🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடிக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் எனும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வழங்கினார்.

பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, நேற்று நடைபெற்ற அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றிருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். இதையடுத்து, அதிபர் இம்மானுவேல் மேக்ரனை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இம்மானுவேல் மேக்ரன், தங்கள் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதை வழங்கி கவுரவித்தார். இந்த விருது 1802 ஆம் ஆண்டு, நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்டது. இந்த விருது குறிப்பாக பிரான்ஸ் நாட்டவர்களுக்கானது என்ற போதிலும், பிரான்ஸ்-ன் இலட்சியங்களுக்கு உதவும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்கு முன் இந்த விருதை, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்தின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜேர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

பிரான்ஸ் தேசிய தினம் என்பது என்ன?

பிரான்சில் பல நூற்றாண்டுகாலமாக நீடித்து வந்த மன்னராட்சி முறைக்கு முடிவு கட்டும் விதமாக நடந்ததுதான் பிரெஞ்சு புரட்சி. உலகில் மன்னராட்சி முறைகளுக்கு எதிராக பெரும்பாலான புரட்சிகளுக்கு பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் உண்டு. கம்யூனிசம் பேசிய ரஷ்யாவிலும் சீனாவிலும் கூட பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் உண்டு. இந்த பிரெஞ்சு புரட்சியுடன் பிரான்ஸில் மன்னராட்சி முறை, கிறித்துவ திருச்சபைகளின் அதிகாரம் அத்தனையும் மண்ணோடு மண்ணாகிப் போயின.

பிரான்ஸ் மன்னர், திருச்சபைகளின் அதிகாரச் சின்னமாக இருந்தது பாஸ்டில் சிறையில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்குதான். இந்த ஆயுதக் கிடங்கைதான் பிரெஞ்சு புரட்சியாளர்கள் இலக்கு வைத்தனர். 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி இந்த பாஸ்டில் சிறையை தகர்த்து புரட்சியாளர்கள் தங்கள் வசமாக்கினர். இதுதான் பிரெஞ்சு புரட்சியின் உன்னதமாக கருதப்படுகிறது.

இதுவே பிரான்ஸில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலருவதற்கு அடித்தளமாக இருந்தது. ஆகையால் இந்த நாளை தங்களது நாட்டின் 'தேசிய தினமாக' கொண்டாடி வருகின்றனர் பிரான்ஸ் நாட்டு மக்கள்.

பிரான்ஸ் நாட்டின் மதிப்பு மிக்க விருது பெற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved