🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்திராகாந்தி கொண்டுவந்த மன்னர் மானிய ஒழிப்பு சட்டம்!

மன்னர் மானியம் (Privy Purse in India) என்பது இந்திய விடுதலைக்கு முன்பு பிரித்தானிவின் இந்தியப் பேரரசின் கீழ், சுதேச சமஸ்தான மன்னர்களுக்கும், அவர்தம் வாரிசுகளுக்கும், இந்தியப் பிரிவினைக்குப்பின் இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்ட உதவித் தொகையாகும்.

இந்திய விடுதலைக்கு முன்னர் 1947இல் 560 சுதேச சமஸ்தானங்கள் ஆங்கிலேயே அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திக் கொண்டு, தத்தம் பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்தன. அவற்றில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானமும் ஒன்றாகும். 15 ஆகஸ்டு 1947இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் அனைத்து சுதேச சமஸ்தானங்களின் ஆட்சிப் பகுதிகள் இந்திய அரசின் கீழ் இணைந்தன.

தங்கள் ஆளும் பகுதியை இந்தியாவுடன் இணைத்தமைக்காக 565 சுதேச மன்னர்களுக்கு மானியத் தொகையாக இந்திய அரசு ஆண்டுதோறும் ரூபாய் 5000 முதல் இரண்டு இலட்சம் வரை வழங்கப்பட்டது. பெரிய சுதேச மன்னர்களாக ஹைதராபாத் நிஜாம், மைசூர், திருவாங்கூர், பரோடா, ஜெய்பூர் மற்றும் பாட்டியால மன்னர்களுக்கு பல இலட்சம் ரூபாய் வரை மன்னர் மானியம் வழங்கப்பட்டது.  

இந்திரா காந்தி அரசு, மன்னர் மானிய ஒழிப்பில் தீவிரம் காட்டியது. அப்போது அதிகபட்ச ஆண்டு மானியமாக வரிவிலக்கோடு ரூ. 26,00,000 பெற்றவர் மைசூர் மகாராஜா ஜெய சாமராஜேந்திர உடையார். குறைந்தபட்சமாக சௌராஷ்டிராவிலிருந்த குட்டி சமஸ்தானமான கட்டோடியாவின் ராஜா ரூ. 192 பெற்றுக் கொண்டிருந்தார். எதற்கு அநாவசியச் செலவு என்று இந்திரா, 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மன்னர் மானிய ஒழிப்பு சட்ட மசோதா அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த போது கீழவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், மேலவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


‘மானியத்தை மட்டும் ஒழித்தால் போதாது. மன்னர்களின் பின் ஒட்டிக்கொண்டிருக்கும் வெற்றுப் பட்டங்களையும் ஒழிக்கவேண்டும் என்று நினைத்த இந்திரா, அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முடிவுசெய்தார். ஹைதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரி, இந்திராவின் விருப்பத்துக்கேற்ப அரசாணையில் கையொப்பமிட்டார். மன்னர்கள் தரப்பில் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். தீர்ப்பு மன்னர்களுக்குச் சாதகமாக அமைந்தது. "இந்தச் சட்டம் செல்லாது" என்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு 1971 இல் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார் இந்திரா. பங்களாதேஷ் போரில் கிடைத்த வெற்றியினால் தேர்தலில் பூரண வெற்றிபெற்று மீண்டும் பிரதமரானார் இந்திரா. 

மீண்டும் இந்திய அரசியலமைப்பின் இருபத்தாறாவது சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்தார் இந்திரா. அது மன்னர் மானிய ஒழிப்பு தீர்மானம், இரு அவைகளிலும் நிறைவேறியது. 1971, டிசம்பரில் அது சட்டமாகியது. மன்னர் மானியமும், அவர்களின் பட்டங்களும் பறிக்கப்பட்டன. ‘நாங்கள் மன்னர்களில் ஆடம்பரத்தைப் பறித்துவிட்டோம். ஆனால் அவர்கள் மனிதர்களாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்’ என்று இந்திரா சொன்னார். ‘சுதந்தரத்தின்போது இந்தியாவைக் கட்டமைக்கும் சக சிற்பிகள் என்று சொன்னீர்கள். இப்போது ஏதுமில்லாதவர்களாக்கி விட்டீர்கள்’  என்றார் பரோடா மகாராஜா பஃதேசிங். ‘எங்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி விட்டீர்கள்’ என்று கதறினார் ஜோத்பூர் மகாராஜா கஜ்சிங்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved