🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மின்வாரிய பொறியாளர் சா.காந்திக்கு கம்பளத்தார் சார்பில் பாராட்டு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளராக பணியாற்றியவரும், பட்டயப்பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்புவகித்தவரும், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் தந்தையாருமான சா.காந்தி அவர்களின் 55 ஆண்டு பொதுவாழ்வு பாராட்டு வாழ்த்தரங்கு நேற்று மாலை சென்னை, தியாகராய நகரிலுள்ள தியாகராயர் கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பு PESOT, தமிழ்நாடு மின்வாரிய என்ஜிகனியர்ஸ் யூனியன் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு சா.காந்தி யை வாழ்த்திப்பேசினர். 


இவ்விழாவில் கலந்துகொள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் கலந்துகொண்டு காந்தி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும், காவேரி சமவெளியைக் கொல்லும் கச்சா எண்ணெய், மூடப்படும் ரேசன் கடைகள் விளக்கமும், பின்னணியும், தமிழ்நாட்டின் சூரிய ஒளிக்கொள்கை ஓர் ஆய்வு ஆகிய நூலகளை எழுதியுள்ளார். 1966 இல் தமிழ்நாடு மின்வாரியத்தில் பட்டயப் பொறியாளராக பணியில் இணைந்த சா.காந்தி தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அதேவேளையில், மின்வாரியத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தத்திற்காகவும் போராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தனது பணிக்காலத்தில் 11 முறை பணி மாறுதல்களையும் 12 முறை ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளனவர் என்பதும், இதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை இழந்தவர்.


தவிர, 1970-களில் பட்டயப் பொறியாளர்கள் (டிப்ளமோ) மேல்படிப்பு (இளநிலை பட்டம்)  படிக்க கடும் நெருக்கடிகள் இருந்த காலத்தில் 1974-ல் போராட்டத்தை முன்னெடுத்து 1977-இல் அனுமதி பெற்றுத்தந்தவர் காந்தி என்பதும், 2012 காலத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவியபோது தனியார் நிறுவனங்கள் கொள்ளை விலைக்கு மின்சாரம் விற்றதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடி மின்சார விலையை குறைத்தபடியால் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியம் 430 கோடி ரூபாய் சேமிக்கக் காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடும்பநலனை விட பொதுநலனிற்கே முக்கியத்துவம் கொடுத்து காந்தி அவர்கள் வாழ்ந்து வருவதும், தனது மகன் திருமுருகன் காந்தியை பொதுவாழ்விற்காக அர்ப்பணித்துள்ளதும் இந்த உலகில் எப்போதாவது நடக்கும் அதிசய நிகழ்வு என்பதை வாழ்த்தரங்கில் பேசிய பல்வேறு தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இதன் முத்தாய்ப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், தமிழகத்தில் இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய தலைவர் ஒருவர் உண்டென்றால் அது திருமுருகன் காந்தி மட்டும் தான் என்றார். அதை வழிமொழிந்து பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், உணர்ச்சி அரசியலுக்கு ஆளாகமல் தெளிவான சிந்தனையோடும், சித்தாந்தத்தோடும் உள்ள இளைஞர் திருமுருகன் காந்தி என்றும், பலமுறை அவரின் அறிவாற்றல் கண்டு வியந்திருப்பதாகவும், இளம் வயதில் இவ்வளவு சிந்தனைத் தெளிவு பெற அவரின் தந்தையார் சா.காந்தி யின் வழிகாட்டலும், வார்ப்பும் தான் காரணம் என்பதை தோழர் காந்தி எழுதிய நூலை இந்த மேடையில் ஓரிரு பக்கங்கள் படிக்கும்போதே உணர்ந்ததாக குறிப்பிட்டார்.

பதவி, அடையாளம், கௌரவத்திற்காக அரசியலுக்கு வரும் இளைஞர்கள் தவிர சித்தாந்த ரீதியாக, தத்துவார்த்த ரீதியான அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் குறிப்பாக எண்ணிக்கை பலமில்லாத சமூகங்களின் பின்னணியில் இருந்து அரசியலுக்கு வரும் இளைஞர்கள், அரசியலில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தனித்துவத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும் திருமுருகன் காந்தி போன்ற இயக்கவாதிகளின் அரசியலில் ஒருசில ஆண்டுகளாவது பயிற்சி எடுக்க வேண்டுமென்பதை நேற்றை கூட்டத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved