🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலக வல்லரசுகளை வியக்கவைக்கும் சந்திராயன் 3 - வரும் வெள்ளியன்று விண்ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வரும் ஜூலை 14 ம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை, மீண்டும் சந்திரனை நோக்கி செலுத்த தயார் நிலையில் இருக்கிறது.

என்னது சந்திரயான்-3 யா? அப்ப இதுல கூட பார்ட் 1, பார்ட் 2 இருக்குதா? 

ஆம் இருக்கிறது...

(இதோ சந்திரயான் கதை)... 

2008, அக்டோபர் 22 ல் நிலவை ஆராயும் நோக்கில் இஸ்ரோவால் சந்திரயான்-1 என்ற விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

மாருதி ஆல்ட்டோ கார் சைஸில் இருக்கும் அந்த விண்கலம், 2009 ஆகஸ்ட் வரை பூமியுடன் தொடர்பில் இருந்தது. நிலவைச் சுற்றி வந்து புகைப்படங்களை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் திடீரென அந்த வருடத்தில் ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில் சந்திரயான்-1 விண்கலத்தின் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின் பலமுறை முயன்றும் இஸ்ரோவால், சந்திரயானை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சந்திரயான்-1 தொலைந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்தது. சந்திரயான் தன் கட்டுப்பாட்டை இழந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி ஏதேனும் ஒரு விண்கல்லிலோ, அல்லது எரிகல்லிலோ மோதியிருக்கலாம் என்றும் இஸ்ரோ நம்பியது. அதை சர்வதேசத்திற்கும் அறிவித்தது.

அதன் பின்னர் எட்டாண்டுகள் ஓடிவிட்டன.

சமீபத்தில் அதாவது 2017ல் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், அதி உயர் சக்தி வாய்ந்த ரேடார் தொலைநோக்கி மூலம் நிலவையும் அதன் சுற்றுவட்டப் பாதையையும் ஆராய்ந்து கொண்டிருந்தது. அங்கே நாசா கண்ட காட்சி, நாசா விஞ்ஞானிகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியது.

ஆம் தொலைந்து போனதாக கருதப்பட்ட சந்திரயான்-1, இன்னமும் நிலவை அதன் சுற்றுப்பாதையில் கணகச்சிதமாக சுற்றிக் கொண்டு இருந்ததைக் கண்டறிந்தனர்.

அந்த செயல்... இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம் எத்தகையது என நாசாவிற்கு உணர்த்தியது. அதன் பின் கடந்த 2019 ல் இந்தியா சந்திரயான் 2 எனும் அடுத்த விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி ஆராய திட்டம் போட்டது.

"எப்படியும் நிலாவுக்கு தானே போறீங்க... போறப்ப எங்க கருவியையும் கொஞ்சம் இறக்கி விட்ருங்களேன்.." என்று நாசா கேட்டுக் கொண்டதால், நாசாவின் லேசர் ரெட்ரோரிபிளெக் எனும் லேசர் கருவிகளையும் லக்கேஜ் டிக்கெட் வாங்கிக் கொண்டு இந்தியா தன் ராக்கெட்டில் ஏற்றிக் கொண்டது.

1969ல் அமெரிக்கா தனது அப்பல்லோ 11 எனும் விண்கலம் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைத்த அதே காலகட்டத்தில் தான் இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு கட்டிடம் கட்ட இடம் தேடிக் கொண்டிருந்தது.

1969 லிருந்து 2023 வரையிலான இந்த 54 ஆண்டுகளில் அளப்பரிய அசுர வளர்ச்சியை இஸ்ரோ அடைந்துள்ளது.

கடந்த 2015 ல் உலக விண்வெளி வரலாற்றிலேயே முதன் முறையாக 104 செயற்கைக் கோள்களை ஒரே ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட்டில் எடுத்துக் கொண்டு விண்வெளிக்கு சென்று எந்த எந்த இடங்களில் எந்த எந்த செயற்கைக்கோள்களை இறக்கி விட வேண்டுமோ அந்த இடங்களில் அவற்றை மிக பத்திரமாக இறக்கிவிட்டது.

2019,ஜூலை 15 ல் விண்ணுக்குப் பறந்த சந்திரயான் 2 விண்கலத்தில் அதுவரையில் உலகில் எந்த ஒரு வளர்ந்ந நாடுகளும் செய்யாத ஒரு சிக்கலானச் சாதனையை செய்தது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.

அது என்ன சாதனை?


நிலா எனும் சந்திரன் பூமியைச் சுற்றி வரும் ஒரு துணைக் கோள்.அப்படி சுற்றி வருகையில் நிலவின் ஒரு பகுதி மட்டுமே  எப்போதுமே பூமியை நோக்கியவாறு இருக்கும்.நாம் அனுதினமும் பார்ப்பது நிலவின் அந்த ஒரு பகுதியை மட்டும் தான்.அது மட்டும் தான் சூரியனில் இருந்து ஒளியைப் பெற்று அதை அப்படியே பூமியை நோக்கி பிரதிபலிக்கிறது.

எப்போதுமே பூமியை நோக்கி இருக்கும் அந்த பகுதி நிலவின் வட துருவம். இந்த வட துருவப் பகுதிக்கு தான் இதுவரையில் உலக நாடுகள் தங்களது விண்கலங்களை அனுப்பி உள்ளன. ஆனால் இருள் சூழ்ந்த, சூரிய ஒளி படாத நிலவின் தென்துருவப் பகுதிக்கு உலக விண்வெளி வரலாற்றில் முதன் முறையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் நிலவு உருவான விதம் தொடங்கி சகலத்தையும் மனித இனம் தெரிந்து கொள்ளும்.

எளிதாக சொல்வது என்றால் நிலவை அதன் பின் பக்கம் வழியாக சென்று அடைவது தான் சந்திரயான் 2 விண்கலத்தின் பிராஜெக்ட் பிளான்.

இதற்காக அந்த சந்திரயான் 2  விண்கலத்தில்,

1.ஆர்பிட்டர்

2.லேண்டர்

3.ரோவர்

என மூன்று அதி நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டன.

இதில் ஆர்பிட்டர் சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுப்பாதையை மாற்றுவதற்கு உதவும். அதாவது விண்கலத்தை ஏவும் போது நிலவின் வட துருவத்தை நோக்கித் தான் ஏவுவார்கள். வட துருவப் பகுதியை அடைந்ததும் சந்திரயான் 2  பாதையை ஆர்பிட்டர் மாற்றிவிடும்.

லேண்டர் கருவி சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென் துருவப் பகுதிகளில் தரை இறங்க உதவும்.

ரோவர் சாதனம் நிலவின் தென் துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய உதவும்.

இந்த மூன்று சாதனங்களிலும் 14 வகையான அதி நவீன கருவிகள் இடம் பெற்றன.இதற்கு முன் ஏவப்பட்ட சந்திரயான் 1 விண்கலத்தில் இருந்த கருவிகள் எல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தயாரித்துத் தந்தவை.

ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தில் இடம் பெற்ற அந்த 14 கருவிகளும் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

இப்படி முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு,தயாரிக்கப்பட்ட சந்திரயான் 2  விண்கலம், நிலவின் தென் துருவப் பகுதிகளில் விண்கலத்தை தரை இறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், 2019 ஜூலை 9 தேதி பூமியில் இருந்து புறப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பர் 6 ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதிகளில் தரை இறங்க வேண்டும் என்ற திட்டத்துடன் விண்ணில் பறந்தது.

திட்டமிட்டபடி சந்திரயான் 2 விண்கலம் செப்டம்பர் 7 ம் தேதி நிலவின் தென்துருவத்தையும் நெருங்கியது.

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவின் தரைப் பகுதியில் இறங்க வேண்டிய,விக்ரம் லேண்டர் கலமும் கனகச்சிதமாக, சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்தது.

நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் கருவியை,ஒரு ஏரோபிளேன் தரை இறங்குவது போல ஸ்மூத்தாக தரை இறக்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. அதன் பெயர் Soft Landing.

விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியை நோக்கி,ஒரு பயணிகள் விமானம் தரை இறங்குவது போல இறங்கிக் கொண்டிருந்தது.

இன்னும் மூன்றே மூன்று நிமிடங்களில் நிலவின் தரையை விக்ரம் லேண்டர் தொட்டு விடும் என்ற நிலையில்,

விக்ரம் லேண்டர் நிலவின் தரையைத் தொடப் போகும் அந்த வரலாற்று நொடிகளை எதிர்நோக்கி உலகமே காத்திருந்தத சூழலில், நிலவின் தென் துருவப் பகுதியின் தரையில் இருந்து 2.1 கிமீ உயரத்தில் விக்ரம் லேண்டர் இருந்து போது, இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விக்ரம் லேண்டர் இழந்தது.

இதனால் இஸ்ரோ திட்டமிட்டபடி விக்ரம் லேண்டரை மெதுவாக தரையிறக்க முடியாமல் போனது.

நிலவின் தென்துருவப் பகுதியின் தரையில் மோதியது விக்ரம் லேண்டர். அதன் பின் அதன் நிலை என்ன என்பது பற்றி அறிய, இஸ்ரோ எவ்வளவு முயன்றும் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

2.1 கி.மீ உயரம் வரையிலும் விக்ரம் லேண்டர் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.அனைத்து சாதனங்களும் நன்றாகத் இயங்கின.கடைசி 3 நிமிடங்களில் சிக்னல் சிக்கல் ஒட்டு மொத்த திட்டத்தையும் வேறு மாதிரியாக மாற்றி விட்டது.

இஸ்ரோ எதிர்பார்த்த வெற்றி Soft Landing ஆக விக்ரம் லேண்டரை தரை இறக்கி, அதன் பின் பிரக்யான் ரோவரை வெளியே கொண்டு வந்து நிலவின் தென் துருவத்தின் தரைப் பகுதியை ஆராய்வது.

ஆனால் கிடைத்த வெற்றி Hard Landing முறையில் லேண்டர் தரையில் மோதியது. அதனால் அதற்கடுத்து நடந்ததை இஸ்ரோவால் கண்டறிய முடியவில்லை. எதோ ஒரு வகையில் நிலவின் தென் துருவப் பகுதியை தொட்ட முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றிருந்தாலும், அதை இஸ்ரோ ஏற்கவில்லை.

எனவே சந்திரயான் 2 திட்டம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்று இஸ்ரோ அறிவித்தது. இதற்காக உழைத்த விஞ்ஞானிகள் தொடங்கி, வேடிக்கை மட்டும் பார்த்த நான் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனாலும் இஸ்ரோ உடைந்து போகவில்லை.

சந்திரயான் 2 ல் நடந்த தவறுகளில் இருந்து பல பாடங்களைக் கற்றது. இந்த முறை இன்னும் அதிகமாக Failure Modes and Effects Analysis செய்யப்பட்டது. Risk கள் கண்டறியப்பட்டன. அதற்கு ஏற்றபடி தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டன.

இதோ சந்திரயான் 3 தயாராகி விட்டது.

உலகின் வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடுகள் கூட சென்று அடையாத நிலவின் தென்துருவம் என்ற இலக்கை நோக்கி ஜூலை 14 தேதி விண்ணில் பறக்க இருக்கிறது சந்திரயான் 3 விண்கலம்.....

நன்றி: துரை மோகன்ராஜு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved