🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நீட் அடுத்து நெக்ஸ்ட் - எளியோரை மருத்துவப்படிப்பிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சி

மருத்துவப்படிப்பிற்கு "நீட்" தேர்வு நடைமுறைக்கு வந்தபின் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாக ஆகிவிட்ட நிலையில், " நீட்" தேர்வு தகுதி மற்றும் திறமையானவர்களை தேர்ந்தெடுப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அதுவும் போதாதென்று 'நெக்ஸ்ட்" தேர்வை அறிமுகம் செய்கிறது மத்திய அரசு.

அதன்படி, தேசிய மருத்துவ ஆணையம் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘ நெக்ஸ்ட்' (National Exit Test- NExT) தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், தற்போது நீட் தேர்வில் வெற்றிபெற்று எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படித்துவரும் மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்' தேர்வு இந்தக் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்படுகிறது. இத்தேர்வு மே மற்றும் நவம்பர் மாதங்களில் இரு தேர்வுகளாக நடக்கும் எனவும், வரும்  ஜூலை 28 ஆம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2019 நீட் தேர்வில் வெற்றிபெற்று எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், ‘நெக்ஸ்ட் 1' தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, பயிற்சி மருத்துவராகப்  பணியாற்ற முடியும். அதேபோல ‘நெக்ஸ்ட் 2' தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கும், இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது ‘நெக்ஸ்ட்’ (NEXT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஏற்கனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வானது பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களிடம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய "நீட் தேர்வில் வெற்றிபெற பல லட்சங்கள் செலவு செய்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி எடுக்க வேண்டிய சூழலில். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மீண்டுமொரு (NEXT) பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தொடர்ந்து தகுத்தேர்வுகளாக நடத்துவது என்பது ஏழை பிற்படுத்தப்பட்ட சமூகங்களை மருத்துவத்துறையில் நுழையவிடாமல் தடுக்கும் சதிச்செயல் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். 

மருத்துவப் படிப்புகளுக்கான காலத்தை அதிகரிக்கச் செய்து, மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்குத் தள்ளும் நெக்ஸ்ட் தேர்வினால் மருத்துவ மாணவ/ மாணவியர்களின் திருமணம் மேலும் தள்ளிப்போகும்  வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பாஜக ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததிலிருந்து தகுகு, திறமை என்ற பெயரில் தொடர்ந்து கல்வியில் செய்து வரும் மாற்றங்கள் சாமானியர்களிடமிருந்து கல்வியை அப்புறப்படுத்தும் முயற்சியே ஆகும். இப்போக்கை மத்திய அரசு உடனடியாக மாற்றிக்கொண்டு, மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved