🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பெண்களை நிர்வாணமாக இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் - மணிப்பூரில் நடந்த பதற வைக்கும் கொடூரம்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் பிரேன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்த்தி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக பழங்குடியினர் பட்டியலில் மெய்த்தி மக்களை சேர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சியைக் கைப்பற்றியது. மெய்த்தி மக்களின் இக்கோரிக்கைக்கு ஏற்கனவே பழங்குடி பட்டியலில் உள்ள குக்கி இனத்தவர் கடும் எதிப்பு தெரிவித்து வருகின்றனர். இரு சமூகங்களுக்கிடையேயான இப்பிரச்சினையை அரசியல் தளத்தில் தீர்வுகான முயற்சிக்காத பாஜக அரசு நீதிமன்ற உத்தரவின் மூலம் நிறைவேற்ற முயற்சி எடுத்தது. மெய்த்தி இன மக்களின் வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மெய்த்தி மக்களின் கோரிக்கையை மத்திய,மாநில அரசுகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இடஒதுக்கீடு வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்பதை தெரிந்தும் தமிழகத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழாமலில்லை.. 

நீதிமன்ற உத்தரவு தங்களின் உரிமைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்த குக்கி மக்கள் மிகப்பெரிய பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அப்பேரணியின் போது இருசமூகங்களுக்கிடையே பற்றிக்கொண்ட  வன்முறை நெருப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகக் கொழுந்துவிட்டு எறிந்து மணிப்பூர் மாநிலத்தையே கலவர பூமியாக மாற்றியுள்ளது. இப்பிரச்சினை குறித்து நாட்டின் பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக மணிப்பூருக்கான தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருந்த படியால் அங்கு நடக்கும் மோதல்கள், வன்முறைகள் குறித்து உண்மை நிலை வெளியே தெரியாமல் இருந்துவந்தது. இதற்கிடையே மீண்டும் தகவல் தொடர்பு சேவை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கொடூர நிகழ்வு ஒன்றின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கும்பல் இரண்டு பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் துயர சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்வினை செய்யும் பயனர்கள் கடும் கண்டனங்களையும் உடனடி நடவடிக்கைக்கான கோரிக்கையையும் முன் வைத்து வருகின்றனர்.

ஆடையின்றி பொதுவெளியில் பல ஆண்களால் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என்றும் அந்தப் பெண்கள் இருவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், ஒருவர் டெல்லியைச் சேர்ந்த பெண் என்றும் அவருக்கும் வயது 40 என்றும் தெரிய வந்துள்ளது. மனம் பதைக்க வைக்கும் இந்த கொடூர சம்பவம் மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் மே 4 அன்று நடந்தது என பழங்குடித் தலைவர்கள் மன்றம் (ITLF) சொல்கிறது.

மனிதத்தன்மையற்ற செயலால் கொடூரமாகக் கொல்லபட்ட இரண்டு பெண்களும் குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் ஒருவரை குற்றவாளிகளின் கும்பல் கொலை செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தப் பெண்கள் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. காங்போக்பியில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் வேறொரு மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

வெட்கக்கேடான இந்த செயல் பற்றி பழங்குடித் தலைவர்கள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மே 4 அன்று காங்போக்பி மாவட்டத்தில் நடந்த இந்த கேவலமான நிகழ்வு, ஆதரவற்ற பெண்களை ஆண்கள் தொடர்ந்து துன்புறுத்துவதைக் காட்டுகிறது. அந்தப் பெண்கள் அவர்களிடம் தங்களை விட்டுவிடுமாறு அழுது மன்றாடுகிறார்கள்" என்று கூறுகிறது.

நாட்டையே தலைகுனிய வைக்கும் இந்த இழிவான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சிகள், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குக்கேட்டு தெருத்தெருவாக சுற்றிக்கொண்டிருந்ததாக காட்டமாக விமர்சித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved