🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் தீர்ப்புக்கு வரவேற்பு!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராசன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து, பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், ஆகம விதிகளில் உரிய பயிற்சியும், தேர்ச்சியும் பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இருதினங்களுக்கு முன் அளித்துள்ள தீர்ப்புக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இந்தத் தீர்ப்பினை அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சிபெற்றிருந்தாலும் கோவில் நிர்வாக அதிகாரிகளே அர்ச்சகரை நியமித்துக்கொள்ளலாம் என்றும், பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் இன்றி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், இதற்காக ஆகமக் கோவில் எது? ஆகமம் அல்லாத கோவில் எது? என்பது குறித்து கண்டறியும் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலம் கோவில்களில் காட்டப்படும் சாதியபாகுபாடு முடிவுக்கு வருமென்றும், இந்துக்களில் குறிப்பிட்ட பிரிவினரே ஆகமம், சாஸ்திரம் போன்றவற்றிற்கு காலம்காலமாக ஏகபோக உரிமை கொண்டாடி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்து மதம் பல்வேறு வழிபாட்டு முறைகளையும், சம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய பல இனக்குழுக்களின் தொகுப்பாக இருப்பதால், தங்களின் வழிபாட்டு முறைகளை மேம்படுத்திக்கொள்ளவும், அழியாமல் காக்கவும் இத்தீர்ப்பு பேருதவி புரிவதோடு, இந்து மதம் முரணின்றி தழைத்தோங்க உதவும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved