🔴 LIVE | முப்பெரும் விழா 2023


30 ஆண்டுகளுக்குப்பிறகு தயாராகும் மாஸ்டர் பிளான்!

கோவை மாநகராட்சி உட்பட 92 உள்ளாட்சி அமைப்புகளுக்கான ‘கோவை மாஸ்டர் பிளான்’ இறுதி அறிக்கை தயாரிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது.

நகரங்களில் பெருகி வரும் மக்கள் தொகை, பசுமைப் பரப்பு குறைதல், வெப்பமயமாதல், நகர விரிவாக்கம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு திட்டமிடப்பட்ட நகரை உருவாக்கும் வகையில் ‘முழுமைத் திட்டம்’ எனப்படும் ‘மாஸ்டர் பிளான்’ வடிவமைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 1994-ம் ஆண்டிலிருந்து மாஸ்டர் பிளான் பயன்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கோவை மாஸ்டர் பிளான் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படவில்லை. கடந்த 2006-11-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அது முழுமை பெறவில்லை.

இச்சூழலில், நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கோவை மாஸ்டர் பிளான் திட்டத்தை புதுப்பித்து வெளியிட தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரால் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு மாஸ்டர் பிளான் திட்டத்தை புதுப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

கோவை மாவட்ட நகர ஊரமைப்புத் துறையின் சார்பில், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையினரின் ஒத்துழைப்புடன் 2041-ம் ஆண்டு மக்கள் தொகையை மையப்படுத்தி இறுதிக்கட்ட மாஸ்டர் பிளான் அறிக்கை தயாரிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது. மாஸ்டர் பிளான் வரைவுத் திட்ட அறிக்கை கடந்தாண்டு டிசம்பரில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோவையில் குடியேறுகின்றனர். கோவை நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாஸ்டர் பிளான் இறுதி திட்ட அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும்’’ என்றனர்.

நகர ஊரமைப்புத் துறை இணை இயக்குநர் சிவ குரு கூறும்போது, ‘‘மாஸ்டர் பிளானில், கோவை மாநகராட்சி, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூர், மதுக்கரை ஆகிய 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 1531.53 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் வரைவு அறிக்கை மற்றும் திட்ட வரைபடம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இறுதிகட்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளை முடித்து, மாஸ்டர் பிளான் திட்ட இறுதி அறிக்கையை அரசிடம் மீண்டும் சமர்ப்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இறுதி மாஸ்டர் பிளான் வெளியாகும்,’’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறும்போது, ‘‘மாஸ்டர் பிளானில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கான சாலை வசதி உள்ளிட்ட இரு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்தில் இப்பணி முடிக்கப்படும். அதைத் தொடர்ந்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்’’என்றார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved