🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிச்சன்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு- கோட்டாட்சியருக்கு ரூ 10000 அபராதம்!

சாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மனுவை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூபாய் 10000 அபராதம் விதித்துள்ளது உயர்நீதிமன்றம். இதுகுறித்த விவரம் வருமாறு,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார் வருவாய் கோட்டாட்சியர். இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விண்ணப்பத்தை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும்  ஆன்லைன் விண்ணப்பத்தின் மீது 30 நாட்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதேபோன்று திருச்சியில் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவரின் சாதி சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை நிராகரித்ததற்காக கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கின் விபரம் வருமாறு,

திருச்சியைச் சேர்ந்த நித்யா, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.

இவரது மனுவை நிராகரித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து, தனது மகன், மகளுக்கு காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி நித்யா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் திருச்சி கோட்டாட்சியரிடம் இருந்து சாதி சான்றிதழ் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் மனுதாரர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது மகன், மகளுக்கு இணையம் வழியாக தந்தையின் சாதியான காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்களின் குழந்தைகளுக்கு தந்தை அல்லது தாயின் சாதி அடிப்படையில் சான்றிதழ் பெறலாம் என அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்நிலையில் கோட்டாட்சியர் சாதி சான்றிதழ் வழங்க மறுத்தது தவறு. அவரது உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு கோட்டாட்சியர் வழங்க வேண்டும். மனுதாரரின் மனுவை சட்டப்படி பரிசீலித்து சாதி சான்றிதழ் தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

காட்டுநாயக்கன் சமூகத்தைப்போன்றே தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கும் பல்வேறு மாவட்டங்களில் டிஎன்டி சான்றிதழ் தருவதில் அதிகாரிகள் தயக்கம்காட்டி வருகின்றனர். இதற்கும் நீதிமன்றம் மூலமே தீர்வுகாணப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved