🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்த ஜூலை மாத வெயில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆண்டு வரலாற்றில் முதல்முறை!

உலகில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதம் உலகில் பதிவான மிகவும் வெப்பமான காலமாக மாறி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பருவநிலை மாற்றம் உலகின் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் என்பது குறிப்பிட்ட நாடுகளை மட்டும் பாதிக்காமல் உலகெங்கும் பல இடங்களை மிக மோசமாகப் பாதிக்கிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் மிகுந்த ஒன்றாக மாறி வருகிறது. இதற்கிடையே இந்த ஜூலை மாதம் வெப்பம் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐநா அமைப்பின் உலக வானிலை அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றம் ஆகியவை இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த மாதம் (ஜூலை) வெப்பம் புதிய உச்சத்தை அடைய வாய்ப்புகள் மிக அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இது தொடர்பாக நியூயார்க்கில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், "இதைத் தெரிந்து கொள்ள நாம் இந்த மாதம் இறுதி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்து வரும் நாட்களிலும் பெரியளவில் வெப்பத்தில் மாற்றம் இருக்காது. அதன்படி பார்த்தால்.. இதுவரை பதிவானதிலேயே ஜூலை மாதம் தான் அதீத வெப்பமானதாக இருக்கும்.

காலநிலை மாற்றம் வரும் காலத்தில் எப்போது ஏற்படும் என்று இல்லை. அது ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.. இது நிச்சயம் பயங்கரமானது தான். மேலும் இது வெறும் ஆரம்பம் தான்.. வரும் காலத்தில் நிலைமை மேலும் மோசமானதாக இருக்கும்.. உலகம் இப்போது மிக மோசமான நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஜூலை மாதம் உலகின் பல பகுதிகளிலும் வெப்பம் உச்சம் தொட்டுள்ளது. கீரிஸ் நாட்டின் தீவான ரோட்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ, அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட வெப்ப அலை எனச் சுற்றிலும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக வடமேற்கு சீனாவில் வெப்பம் 52.2 டிகிரி செல்சியஸ் (126 F) வரை சென்றது. அந்தளவுக்கு வெப்பம் மிக மோசமானதாகவே இருந்தது.

அதேநேரம் ஜூலை மாதத்திற்கான தரவுகள் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே வெப்பம் எந்தளவுக்கு அதிகமாக இருந்தது என்பது தெரிய வரும். இதற்கு முன்பு கடந்த 2019 ஜூலை மாதம் பதிவான வெப்பம் தான் அதிகபட்சமாக இருந்த நிலையில், இப்போது அதையும் முறியடித்து அதைக் காட்டிலும் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜூலை மாதம் முதல் மூன்று வாரங்கள் இதுவரை பதிவானதிலேயே வெப்பமான ஆண்டுகள் என்று உலக வானிலை அமைப்பு உறுதி செய்துள்ளது.

வழக்கமாக ஜூலை மாதம் உலகின் சராசரி வெப்பம் 16 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால், இந்தாண்டு அது 17 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இது குறைவாக இருப்பதைப் போலத் தோன்றலாம். ஆனால், தென் துருவத்தில் நிலவும் பனிப்பாறைகளில் இருக்கும் வெப்பத்தைச் சேர்ந்த இந்த வெப்பம் கணக்கிடப்படுகிறது. அப்படிப் பார்க்கும் போது இந்த வெப்பம் அதிகமாகவே இருக்கிறது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நமது கிரகத்தில் இதுபோன்ற வெப்பமான சூழலைப் பார்க்க நாம் குறைந்தது பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டி இருக்கும். பனி யுகத்தில் வெப்பம் குறைந்த நிலையில், அதன் பிறகு இந்தளவுக்கு வெப்பம் அதிகரிப்பது இதுவே முதல்முறை.. கடந்த 120,000 ஆண்டுகளில் பூமி இவ்வளவு சூடாக இருந்ததில்லை" என்று அவர் தெரிவித்தார்.

இப்போது எல் நினோ ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகள் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அதன்படி பார்த்தால் 2023 அல்லது 2024 இதுவரை பதிவானதில் மிகவும் வெப்பமான ஒரு ஆண்டாக இருக்கும். இதற்கு முன்பு கடந்த 2016ஆம் ஆண்டிலேயே அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காலநிலை மாற்றம் குறித்து லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில், "இந்த வெப்பநிலையானது ஏதோ ஒரு மைல்கல் என நினைக்க வேண்டாம். இது நாம் கொண்டாடும் எண் அல்ல. உண்மையில் இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி" என்றார். இந்த உச்சபட்ச வெப்பநிலையானது நேரடியாக எல் நினோ தாக்கத்தின் விளைவு என்று சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூறுகின்றனர். 

பெர்க்லி எர்த் மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜெக் ஹாஸ்ஃபாதர் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, உலகளவில் பசுமைக்குடில் வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் அதிகரிப்பதுடன் எல் நினோ தாக்கமும் இணைந்துள்ளதால் இந்த ஆண்டு பதிவாகக் கூடிய உச்சபட்ச வெப்பநிலைகளின் தொடக்கம்தான் ஜூலை 3 பதிவு என்று கூறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved