🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு - சத்தமின்றி சாதித்த வட்டச் செயலாளர்!

கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களின் நோய்தீர்க்கும் ஆலயமாகவும், கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி தாய்-சேய் இறப்பைக் குறைப்பதிலும், ஊட்டச்சத்து மிக்க சிசுக்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பது ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள். இப்படி எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிப்போன ஆரம்ப சுகாதார நிலையம் மாநகராட்சிப் பகுதிகளில் நகர்ப்புற நலவாழ்வு மையம் என்று அழைக்கப்படுகிறது. இது தங்கள் பகுதியில் இல்லையே என்பது கோவை மாநகராட்சிக்குட்பட்ட 97 வது வார்டு ஈச்சனாரி பகுதி மக்களின் ஏக்கம். இதை சவாலாக எடுத்து மக்களின் துயர்துடைத்துள்ளார் ஆளும் கட்சியின் வட்டச் செயலாளர் ஒருவர். இதுகுறித்த விரிவான செய்தியாவது, 


கோவை மாநகராட்சியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளதால் இங்கு அதிகமாக நடுத்தர மற்றும் ஏழை எளிய தினக்கூலிகள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினோர் தமிழக அரசின் ஆரம்ப சுகாதார மையத்தை நம்பியே வாழ்கின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக இப்பகுதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையம் சென்றடைய ஐந்துகிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் வயதான முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுவர நீண்ட நேரம் ஆவதோடு, துணைக்கும் ஒருவரை அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. பெரும்பாலும் தினக்கூலிகளாக இருப்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்காகவே குடும்பத்தில் ஒருவர் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. விலைவாசி விஷம் போல் ஏறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் விடுமுறை எடுத்து, வாடகை வாகனம் வைத்து நோயாளிகளை/கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டியிருப்பதால் பெறும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனைப்போக்க தமிழக அரசு தங்கள் பகுதியிலேயே ஒரு சுகாதார மையத்தை ஏற்படுத்தித்தர வேண்டுமென்பது அந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கை.


கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சிப் பிரமுகர் ஒருவர் மாநகர மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் நிறைவேறுமென்று அப்பகுதி மக்கள் நம்பிக்கையோடு இருந்த நிலையில், வேறுபகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பளித்ததால் தங்கள் விருப்பம் நிறைவேறுமா என்ற அச்சம் நிலவிவந்தது. ஆனால் அவர்களின் அச்சத்திற்கும் மாறாக ஒரே ஆண்டில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ளார் அதேபகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சியின் வட்டச் செயலாளர் ஈச்சனாரி மகாலிங்கம்.


இப்பிரச்சினை சம்மந்தமாக கடந்த ஆண்டு கோவை வந்திருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களிடம் மனு அளித்திருந்தார் ஈச்சனாரி மகாலிங்கம். மேலும் மக்களின் இக்கோரிக்கை நிறைவேறிட சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்துமாறு கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன் மற்றும் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இவர்களின் அனைவரின் ஒத்துழைப்போடும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலோடும் உடனடியாக புதிய நகர்ப்புற மக்கள் நல வாழ்வு மையம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, கட்டுமானப்பணிகளும் நிறைவு பெற்று ஒரே ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகராட்சி 97-வது வார்டிற்குட்பட்ட ஈச்சனாரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற மக்கள் நல மருத்துவமனையை கடந்த 06.06.2023 அன்று தமிழக முதல்வர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி மூலமாக திறந்து வைத்தார். 

இம் மருத்துவமனை அமைய பெருமுயற்சி எடுத்துக் கொண்ட 97-வது வட்ட கழக செயலாளர் மகாலிங்கம் அவர்களுக்கும், நிறைவேற்றிக்கொடுத்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா துணை மேயர் வெற்றிச் செல்வன் மற்றும் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ஆகியோருக்கும், உறுதுணையாக இருந்த 100வது வார்டு மாமன்ற உறுப்பினர் இரா.கார்த்திகேயன் அவர்களுக்கும் ஈச்சனாரி பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved