🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செப்டம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்!

2021-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. அதில் மிக முக்கியமானது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியது. ஆட்சியமைத்து இரண்டாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

ஏற்கனவே அறிவித்தபடி மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் கலந்து கொளண்டனர். அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காணொளி காட்சி மூலம் இணைந்தனர்.

மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, பயனாளர்களை கண்டறிவது என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தகுதியான நபர்கள் இந்த திட்டத்தில் விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட வாரிய முகாம்கள் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இத்திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்றழைக்கப்படுமென்று முதல்வர் அறிவித்தார். 

மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த தமிழக நிதிநிலை அறிக்கையில், ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், 1.50 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு முகாம்களை நடத்தி கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளையில், உரிய தகுதிஉள்ள மகளிருக்கு, உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும், அவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை யாருக்கு கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம்:

1.ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்தக் கடையில் விண்ணப்பிக்க வேண்டும்.

2.பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

3.பெண் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.

4.ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது.

5.சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.

6. ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.

7. 3,500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப் படாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த முதலில் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கான பணியில் "இல்லம் தேடி கல்வித் திட்ட" தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கென பிரத்யேக செயலி வழங்கப்படும். இந்தச் செயலில் பயனாளிகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய, நியாய விலைக் கடையில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் கருவியும் வழங்கப்படும். இந்தக் கருவியின் மூலமாக, குடும்ப அட்டைதாரர் குறித்த உண்மை நிலை அறிந்து கொள்ளப்படும்.

ஒரு நியாய விலைக் கடையில் 500 குடும்ப அட்டைதாரர்கள் இருந்தால் அவர்களுக்கு பொறுப்பாக, "ஒரு இல்லம் தேடி கல்வித் திட்ட" தன்னார்வலர் இருப்பார். ஆயிரம் அட்டைகளாக இருந்தால், 2 பேரும், 1,500 அட்டைதாரர்களாக இருந்தால் மூன்று பேரும் பொறுப்பாக நியமிக்கப்படுவர். தமிழகத்தில் மொத்தமாக 34, 806 நியாய விலைக் கடைகள் உள்ளன. உரிமைத் தொகைக்கான விவரங்களைச் சேகரிக்கும் பணியில் 61,893 இல்லம் தேடி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved