🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிரதமருக்கே விபூதியடித்த அமலாக்கத்துறை! வியக்க வைக்கும் வரலாறு!

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு, 2019 க்குப்பின் அமலாக்கத்துறையின் சோதனை 95 சதவீதம் எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே பாய்கிறது என்ற விமர்சனத்திற்கு மத்தியில் இந்திய பிரதமர் ஒருவருக்கு எதிராகவே அமலாக்கத்துறை இயக்குநர் செயல்பட்ட வரலாறு உள்ளது. 

இந்திய மக்கள்தொகையில் சுமார் 70 விழுக்காடுள்ள OBC என சொல்லப்படும் இதர பிற்படுத்தப்பட்ட (BC+MBC=OBC) மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு குரல் எழுப்பப்பட்டு வந்தநிலையில் 32 ஆண்டுகள் கழித்து 1979-இல் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு, அக்கமிஷன் ஓபிசிக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. மண்டல் குழுவின் பரிந்துறையை 1980 முதல் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் ஆட்சிகாலங்களில் சுமார் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் அவர்கள் மண்டல் பரிந்துறையை ஏற்று ஓபிசிக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார்.

இதை தீவிரமாக எதிர்த்த உயர்சாதியினர் டெல்லியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதன் பின்னனியில் பாஜக இருந்தது. ஒருகட்டத்தில் ஓபிசி இடஒதுக்கீடை எதிர்த்து ஓபிசி மாணவர்களே தீ வைத்துக்கொண்டு மாய்ந்தனர். அந்த அளவிற்கு வடமாநிலங்களில் மதரீதியான உணர்வுகள் வலுப்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் வி.பி.சிங் அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஓபிசி இடஒதுக்கீடு வழங்கி இந்தியாவில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட வி.பி.சிங் அவர்களை பழிதீர்க்க நினைத்த எல்லா அமைப்புகளிலும் இருந்த  உயர்சாதியினர் ஒன்றிணைந்து மாபெரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டனர். இடஒதுக்கீடு வழங்கியதிலும், நேர்மையான ஆட்சி மீதும் குற்றம் சுமத்த முடியாதவர்கள் அவரின் செல்வாக்கை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். விபி.சிங் எதிர்க்கட்சியில் இருந்தபோது செயிண்ட் கீட்ஸ் என்ற ஒரு தீவில் தன்னுடைய மகன் ஜெயா சிங் பெயரில் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருந்தார் என்று ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதற்காக செயின்ட் கீட்ஸ் தீவில் First Trust Corporation என்ற வங்கியில் போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. விபி.சிங் அவரது மகன் ஜெயா சிங் கையெழுத்தோடு வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதற்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டன.


விபி.சிங் பிரதமராக வந்ததற்கு பிறகு தன்னைப் பற்றிய இந்த குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை நடத்த அவரே உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை செய்தது, மத்திய தடயவியல் ஆய்வு ஆவணங்களில் பல உண்மைகள் வெளியே வந்தன. விபி.சிங் பெயரும் அவரது மகன் ஜெயா சிங் பெயரும் கையெழுத்துகளும் அவருடைய பாஸ்போர்ட் விண்ணப்பத்திலிருந்து போலியாக நகலெடுத்து இந்த பொய்யான ஆவணங்கள் உருவாக்கப்பட்டன என்று கண்டறியப்பட்டது. இதற்குத் துணையாக இருந்தவர்கள் அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவ், ஒன்றிய அமைச்சராக இருந்த கே.கே.திவாரி, அமெரிக்காவில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள், First Trust Corporation வங்கியின் மேலாளர் மற்றும் சந்திரா சாமி ஆகியோர் இணைந்து இந்த போலி ஆவணங்களை தயாரித்தார்கள். அமலாக்கத்துறை இதற்கு முழுமையாக உடன்பட்டு நின்றது.

அமலாக்கத்துறை இயக்குனராக இருந்த ஏ.பி.நந்தே அப்ரூவராக மாறி அமலாக்கத் துறையின் உதவியோடு தான் இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன என்பதை ஒப்புக் கொண்டார். அவர் அப்ரூவராக மாறியதற்குப் பிறகு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தன்னைப் பற்றிய குற்றசாட்டிற்கு தன்னையே சிபிஐ விசாரணைக்கு உட்படுத்திய ஒரு மாபெரும் தலைவர் தான் விபி.சிங். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

மண்டல் பரிந்துரைகளை அமுலாக்கி இன்றுவரை ஒன்றிய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடம் பெறுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு வாய்ப்புக் கதவை திறந்து விட்ட ஒருவர் தான் விபி.சிங். 11 மாதங்கள் தான் அவருடைய ஆட்சி நீடித்தது. நேர்மைக்கும் ஊழலற்ற ஆட்சிக்கும் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். ஆனால் நாட்டில் ஊழல் பெருகி விட்டது, அரசியலில் நேர்மை இல்லை என்று வாய்கிழிய பேசுகிறவர்கள், விபி.சிங்கை பாராட்ட மனம் வருவதில்லை. காரணம் அவர் சனாதனத்தை எதிர்த்தார். சமூக நீதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இன்று வரை விபி.சிங் அவர்களுக்கு ஒரு தபால் தலை கூட எந்த ஒரு ஒன்றிய அரசும் வெளியிடவில்லை. அவரது சொந்த ஊரான அலகாபாத்தில் ஒரு வீதிக்கு கூட அவரது பெயர் சூட்டப்படவில்லை. எந்த ஒரு அரசு அலுவலக கட்டிடத்துக்கும் அவரது பெயர் சூட்டப்படவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் தமிழ்நாடு நன்றியுள்ள மாநிலம் என்று காட்டுகின்ற வகையில் சென்னையில் விபி.சிங் அவர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற ஒரு மகத்தான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கடற்கரை சாலையில் இந்த சிலை நிறுவப்படவிருக்கிறது.

அனைத்து அதிகார மட்டத்திலும் கோலோச்சுபவர்கள் கைகோர்த்துக்கொண்டால் சாமானியன் முதல் பிரதமர் வரை என்ன வேண்டுமானாலும் இந்தியாவில் செய்ய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் வி.பி.சிங். தற்போது ஜிஎஸ்டி வரி விவகாரங்களையும் அமலாக்கத்துறை விசாரிக்க ஒப்புதல் வழங்கப்படுமென்ற மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு சாமானிய வணிகர்கள், வர்த்தகர்கள், தொழில்துறையினர் கூட அரசுக்கு எதிராக மூச்சு விடமுடியாத நிலைக்கு தள்ளப்படுவர் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியா ஜனநாயகத் தன்மையிலிருந்து வெகுதூரம் விலகிச்சென்றுகொண்டிருக்கிறது என்பது விளங்கிக்கொள்ள முடிகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved