🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வல்லரசு அமெரிக்காவிற்கு 60 ஆண்டுகளாக அடிபணியமறுக்கும் குட்டிநாடு கியூபா!

நெருக்கடிகளை கியூபா 60 ஆண்டுகளுக்கும் மேலாக எப்படி சமாளிக்கிறது என்பதே ஒரு சுவையான திரில்லர் தான்!

தன் காலுக்கடியில் இத்துனூண்டாக இருக்கும் கியூபாவை, ‘ஒரே மிதியில் நசுக்கி அழிக்க முடியவில்லையே…’ என்ற ஆதங்கம் அமெரிக்க பேரரசிற்கு ஒரு நிறைவேறாத கனவாகத் தொடர்கிறது. எனினும், கியூபாவில் மனித உரிமை மீறல், விபச்சாரம், வறுமை..போன்ற பல கட்டுக் கதைகளையும், வதந்திகளையும் அமெரிக்க ஆதரவாளர்கள் பரப்பியபடி தான் உள்ளனர். ஆனால், உண்மை என்ன?

கொரானா காலத்தில் ஒவ்வொரு நாடும் தன்னை தற்காத்துக் கொள்வதற்கே திணறிய போது கியூபாவோ, தனது  மருத்துவர்களையும், மருந்துகளையும் மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பி ஆரோக்கியத்தின் தூதனாக விளங்கியது. கியூபா நாட்டினால் தாக்கம் பெற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகள் இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.  இந்நிலையில் ஜுலை 26 அன்று உலகம் முழுவதும் கியூபாவிற்கு ஆதரவு காட்டும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்த வகையில் அதே நாளில் சென்னையில், ஏஐடியுசி தொழிற்சங்கம்  நடத்திய நிகழ்ச்சியில், ஏஐடியுசியின் சர்வதேச விவாகாரங்களுக்கு பொறுப்பாளரான தோழர் வகிதா கியூபாவிற்கு குறித்து உரையாற்றியுள்ளார். அதன் விவரம், 

”மக்களை கொடுமைக்கு ஆளாக்கிய கியூபாவின் சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்து, 1953 ஆண்டு, ஜூலை 26 ம் நாள், வெறும் 124 பேருடன் பிடல் காஸ்ட்ரோ, மோன்கடா பேரக்ஸ் என்ற இராணுவத் தளத்தை  தாக்கினார். மிகத் துணிச்சலான அந்த யுத்தம் தோல்வியில் முடிவடைந்தது. ஆனால், பிறகு நடந்த தொடர் போராட்டங்களுக்கு அதுவே தொடக்கமாகவும், எழுச்சியூட்டும் விதமாகவும் அமைந்தது. எனவே, இந்த நாளானது கியூபா வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒரு சிறியநாடான கியூபா கடைபிடிக்கும் கொள்கைகளையும், அதன் உறுதிபாடையும் பார்த்து அமெரிக்கா அஞ்சுகிறது. எனவே, கியூபா விடுதலை அடைந்த ஆண்டான 1959 முதலே, தொடர்ந்து அதற்கு நெருக்கடிகளை எத்தனையெத்தனையோ கொடுத்து வருகிறது.

கியூபாவில் சர்க்கரை விளைச்சல் அதிகம். அது தான் அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கே ஆதாரமாகத் திகழ்ந்தது. பல நாடுகளுக்கு அது சக்கரை விநியோகம் செய்ததால் ‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்ற புகழும் அதற்குண்டு. இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட அமெரிக்கா அதன் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே, கியூபாவில் இருந்து சர்க்கரை இறக்குமதிக்கு தடை விதித்தது.

ஆனால், இந்த நெருக்கடியான சூழலில் கியூபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 50 இலட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு அப்போது இருந்த சோவியத் ஒன்றியம் கியூபாவிற்கு உத்திரவாதம் அளித்தது. சோவியத் ஒன்றியத்தில் இருந்து உணவு, நுகர்வு பொருட்கள், இயந்திரங்கள் போன்றவை ஆண்டிற்கு ஒரு இலட்சம் டாலர் அளவிற்கு கியூபாவிற்கு இறக்குமதி செய்தது.  சீனாவும், கியூபாவிடமிருந்து சர்க்கரையை கொள்முதல் செய்தது. விமானங்கள் வாங்குவதற்காக இங்கிலாந்து போட்ட ஒப்பந்தத்தை, அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது.


கியூபப் புரட்சி நடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் கல்வி அறிவை விருத்தி செய்ய 10,000 பள்ளிகளை பிடல் காஸ்ட்ரோ நிறுவினார். கியூபாவில் மருத்துவமும், கல்வியும் இலவசம். கியூபாவின் தொழில்நுட்ப பணியாளர்களில் 13 சதம் பேர் மருத்துவர்கள். உலகில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்பது அளவீடாக உள்ளது. ஆனால், கியூபாவிலோ ஆயிரம் பேருக்கு ஒன்பது மருத்துவர்கள் உள்ளனர்.

கியூபாவில் ஆரம்ப பள்ளிகளில் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் உள்ளனர். அதே போல உயர்நிலை பள்ளியில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். பிறந்த அனைத்து குழந்தைகளுக்குமே கல்வி கற்பதை உறுதிபடுத்திய நாடாக கியூபா உள்ளது.

எந்த இராணுவத் தளத்தை முதலில் பிடல் காஸ்ட்ரோ தாக்கினோரோ, அதே இடத்தில் பள்ளிக்கூடத்தை நிறுவினார். அந்த இராணுவத் தளத்தை, தானே புல்டோசரை கொண்டு ஓட்டி இடித்தார். ஒரு நாட்டிற்கு எது அவசியம் என்கிற கேள்விக்கு இது பதிலாகிறது. இது போன்ற சம்பவங்களால் தான் அமெரிக்கா எரிச்சலுற்று, பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல 636 முறை முயற்சி செய்தது.


இந்தியாவில் குறைந்த பட்ச கூலி என்ற ஒன்றுள்ளது. ஆனால், பல இடங்களில் அது அமலாவதில்லை. ஆனால், அங்கு ‘நியாயமான சம்பளம்’ (Fair Wages)  என்பது அவர்கள் சட்டத்தில் உள்ளதோடு நடைமுறையில் உள்ளது. அவர்களுக்கு மாதத்திற்கு 4,000 பெசோ (கியூபா கரன்சி) அளவிற்கு குறையாத ஊதியம் நிச்சயமாகக் கிடைக்கிறது. அங்கு பணவீக்கம் இல்லை. வருடத்திற்கு ஒரு முறை  கட்டாயமாக விடுப்பு எடுக்க வேண்டும். கியூபா மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகம். ஒரு மனிதன் வாங்கும் திறனை கணக்கீடு செய்ய ‘ GD Coefficient’ என்ற முறையைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பயன்படுத்தும் தனிநபர் வருமானம், GDP என்ற அளவீடுகளை விட அது மேன்மையானது.

இப்படிப்பட்ட கியூபாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.  ஐநா அவையில் நடந்த வாக்கெடுப்பில், கியூபாவிற்கு ஆதரவாக, பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்று உலகில் உள்ள 185 நாடுகள் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவும், அதன் கூட்டாளியான இஸ்ரேல் மட்டும் தான் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த வாக்கெடுப்பில் கியூபாவிற்கு எதிராக வாக்களித்தன. ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பெரும்பான்மை நாடுகள் கியூபாவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையிலும், கியூபா மீதான பொருளாதார தடையை நீக்கச்செய்ய ஐ.நா சபையால் முடியவில்லை. இதனால் பலநாடுகளுடன் கியூபாவால் வணிகம் செய்ய முடிவதில்லை. 

எனவே தான், உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகள் கியூபாவிற்கு  ஆதரவாக இயக்கங்களை நடத்தி வருகின்றன.157 நாடுகளில் இருக்கும், உலக தொழிற்சங்க  சம்மேளனம் ஜூலை 23 ம் நாள் கியூபாவிற்கு ஆதரவான இயக்கங்களை நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் இப்போது நாம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

பொருளாதாரத்தடை ஒரு புறம் என்றால், கியூபாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன போன்ற பல அவதூறுகளை ஊடகங்கள் பரப்பி வருகின்றன. ரொட்டிக்கு  கியூப மக்கள் வரிசையில் நிற்பதாக, யூ டியூபில் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார். இதற்கு அங்கு வாய்பே இல்லை. கியூபப் புரட்சியானது அங்கிருக்கும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. அவர்களது அரசியலமைப்பின் முதல் வரியே, ‘ ஒரு மனிதனை கண்ணியமாக நடத்த நான் விரும்புகிறேன்’  என்று தொடங்குகிறது. அங்குள்ள ஒவ்வோரு குடிமகனும் , ஏதேனும் ஒரு வெகுமக்கள் அமைப்பில் இருக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்பு தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ‘முன் திருமண ஒப்பந்தம்’ செய்து கொள்கிறார்கள். சிறுபிள்ளைகள் போல, இவைபற்றியெல்லாம் அவதூறான செய்திகள் பரப்பப்படுகின்றன. உலகில் உள்ள 57 நாடுகளுக்கு கொரானா காலத்தில் சேகுவேராவின் மகள்,  அலெய்டா குவேராவின் தலைமையில் மருத்துவக்குழு சென்றது. கியூபாவில்தான் நூறுசதம் பாதுகாப்பான கொரானா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிகப்பட்டன.

மேதினப் பேரணிகள் அங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்கிறார்கள். அவர்கள், அங்குள்ள மக்கள் இல்லங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். இப்படி வெகுமக்களும் புரட்சியை வளர்த்தெடுக்கிறார்கள்.

அவர்கள் ஆட்சியைப் பிடித்தபோது (1959) பெரும்பாலான நிலங்கள்  வெளிநாட்டினரிடம்  இருந்தன. சர்க்கரை ஆலைகள் அமெரிக்கா வசம் இருந்தன. இவைகளெல்லாம் தேச உடமையாக்கப்பட்டன. அவைகளுக்கு இருபது வருடத்திற்கு 4.5 சத வட்டியைத் தரும் கடன் பத்திரங்களை அரசு  வழங்கியது.  ஒரு வருடத்தில் இரண்டு இலட்சம் வீடுகள் கட்டப்பட்டன. அங்கிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க மறுத்தன. பின்னர் அவை தேச உடைமையாக்கப்பட்டன.” இவ்வாறு குட்டி தேசமான கியூபா குறித்து தோழர் வகிதா பேசினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved