🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முதல்வர் நிவாரணநிதிக்கு ரூ.10000/- வழங்கியது சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்.

அன்புள்ள சொந்தங்களே, உலகநாடுகள் சின்னஞ்சிறிய கண்ணுக்குத்தெரியாத கொரோனா வைரஸுக்கு எதிராக மூன்றாம் உலக யுத்தத்தை நடத்திக்கொண்டு வருவதை நாம் அறிவோம். உலகமே எதிர்கொள்ளும் இந்த இக்கட்டான சூழலில் நாடாண்ட பரம்பரைகளின் பங்களிப்பென்ன என்பது கேள்விக்குறியது. நாம் சாதிச் சங்கமாக, நமது இனத்திற்காக உழைத்து வந்தாலும், சக மனிதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நமது சங்கத்தின் இலக்கு, நமக்கான உரிமைகளைப் பெறுவதும், பெற்றுள்ள உரிமைகளையும், பெறப்போகும் உரிமைகளையும் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வகையில் எதிர்கால சந்ததியினரை உருவாக்குவது மட்டுமே. சக மனிதன் இயலாமையால் துன்பப்படும் பொழுது அவனது வாய்ப்புகளை தட்டிப்பறிப்பவர்களல்ல நாம்.


அல்லும் பகலும் உழைக்கும் ஆட்சியாளர்கள், குடும்பங்களை மறந்து உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், தூக்கம் மறந்த காவல்துறையினர் என அனைவரும் நமக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம் அன்புசால் உறவுகளே!! நாம் அரசுகளிடம் உரிமைகளை பெறுவதில் பின்தங்கியிருக்கலாம், ஆனால் நெருக்கடியான நேரத்தில் கை கொடுப்பதில் முதன்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டாமா?

நாம் ஒன்றும் மற்ற சமுதாய சங்கங்கள் போல் கோடீஸ்வரர்களைக் கொண்ட சங்கமும் அல்ல, சமுதாயமும் அல்ல. நம் இலக்கை நோக்கி பயணிக்கும் வழியில் எத்தனை இன்னல்களைக் கடந்து வந்துள்ளோம். சங்கத்தின் கடன் சுமையோ பல லட்சங்கள், இருந்தாலும் கொண்ட லட்சியங்களுக்காக, கடன்பட்ட லட்சங்களை அலட்சியம் செய்து பயனிக்கின்றோம். நாம் கொடுக்கப்போவதும் லட்சங்களில்லை,.ஆனால் இருப்பதைக்கொடுப்பதில் கம்பளத்தாருக்கு ஒருபோதும் அச்சங்களில்லை.

முதலமைச்சர் நிவாரணநிதிக்கு, கொடுக்கவேண்டுமென்றார் ஒருங்கிணைப்பாளர் தங்கம்….

சங்கத்திலோ பணப்பஞ்சம், பொருளாளரிடம் அடைந்தோம் தஞ்சம்…

சங்கத்தில் இருந்த கொஞ்சம், அவரிடம் இருந்த கொஞ்சம்..

நாம் கொடுத்து தீரப்போவதில்லை அரசின் பஞ்சம்…

ஆனால்

நாம் கொடுத்துவிட்டோம் என மன ஆறுதல் மிஞ்சும் ..

முதலமைச்சரின் நிவாரணநிதிக்கு தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான இராஜகம்பளத்தார் சார்பில் ரூபாய்.10000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved