🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பற்றி எரியும் மணிப்பூர்-நடப்பது என்ன?

பற்றி எரியும் மணிப்பூர்-நடப்பது என்ன?

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களின் பரஸ்பர ஒற்றுமை இத்தீயில் அழிந்து வருகிறது.

மெய்தேயி, குகி மற்றும் நாகா சமூகத்தினர் பழைய பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் தற்போது எரிந்துவருகிறது.

பரஸ்பர நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், நம்பிக்கையின்மை தான் எங்கும் நிறைந்திருக்கிறது.

உண்மை என்னவெனில், இந்தியாவின் வடகிழக்குமாநிலமான மணிப்பூரில் இரு சமூகங்களுக்குள் எழுந்த சாதிப் பிரச்னை கடந்த ஒன்றரை மாதங்களாக நீடித்து வருகிறது. தொடர்ந்து பதற்றமும் நிலவிவருகிறது.

மெய்தேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 390 பேர் காயமடைந்துள்ளனர். 

இருப்பினும் இந்த வன்முறைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

உள்நாட்டுப் போராக மாறியுள்ள மணிப்பூர் கலவரங்கள்

மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் அவர்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தான் தற்போதைய கலவரத்திற்கான காரணமாக இருக்கிறது.

கடந்த மே மாதம் 3ம் தேதியிலிருந்து 6ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையின் போது மெய்தேயி மக்கள் குகி மக்களையும், குகி மக்கள் மெய்தேயி மக்களையும் குறிவைத்துத் தாக்கினர்.

23 வயதான அலெக்ஸ் ஜாம்கோதங் என்பவர், குகி மக்கள் அதிக அளவில் வசிக்கும் சுரசந்த்பூரில் நடக்கும் வன்முறைகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவராக இருந்தார். தலைநகர் இம்ஃபாலில் இருந்து இரண்டு மணிநேரப் பயணத்தில் சுரசந்த்பூரை அடைய முடியும்.

ஒரு நாள் திடீரென ஒரு கட்டடத்தில் இருந்து பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு அவரது நெஞ்சைத் துளைத்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு செல்லும் முன்னரே பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

அதிலிருந்து அலெக்ஸ் ஜாம்கோதங்கின் அம்மாவால் ஒரு நாள் கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அவர் அழுதுகொண்டே இருக்கிறார்.

அலெக்ஸின் அப்பா ராணுவத்தில் பணியாற்றிய நிலையில் அவரது சகோதரர் இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றுகிறார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே தம்பியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற முடியும் என அவர் தெரிவித்துவிட்டார்.

"எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்கள் வாழ்க்கையே பறிபோய்விடும் நிலைதான் காணப்படுகிறது. அது நடக்கும் போது நாங்கள் இறந்துவிடுவோம். பழங்குடியின மக்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்காவிட்டால் நாங்கள் அதை ஏற்கமாட்டோம். மெய்தேயி மக்களும் ஏற்கமாட்டார்கள். இப்போது நடக்கும் வன்முறைகள் ஒரு உள்நாட்டுப் போர் தான். அரசுக்கு எதிராக பொதுமக்கள் போர் தொடுத்துள்ளனர். கோரிக்கைகளை ஏற்கும் வரை, உயிரிழந்த உடல்களை சவக்கிடங்கில் இருந்து யாரும் வாங்க மாட்டார்கள்," என்கிறார் அவர்.

கடந்த மாதம் வன்முறை தொடங்கியபோது, ​​காவல் நிலையங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

மணிப்பூர் இப்போது இரண்டு பிரிவுகளாக உடைந்துகிடக்கிறது.

இதில் ஒரு பிரிவு மெய்தேயி மக்கள். மற்றொரு பிரிவு குகி மக்கள்.

தற்போதைய வன்முறைகள் ஒரு நாளிலோ, அல்லது இரண்டு முதல் நான்கு நாட்களிலோ முடிந்துவிடும் வன்முறை அல்ல.

ஆனால், பல வாரங்களுக்கு - மாதக்கணக்கில் நீடிக்கும் இந்த வன்முறைகளில் வீடுகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமான சொத்துக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

எங்கு தவறு நடந்தது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இந்த பிரிவினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆனால் இந்து மதத்தைப் பின்பற்றும் மெய்தேயி சமூகத்தினருக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்கவில்லை. இந்த சமூகத்தில் சிலர் பட்டியலின சாதிகளாக உள்ளனர். வேறு சிலர் பிற்படுத்தப்பட்டோராக உள்ளனர்.

இதனால் குகி சமூகத்தினரிடம் உள்ள நிலங்களை மெய்தேயி சமூகத்தினர் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது தான் மெய்தேயி சமூகத்துக்கும், குகி சமூகத்துக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.

தெளிவாகச் சொன்னால், நிலங்களை வாங்குவதற்கான உரிமைகள் குறித்தே தற்போது இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் பேர் வாழும் மணிப்பூரில், பெரும்பான்மையானோர் மெய்தேயி பள்ளத்தாக்கில் தான் வசித்துவருகின்றனர். ஆனால் குகி சமூகத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்னரே மலைப்பகுதியில் உள்ள நான்கு மாவட்டங்களில் குடியேறி வசித்துவருகின்றனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களின் போது, அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களிடையே குடியேறிய மற்றொரு சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மெய்தேயி இஸ்லாமியர்களும், நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மட்டுமே எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை.

முகாம்களில் தவிக்கும் 50,000 பேர்

மணிப்பூரில் இதற்கு முன் இது போல் வன்முறைகள் நடந்ததற்கான எந்த வித வரலாறும் இல்லை என மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பிரையோரஞ்சன் சிங் கூறுகிறார்.

"உண்மையைச் சொல்லப்போனால் குகி மற்றும் நாகா சமூகத்தினருடன் இணைந்து வாழ்ந்த மெய்தேயி மக்கள் தான் குகி மக்களுக்கு மாநில நிர்வாகத்தில் கூட ஒரு வலுவான இடத்தை அளித்தனர்.

இங்கே இந்துவாக இருக்கும் மக்களின் வரலாறே வேறுவிதமாக இருக்கிறது. மணிப்பூர் மக்கள் ஒருபோதும் மத வேறுபாடுகளைப் பெரிதுபடுத்துபவர்களாக இருந்ததில்லை.

19ம் நூற்றாண்டில் அப்போதைய மன்னராட்சியில் தான் இந்து மதம் மக்களிடையே திணிக்கப்பட்டது. ஆனால் அந்த மதம் பெரிய அளவில் நீடிக்கவில்லை," என அவர் கூறுகிறார்.

ஆனால் தற்போதைய வன்முறைகளில் இருதரப்பிலும் உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பிடங்களை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மெய்தேயி சமூகத்தினரும், குகி சமூகத்தினரும் அடங்குவர்.

இம்ஃபாலில் உள்ள விளையாட்டு அரங்கத்துக்கு அருகில் ஒரு இளைஞர் விடுதி ஒன்று உள்ளது.

அந்த விடுதி தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான தற்காலிக நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

அதிலும் இந்த முகாமில் 40 கர்ப்பிணிகள் தற்போது தங்கியுள்ளனர். வன்முறைகள் தொடங்கிய போதே அவர்கள் இந்த முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.

அதன் பின் முகாமில் இதுவரை நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், அவர்களுடைய குழந்தைகள் இது போன்ற ஒரு சூழ்நிலையில் பிறப்பார்கள் என்று இந்த பெண்கள் கனவிலும் நினைத்ததில்லை.

கிராமத்தின் மீதான தாக்குதலில் தப்பி வந்த மெரைனா சோரம் நிவாரண முகாமை அடைந்தார்.

இங்கே முகாமில் உள்ள மெரைனா என்ற 27 வயதுப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் தற்போது கணவரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளார். அவரது பெண் குழந்தைக்கு வெற்றி எனப்பெயரிட்டு மிகப்பெரும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.

"நாங்கள் அன்றிரவு சாப்பிடுவதற்காகச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது தான் எங்களுடைய கிராமம் தாக்கப்பட்டது. வீட்டிலிருந்து வெளியே ஓடிய அவர், ஆற்று நீரில் சிக்கி பல குழந்தைகள் உதவி கேட்டு அலறியதைப் பார்த்து அங்கே வேகமாக ஓடிச் சென்றார். அடுத்த நாள் அனைவரையும் பிணமாகத் தான் நாங்கள் பார்த்தோம்," என்கிறார் கங்கோக்பி கிராமத்தைச் சேர்ந்த மெரைனா சோரம்.

முன்னாள் மெய்தேயி இந்து அரச குடும்பம்

ஒரு காலத்தில் மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்த இந்து அரச குடும்பமாகத் திகழ்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றி கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாராஜா லிஷெம்பா சஞ்சோபா, தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

அவரிடம் பேட்டி எடுக்க பிபிசி எத்தனையோ முறை முயன்றும், அதை அவர் ஏற்கவில்லை. ஆனால் தற்போது அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "வன்முறைச் சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவர பேச்சு வார்த்தை தான் சரியான தீர்வாக அமையும்," எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் மணிப்பூர் வரலாற்றிலேயே சாதீய வன்முறைகளுக்கு வழிபாட்டுத் தலங்கள் இலக்காவது இதுவே முதல் முறை.

மெய்தேய் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தவறான முன்னுதாரணமாக இருக்கின்றன என மணிப்பூர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாரதா தேவியும் விமர்சித்துள்ளார்.

மணிப்பூரில் வன்முறையில் 200 தேவாலயங்கள் எரிக்கப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

சாரதா தேவியின் வீட்டுக்கும் தீ வைக்க சிலர் முயன்றுள்ளனர். ஆனால் அந்த முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.

"ஒரு கோயில் எரிக்கப்பட்டது என்றால் ஒரு தேவாலயமும் எரிக்கப்பட்டது. குகி மக்கள் அதிக எண்ணிக்கையில் பிரார்த்தனையில் ஈடுபடும் பகுதிகளில் வசிக்கும் மெய்தேயி சமூக மக்கள் தங்கள் வழிபாட்டுக்காக கோயில்களை வைத்துள்ள நிலையில், அங்கே நடந்த தாக்குதலில் இருதரப்பு வழிபாட்டுத் தலங்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. இது அனைவருக்கும் வருத்தமளிக்கும் விதத்தில் உள்ளது," என்கிறார் அவர்.

பிபிசிக்கு கிடைத்துள்ள அரசின் புள்ளி விவரங்களின்படி, ஜுன் மாதம் முதல் வாரத்தில் மட்டும் 250 தேவாலயங்களும், குகி இன மக்கள் வசிக்கும் இரண்டாயிரம் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.

மாநில பாரதிய ஜனதா தலைவர் சாரதா தேவி

சுரசந்த்பூரில் நாங்கள் ஹாக்கிப் தோங்கோ என்ற பாதிரியாரைச் சந்தித்தோம். அவர் தான் குகி சமூகத்தின் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகளின் தலைவராக பதவி வகிக்கிறார். அவர் மாநிலத்தில் உள்ள தேவாலயங்கள் தாக்கப்படுவது குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார்.

"குகி சமூகத்தினர் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்ட நிலையில், அரசு மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தேவாலயங்களின் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு தவறி விட்டது. கிறிஸ்தவர்களின் நலன்களைக் காக்கத் தவறிய அரசு, அவர்களின் சொத்துக்கள் அழிந்துவருவதை வேடிக்கை பார்க்கிறது. அதனால் தான் எங்களுக்கு ஒரு மோசமான காலமாக இது தெரிகிறது. நான் இந்த வன்முறைகளை சாதீய வன்முறைகளாகவே பார்க்கிறேன். ஆனால், இந்துக்களை திருப்திப்படுத்தவே தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன்," என் ஹாக்கிப் தோங்கோ தெரிவித்தார்.

தேவாலயங்களின் முன் நின்று செய்தி சேகரிக்கவும், படம் பிடிக்கவும் ஊடகவியலாளர்கள் அஞ்சும் நிலையே தற்போது காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அங்கே சிலர் வந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலதரப்பட்ட கேள்விகளை கேட்கின்றனர்.

உடைத்து நொறுக்கப்பட்ட தேவாலயங்களை படமெடுத்தால், அதைச் செய்யக் கூடாது என அவர்கள் வற்புறுத்துகின்றனர்.

குக்கி கிறிஸ்தவ தலைவர்கள் பெல்லோஷிப்பின் தலைவர் பாதிரியார் ஹாக்கிப் தோங்கோ.

அரசின் புள்ளி விவரங்களின்படி 1000 கோயில்களும், மெய்தேய் சமூகத்தினரின் 2,000 வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாக்கப்பட்டன.

எனவே இருதரப்பிலும் கோபம் சமமாக காணப்படுகிறது.

இருப்பினும், "மணிப்பூர் பிரச்னைகள் மத ரீதியிலானவை கிடையாது என்பது மட்டுமல்ல, அவை மிக தீவிர பிரச்னையாக மாறுவதற்கு முன்பு சரியான முயற்சிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன," என மெய்தேய் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கே. ஒதாபே வலியுறுத்திச் சொல்கிறார்.

"200 தேவாலயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், 400க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தற்போதும் பாதுகாப்பாக உள்ளன. மதரீதியிலான வன்முறைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றிற்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் குகி சமூகத்தினர் வசிக்கும் மலைப்பகுதிக்குச் சென்று பார்த்தால், ஒரே ஒரு சிறிய கோயிலைக் கூட காணமுடியாது," என்கிறார் அவர்.

மணிப்பூரின் பழங்குடியினப் பகுதிகளில் தனி நிர்வாகம் வேண்டும் என்ற கோரிக்கைக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குகி சமூகத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள் மியான்மர் நாட்டின் சின் மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்ற நிலையில், அவர்கள் நவீன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என மதச்சட்டங்கள் கூறுவதால் இது போல் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

மணிப்பூரில் சிறுபான்மை சமூகமாக வசித்து வரும் குகி இன மக்கள், தங்கள் பகுதிகளுக்கென்று தனிப்பட்ட அரசு தேவை என்பதை வலியுறுத்துகின்றனர். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

உரிமைக்கான போராட்டத்தை மறைத்த மத ரீதியான வன்முறைகள்

குகி மாணவர்கள் அமைப்பின் செயலாளர் மாங் கோன்சே.

"மாநில அரசோ, மத்திய அரசோ இந்த வன்முறைகள் குறித்து கவனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை," என குகி மாணவர் அமைப்பின் செயலாளரான மாங் கோன்சே கூறுகிறார்.

"ஒவ்வொருவரும் எல்லா இடங்களிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. ஏதோ ஒரு இடத்தில் அவர் ஒரு சிறுபான்மை சமூகத்தினராக இருப்பார். இது மணிப்பூர் என்பதால் நீங்கள் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் மணிப்பூருக்குள் மட்டும் அடங்கும் சமூகம் கிடையாது. அதனால் வேறு பல இடங்களில் நீங்களும் நாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை எதிர்கொள்ளும் நிலை இருக்கலாம்," என அவர் கூறுகிறார்.

இந்த வன்முறைகளில் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதால் அவருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதா எனக்கேட்ட போது, "நாங்கள் எதற்காகப் போராட்டத்தைத் தொடங்கினோம் என்பதிலேயே எனக்கு தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம் பின்னர் மத ரீதியிலான வன்முறைகளுக்கு வித்திட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தான் வேகமாகச் செயல்படவேண்டும். இல்லை என்றால் நிலை மேலும் மோசடையும்," என்றார் அவர்.

வன்முறையின் போது 100 கோவில்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.

மணிப்பூரில் தற்போது தலைநகர் இம்பாலில் இருந்து குகி இனத்தவர் வசிக்கும் எந்த மலைப்பகுதிகளுக்குச் செல்லவேண்டும் என்றாலும், அரசிடம் இருந்து அனுமதி பெறவேண்டும் என்ற நிலைமைக்கு மாறாக குகி இனத்தவரின் பாதுகாப்புப் படையினரிடம் அனுமதி பெறவேண்டிய நிலை காணப்படுகிறது. பகலில் குகி இனப்பெண்களும், இரவு நேரங்களில் ஆண்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இரு தரப்பைச் சேர்ந்த கிராமத்தினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திவரும் நிலையில், குகி சமூகத்தினர் வாழும் ஒரு கிராமத்தில் கையெறி குண்டுகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் வீசப்பட்ட வெடிகுண்டுகளை எங்களிடம் உள்ளூர் மக்கள் காட்டினர்.

குகி தரப்பில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள் அனைவரும் வாக்கி டாக்கிகள் மூலம் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குகி மக்களிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகளும் இருந்தன. ஆனால், இப்போது அவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ள போலீசார், குகி மக்கள் வாழும் பகுதிகளைச் சுற்றி வளைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலின் போது ராக்கெட் லாஞ்சர் மூலம் வீசப்பட்ட வெடிகுண்டு.

தலைநகர் இம்பாலுக்கு வெளியில் உள்ள ரகசிய இடம் ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அங்கு மறைந்து வாழும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரைப் பார்த்து அவரிடம் பேசினோம். அவர் பல தசாப்தங்களாக மறைந்து வாழ்ந்து வருகிறார்.

அவரைப் பொறுத்தளவில், "கடந்த காலங்களில் இது போன்ற வன்முறைகள் எப்போதும் நடந்ததில்லை என்ற நிலையில், தற்போதைய கலவரங்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. எனக்கு வேதனையாகவும் இருக்கிறது. தேவாலயங்களையோ, வழிபாட்டுத் தலங்களையோ எரிப்பதற்கு நான் எப்போதும் ஆதரவளிக்க மாட்டேன். பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சிக்கு இந்த இரு சமூகத்தினரும் பலிகடாவாகியிருக்கின்றனர் என்பதே உண்மை," என்கிறார்.

உண்மையில், இது போல் நீண்ட காலத்துக்கு நிகழும் வன்முறைகளுக்குப் பின்னர் நாம் காணும் காட்சிகளை நினைத்தால் மேலும் அச்சமூட்டும் வகையில் உள்ளது.

ஏனென்றால் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வசித்து வந்த சமூகங்களுக்கு இடையே நிலவிய பரஸ்பர நம்பிக்கை தற்போது தகர்ந்துவிட்டது.

"மணிப்பூரில் முன்னெப்போதும் மதரீதியான கலவரங்கள் நிகழ்ந்ததில்லை. ஆனால் இப்போது மட்டும் அது போன்ற வன்முறைகள் இடம்பெற என்ன காரணமென்றால், ஏதோ ஒரு சக்தி இரு சமூகத்தினரையும் மத ரீதியாகத் தூண்டிவிட்டிருக்கவேண்டும் அல்லது சாதி ரீதியான சண்டைகளை மடைமாற்றிவிட்டிருக்கவேண்டும்," என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் மாநில முக்கியத் தலைவர்களில் ஒருவரான தேவபிரதா சிங்.

நன்றி:நிதின் ஸ்ரீவத்ஷவா, பிபிசி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved