்சம் தடுமாறுவோம், அதெப்படி ஒரு நாளில் மாத்திரம் நூறு இனங்கள் அழியலாம் !? அதைத்தான் உயிரியல் அறிஞர்களும் சொல்கிறார்கள்.

“அழிவதில் மிக கொடியது எதுவென்றால், அப்படி ஒரு உயிரினம் வாழ்ந்தது தெரிய வரும் முன்னரே, அந்த இனம் முற்றிலுமாக அழிந்துபோவதுதான் !"

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved