🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டி.என்.டி.ஒற்றைச்சான்றிதழ் - முதல்வரின் வாக்குறுதி என்னாயிற்று?

தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடக்கோரி தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட டிஎன்டி சமூகங்கள் வலியுறுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் என்.பவுல்ராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் பட்டியலிலுள்ள 68 சாதியினருக்கு 1979 வரை வழங்கப்பட்டுவந்த டிஎன்டி சாதிச்சான்றிதழ் 1979 முதல் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. இதனால் மத்திய அரசிலிருந்து இம்மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பல்வேறு சலுகைகளை இழந்துள்ளது. கல்விக்கு போதிய முக்கியத்துவம் தராத காலமாக இருந்தபடியால் அதிக எண்ணிக்கையில் படித்தவர்களோ, இச்சமூகங்களை வழிநடத்தும் தலைமையோ இல்லாத காரணத்தாலும், ஒவ்வொரு கிராமங்களிலும் ஓரிருவரே மேற்படிப்புகளுக்குச் சென்றபடியால் சாதிச்சான்றிதழின் அவசியம், தேவை குறித்து அறியாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் 80 களின் மத்தியில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், விழிப்புணர்வு காரணமாக சாதி குறித்தும், சாதிசான்றிதழ் குறித்தும் மக்களுக்கு புரிதல் ஏற்பட தொடங்கியது.

இதன்பிறகும் நீண்டகாலம் விழிப்புணர்வு ஏற்பட்டுவிடவில்லை. இந்நிலையில் பிற மாநிலங்களில் டிஎன்டி பிரிவினருக்கு மத்திய அரசு வழங்கிவரும் பலகோடி மதிப்பிலான சலுகை, உதவிகள் மற்றும் சில மாநிலங்களில் டிஎன்டியினருக்கு தனி இடஒதுக்கீடு குறித்தெல்லாம் தெரிந்து கொண்டதின் விளைவாக 2014-இல் இருந்து சீர்மரபினருக்கு தனி சாதி சான்றிதழ் கேட்டு 68 சாதியினரும் ஒன்றிணைந்து போராடத்தொடங்கினர். அதுவரை MBC சான்றிதழ்களையே அதிகாரிகள் வழங்கி வந்தனர். நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக 2019-இல் அன்றைய அதிமுக அரசு டிஎன்டி சான்றிதழ் வழங்குவதாக முதலில் ஒப்புக்கொண்டு, அதன்பின் எதற்கும் பயனற்ற வகையில் டிஎன்டி/டிஎன்சி என்று இரண்டு சான்றிதழ்களை வழங்கியது. எனினும் இதை முதற்கட்ட வெற்றியாக எடுத்துக்கொண்ட சீர்மரபினர் நலச்சங்கம்  டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தது.

இந்நிலையில் 2021 வரை எம்பிசி பட்டியலில் சீர்மரபு வகுப்பினர் உள்ளிட்ட 116 சாதிகளோடு இடம்பெற்றிருந்த வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் தனியாக 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய காரணத்தால், ஒற்றைச்சான்றிதழ் போராட்டம் திசைமாறி இருக்கின்ற இடஒதுக்கீட்டை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டமாக மாறியது. அது பலகட்ட வழக்குகளைச் சந்தித்து இறுதியில் 20 சதவீத இடஒதுக்கீடை மீட்டுக்கொண்டுவந்தது சீர்மரபினர் நலச்சங்கம்.

வன்னியர் உள்இடஒதுக்கீடை எதிர்த்து அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களோடு சீர்மரபினர் நலச்சங்கம் இணைந்து உருவாக்கிய சமூகநீதி கூட்டமைப்பு 10.5 இடஒதுக்கீடு, உயர்சாதி ஏழைகளுக்கு கொடுக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றிற்காக நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் போராட்டங்களை நடத்தி மகத்தான சாதனைகளை செய்துள்ளது. இவ்வமைப்பின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 07 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது.

இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இரண்டாண்டுகள் கடந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அறிவித்த இன்றைய தமிழக முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இதுவரை தமது வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்துவருகிறார். இன்னும் பத்தே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால், சீர்மரபினர் நலச்சங்கம் மீண்டும் ஒற்றைச்சான்றிதழ் கோரி தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக தொடங்கி, மக்களைத் திரட்டி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பலகட்டப் போராட்டங்களை நடத்திட தயாராக வேண்டும். தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து ஒற்றைச் சான்றிதழ் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வுகான சீர்மரபினர் நலச்சங்கமும், அதில் இடபெற்றுள்ள சமுதாய சங்களும் முனைப்புக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கியயில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved