🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விவாகரத்து கிடைக்காமல் தவிக்கும் பெண்கள்!

கணவன்-மனைவி தங்களுடைய  திருமண வாழ்வை முறித்துக் கொள்ள  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக  பிலிப்பைன்ஸ் அரசாங்கமே  மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு அந்நாட்டு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது.

ஒரு நாடு மதவாதிகளால் ஆட்சி செய்யப்பட்டால் அது எந்த அளவிற்குக் கலாச்சார ரீதியாக பின்னோக்கி  இழுக்கப்படும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பிலிப்பைன்ஸ் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை அங்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. மத அடிப்படைவாதம் ஆதிக்கம் செலுத்துவதால், அங்குப் பெண்கள் விவாகரத்து பெரும் உரிமைக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த ஸ்டெல்லா சிபோங்கா என்ற பெண் திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு, அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விருப்பம் இல்லாத திருமண வாழ்வை முறித்துக்கொள்ள முடிவெடுத்தார்.

ஆனால் அங்குள்ள யதார்த்த நிலைமை அவருக்கு எதிராக இருந்தது. அவர் “கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக அமர்ந்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் அவ்வாறு விவாகரத்து கிடைப்பது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. குறிப்பாக இங்கு மத அடிப்படையில் விவாகரத்து செய்வது என்பதே சட்டவிரோதமானது தவறானது என்ற நிலை உள்ளது. ஒருவேளை விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்று முறையிட்டால் தீர்வு கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்பதுதான் இந்த நாட்டின் தற்போதைய நிலைமையாக உள்ளது” என்று கூறினார்.

வாடிகனுக்குப் பிறகு விவாகரத்து உரிமையை மறுக்கும் நாடாக பிலிப்பைன்ஸ் இருக்கிறது. மேலும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து தன் வாழ்க்கைக்கு உகந்த வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாத அளவுக்கு பிலிப்பைன்ஸ் அரசு பெரும் தடையாக அமைந்துள்ளது. வன்முறைகளில் ஈடுபடும் கணவர்களிடம் இருந்து மீள முடியாத நிலைமைக்குப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். அவர்களைத் தள்ளிவிடும் வேலையைத்தான் இந்நாட்டு அரசும் செய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்  விவாகரத்து பெறுவது என்பது கடினமான வேலையாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர் விவாகரத்து உரிமைக்காக வாதாடக்கூடிய வழக்கறிஞர்கள்.

இதுபற்றி பேசிய ஸ்டெல்லா சிபோங்கா “விவாகரத்து உரிமைக்கான சட்ட செயல்முறைகள் என்பது மிக மெதுவாகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது. வறுமையில் வாடும் நாட்டில் வழக்குகளுக்காக எப்படி பல ஆயிரம் டாலர்கள்  செலவு செய்ய முடியும். அப்படி ஒருவேளை செலவு செய்து வழக்கு தொடர்ந்தால் கூட வெற்றிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை” என்கிறார்.

மேலும் “கணவன்-மனைவி தங்களுடைய  திருமண வாழ்வை முறித்துக் கொள்ள  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வாங்கிவிட்டால் கூட அந்த தீர்ப்புக்கு எதிராக  பிலிப்பைன்ஸ் அரசாங்கமே  மேல்முறையீடு செய்யும். அந்த அளவுக்கு இங்கு அரசு பெண்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இது ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை,” என்று ஆதங்கத்தோடு கூறுகிறார் சிபோங்கா. இது சிபோங்காவின் நிலை மட்டுமல்ல; அனைத்துப் பெண்களுக்கும் இதே இழிநிலை தான்.

பெண்களுக்கு எதிராக மத நம்பிக்கைகள் ஆற்றும் பங்கு குறித்துக் கூறுகையில் “கடவுள் இணைத்ததைப் பிரிக்க முடியாது என்று அவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள். அது உண்மையல்ல. என் கணவர் என்னைக் கொல்ல முயன்றாலும், உளவியல் ரீதியாகத் துன்புறுத்தினாலும்  அனைத்தையும் சகித்துக் கொண்டு எப்படி அமைதியாக நான் வாழ முடியும். இது போன்ற செயல்களுக்குப் பின்னும் எனக்கு  விவாகரத்து  அனுமதிக்கப்படவில்லை என்றால் இவர்களின் நோக்கம் மத நம்பிக்கைகளை அமல்படுத்துவதே அன்றி பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதல்ல” என்றார் சிபோங்கா.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை பிலிப்பைன்ஸ் என்ற ஒரு மதவாத அரசாங்கம் செய்யும் நிகழ்வாக மட்டும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மத அடிப்படையில் நாட்டை ஆளத்துடிக்கும் அல்லது ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அரசாங்கங்களின் நடவடிக்கைகள் இயல்பாகவே பெண்களை ஒடுக்குவதாகத் தான் இருக்கும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறை, ஈரான் நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை எல்லாம் இவ்வகையிலானதே.

எல்லா மதங்களும் பெண்கள் மீது காட்டும் அதே அடக்குமுறையை கத்தோலிக்க கிருஸ்தவம் இன்றும் பிலிப்பைன்ஸ் கடைபிடித்து வருவது என்பது மனித குலத்திற்கு எதிரானது என்று உணர்ந்துகொள்வது என்றோ..

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved