🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பற்றி எரியும் பிரான்ஸ் - சிறுபான்மையினர் மீதான தாக்குதலா?

பிரான்ஸ் தற்போது பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அந்தளவிற்கு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரம் முற்றி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து தொடர்ந்து கலவரம் வெடித்து வருகிறது. இதற்குக் காரணம் 17 வயது இளைஞரை அந்த நாட்டின் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என்பது தான். தனது மகனின் இறப்புக்கு ஒருவர்தான் காரணம் என்று அந்த இளைஞனின் தாய் கூறியபோதும், கலவரம் அடங்கவில்லை.

இதற்கு முன்னதாக குறைவான சம்பளம் வாங்கும் மக்களுக்கும், நகரங்களில் வசிக்கும் உயர்தர மக்களுக்கும் இடையேயான பாகுபாடு காலம் காலமாக இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி இனப்பாகுபாடும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நாஹெல் என்ற 17 வயது இளைஞனை போலீசார் கடந்த வாரம் செவ்வாய்கிழமை சுட்டுக் கொன்றனர். 

தனது மகன் அரபு நாட்டைச் சேர்ந்தவரைப் போல இருந்த காரணத்தால்தான், போலீஸ் சுட்டுக் கொன்று உள்ளது என்று நாஹெல் தாய் குற்றம்சாட்டி இருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் அருகே நாஹெல் சுட்டுக் கொல்லப்பட்டார். தன் மீது காரை நாஹெல் ஏற்றிவிடுவார் என்ற அச்சத்தில்தான் சுட்டுக் கொன்றதாக போலீஸ் விளக்கம் அளித்து இருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்சனை அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. 

நாஹெல் சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து பல இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. போலீசாருடன் சண்டையிடுவது, கார்களை எரிப்பது, கடைகளை எரிப்பது, கடைகளில் கொள்ளையடித்துச் செல்வது என்று கலவரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோருக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்து வருகிறார். மேலும், சமூக ஊடகங்கள்தான் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

அமைதியின்மைக்கும், கலவரத்திற்கும் ஸ்நாப்சாட் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று மேக்ரான் தெரிவித்துள்ளார். மேலும் கலவரத்தை தூண்டும் வகையில் இருக்கும் செய்திகளை சமூக ஊடங்களில் இருந்து நீக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். 

ஆனாலும், எப்படி அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட்டை போலீசார் கொன்றார்களோ அதேபோன்றுதான் பிரான்சிலும் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இதற்குக் காரணம் நாஹெல், ஜார்ஜ் பிளாய்ட் இருவரும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இரண்டுமே இன ரீதியான இனவெறி தாக்குதல் தான் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பஸ் செல்லும் பாதையில் மெர்சிடஸ் காரில் வேகமாக சென்றதால் தான் நாஹெல் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் விளக்கம் அளித்தாலும், அதை செவி கொடுத்து கேட்க யாரும் தயாராக இல்லை.

கலவரம் மார்செய்ல்லி, லியோன், டவ்லவ்ஸ், ஸ்ட்ராஸ்போர்க் மற்றும் லில்லி போன்ற நகரங்களுக்கும் பரவியுள்ளது. சனிக்கிழமையன்று சுமார் 45,000 காவல்துறை அதிகாரிகளும் சில கவச வாகனங்களும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1,100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சின் மூன்றாவது பெரிய நகரம் லியோன். இங்கு போலீசார் ஹெலிகாப்டர் போன்ற வாகனங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved