🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அனல் பறந்த ராகுல்காந்தியின் பேச்சு - 21 பெண் எம்.பி க்கள் ராகுல் மீது சபாநாயகரிடம் புகார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றுவருகிறது. அவதூறு வழக்கில் பதவிபறிப்பிற்கு ஆளானபின் 4 மாதகாலம் கழித்து இன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். ஆளும்கட்சி எம்பிக்களின் குறுக்கீடுகளுக்கு மத்தியில் பேசிய ராகுல்காந்தி மோடி அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கிடையே, மக்களவையில் பெண் எம்.பி.க்களை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டுள்ளதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய அமைச்சரும், பா.ஜ.க. எம்.பி..யுமான ஷோபா கரந்த்லஜே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பெண் அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசிக் கொண்டிருந்தபோது ராகுலின் முறையற்ற செயலில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக 21 பா.ஜ.க. பெண் எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கி, ராகுலுக்கு எதிரான புகார் மனுவை ஷோபா தாக்கல் செய்துள்ளார்.

அவையில் ராகுல் நடந்து கொண்ட விதம் கண்ணியக்குறைவானது மட்டுமல்ல, அநாகரிகமானது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

மீண்டும் எம்.பி.  ஆன பின் ராகுல் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அவர் பா.ஜ.க. எம்.பி.க்களை நோக்கி “பிளையிங் கிஸ்” கொடுத்தார். ஆனால், அந்த நேரத்தில் அது கேமராவில் பதிவாகவில்லை. ஸ்மிருதி இரானி அவையில் பேசிக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் தலைவர் வெளிநடப்புச் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது.

இதுபோன்ற அநாகரிக செயலை நாங்கள் நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை. அவர் அடிக்கடி கண் சிமிட்டுகிறார். அல்லது கண்ணியக்குறைவாக நடந்து கொள்கிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் கடிதம் கொடுத்துள்ளோம். கேமராவில் பதிவான சம்பவத்தை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம் என்றார் ஷோபா கரந்தலஜே.

ஆனால், இந்த காட்சியை நேரில்பார்த்தவர்கள் கூறுகையில், ராகுல் காந்தி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான உரையை முடித்துவிட்டு அவையிலிருந்து வெளியேற முற்பட்டார். அப்போது அவர் கையிலிருந்து பைஃல்கள் கீழே விழுந்தன. அவர் அதை எடுப்பதற்காக குனிந்தார். அப்போது பா.ஜ.க. எம்.பி.க்கள் அவரது செயலைக்கண்டு சிரித்தனர். ஆனால், ராகுல்காந்தி “பிளையிங் கிஸ்” கொடுத்ததாக அவர் சென்ற பிறகு பா.ஜ.க. எம்.பி.க்கள் தெரிவித்தனர் என்று கூறினர்.

பெண்களை வெறுப்பவர்கள்தான் இதுபோன்ற பிளையிங் கிஸ் கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் ராகுல் நடந்து கொண்டது அநாகரிகமான செயல் என்று பெண் அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். பா.ஜ.க.வின் அரசியல் மணிப்பூரில் பாரதமாதாவை கொன்றுவிட்டது என்று கடுமையாக தாக்கிப் பேசினார். 

இதற்கிடையே, இன்று ராகுல்காந்தி மக்களவையில் பேசும்போது கேமிராக்கள் ராகுல்காந்தியை படம் பிடிக்காமல் சபாநாயகர் முகத்தையே காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ராகுல்காந்தி பேசும்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved