🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மத்திய மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பான சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.


நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள முற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திரும்பப்பெறக்கோரியும் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் பேசிய பல்வேறு சமுதாயங்களின் தலைவர்கள் பேசியதாவது, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கிரீமிலேயர் (வருமான வரம்பு) கடந்த ஐந்து ஆண்டுகளாக  உயர்த்தப்படாமல் எட்டு லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. ஆனால் முற்பட்ட பிரிவினருக்கு வருமான வரம்பு ரூபாய் எட்டு லட்சம் மற்றும் ஐந்து ஏக்கர் நிலம், ஆயிரம் சதுரடி வீடு உள்ளவர்கள் ஏழைகள் என்று வரையறுத்துள்ளது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான வருமான வரம்பை கடந்த ஐந்தாண்டுகளாக உயர்த்தாமல் வைத்துள்ளதின் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் இடஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி முப்பதாண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 15 சதவீதமானோருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர். இது ஒன்றிய அரசுக்கு இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் மீதான அக்கறையின்மையையும், உயர்சாதிகளுக்கான ஆதரவு மனப்பான்மையையும் காட்டுவதாகவும் தெரிவித்தனர். 

மேலும் வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக போதிய தரவுகள் இல்லாமல் வன்னியருக்கு உள்இடஒதுக்கீடு வழங்க முயற்சிகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்.


இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியின் தலைவர் கொ.நாகராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பு செயல்தலைவர் பெ.இராமராஜ், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், மண்டல பொறுப்பாளர்கள் குருசாமி, ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved